ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

சித்தேரிமலை


 சித்தேரிமலை

சித்தேரிமலையின் அழகியத் தோற்றம் 
 மிழ்நாட்டின் கிழக்குத்தொடர்ச்சி மலைகளுள் ஒன்றான சித்தேரிமலை தருமபுரி மாவட்டத்தின் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ளது. மாவட்டத்து தலைநகரமான தருமபுரியிலிருந்து சுமார் 65 கி.மீ. தொலைவிலும் அரூரிலிருந்து 25 கி.மீ.தொலைவிலும் உள்ளது. 
  இதன் பரப்பளவு 654.52 சதுர கி.மீ. இது புவியியல் அமைப்பில் 78°15’−78°45 கிழக்கு தீர்க்கரேகையிலும்  11°44’−12°08 வடக்கு அட்சரேகையிலும் அமைந்துள்ளது. இது 1097.3 மீ.(3600 அடி0 உயரம் கொண்டது.  இதன் தட்பவெப்ப  குளிர்காலத்தில் 19° சென்டிகிரேடும்  கோடைக்காலத்தில் 40° சென்டிகிரேடுமாக் உள்ளது. இம்மலையில் சராசரியாக வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவகாலங்களில் பெய்யும் மழையளவு 600 மி.மீ. முதல் 900 மி.மீ. என்று வேறுபடுகிறது.
  சித்தேரி மலை 240 மீ. முதல் 1266 மீ.வரை மேடும்பள்ளமுமாக உள்ளது. ஏனைய கிழக்குத்தொடர்ச்சி மலைகளான ஜவ்வாது மலை, கல்வராயன்மலை, கொல்லிமலை போல அல்லாமல் சித்தேரி மலை வளங்குன்றிய மலையாகவே உள்ளது.
   இம்மலையில் காடுகள் பலவாறானத் தன்மை கொண்டுள்ளது. பசுமை மாறா காடுகள், பாதி பசுமை மாறா காடுகள், வெப்பமண்டல வறண்ட இலையுதிர்காடு, ஆற்றங்கரையோரக் காடுகள், வறண்ட இலையுதிர் காடுகள், தென்பகுதி வறண்ட முட்புதர்க்காடுகள் என ஆறு வகையாக உள்ளது. பகுதிகள் குடியிருப்புகளாகவும்,  ,மூங்கில் காடுகளாகவும், தரிசு நிலங்களாகவும் உள்ளது. சித்தேரி மலையின் வரைவிளிம்புகள் (Ridges) மடிப்புமடிப்பாகவும் பல வளைந்த பள்ளத்தாக்குகள் வடகிழக்காகவும் தென்மேற்க்காகவும் உள்ளது.  பள்ளத்தாக்குகளில் இருந்து மழைக்காலங்களில் கள்ளார், வரட்டாறு முதலான ஆறுகளும் கம்பாலை, ஆனைமடுவு போன்ற கணவாய்களும் உள்ளது. 
  இந்த மலையில் 131 வகை மர இனங்களும்,81 வகை சிறுகொடி  இனங்களும், 46 வகை முறுக்கு கொடி இனங்களும், 33 வகை படர்கொடி இனங்களும் 121 வகை மூலிகை இனங்களும் உள்ளன. இவற்றுள் சுமார் 212  பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை. சுமார் 60 வகை தாவரங்கள் பல்நோக்குப் பலன் தருபவை. 24 வகை தவர்றங்கள் குறிப்பாக மூலிகைகள் உணவுக்காகப் பயன்படுத்தாத தக்கவை. 63 வகை தாவரங்கள் மூலிகைகளாகவும் சுமார் 14 வகை இனங்கள் உணவுக்காகவும் 16 இனங்கள் விறகு,  தீவனம்,மற்றும் மரபு பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தக் கூடியதாகவும் உள்ளன.
  காட்டுப்பன்றிகள், குறு முயல்கள், காட்டுஎருமைகள், கரடி, மான் முதலான வனவிலங்குகள் இம்மலையில் உள்ளன.
  இம்மலையில் காணப்படும் பாறைகளின் அமைப்பு கிரானைட் வகையை சார்ந்துள்ளது. மண் அமைப்பு பொதுவாக ஆழமற்றும் சிகப்பு சுண்ணாம்பு (Red-loam) தன்மையுடனும் மண்ணின் உற்பத்தி தன்மை மாறுபட்டும் காணப்படுகிறது.  ஒருசில இடங்களில் சரளைக் கற்களுடன் கலந்தும் காணப்படுகிறது. இம்மலையின் வனப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கருப்புவகை மண் அரிதாகக் காணப்படுகிறது. 
  2011 ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மலைகிராமங்களில் வாழ்ந்து வருவோர் சுமார் 10000 பேர். 
 சித்தேரி என்பதற்கு 'சிறிய ஏரி'யை உடையது என்பது பொருள். சித்தேரியை அடுத்து பேரேரி என்ற ஒரு சிறு கிராமமும் உள்ளது. இம்மலையிலுள்ள தாய்கிராமங்களில் முக்கியமானது சித்தேரியாகும். இதில் 37 சிறு கிராமங்கள் உள்ளன. சித்தேரியைத் தவிர சூரியக்கடை, மாங்கடை,  அம்மாபாளையம், குள்ளம்பட்டி, ததுக்கநல்லி ஆகிய மேலும் 5 தாய்கிராமங்கள் உள்ளன. 
 இங்குள்ள வீடுகள் பெரும்பாலும் சுனாங்குப்புல்லால் வேயப்பட்டவை. பெரும்பாலும் கிராமங்களில் 20-30 வீடுகளே உள்ளன. வீடுகள் வரிசைவரிசையாகவும் எதிர்எதிராகவும் மிக நேர்த்தியாக உள்ளன. 
சித்தேரிமலையில் ஒரு கிராமக் கோயில் 
    இங்குள்ள மக்கள் மலையாளிகள் எனும் வரையறுக்கப்பட்ட பழங்குடி இனத்தைச் 
சேர்ந்தவர்கள். இவர்கள் தங்களை மலையாளக் கவுண்டர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இவர்களது முக்கியத் தொழிலாக விவசாயமே உள்ளது.  வேட்டையாடுதல், தேன்  சேகரித்தல் இவர்களுக்குத் தெரிந்த தொழில். கால்நடை   வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். சமீபகாலமாக பட்டுப்புழு வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆடுமாடுகளை ஊர்ப்புறத்தே   உள்ள பட்டிகளில்  அடைத்தது வைக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர்  கேழ்வரகு, சோளம் முதலான சிறுதானிய பயிர்களை பயிரிடுகின்றனர். பாரம்பரியமான  கேழ்வரகு  ரகங்கள் இன்றும் இவர்களிடையே உள்ளது.  நெல், மஞ்சள், வாழை முதலானவைகளும் பயிரிடுகின்றனர்.