புதன், 26 டிசம்பர், 2018

கால பைரவர் கோயில், அதியமான்கோட்டை

கால பைரவர் கோயில் - மூலவர் 

கால பைரவர் கோயில் முகப்புத் தோற்றம் 

கால பைரவர் கோயில் 

கோயில் முன்புறம் 

கோயிலில் சிற்பங்கள் 




தருமபுரி நகர்பகுதியிலிருந்து சேலம் செல்லும் சாலயில் சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தட்சிணகாசி (தென்காசி) காலபைரவர் கோயில்.
சிவாலயங்களில் ஈசானிய மூலையில் நாய் வாகனத்துடன் காட்சி தரம் கால பைரவர் இங்கு தனிக் கோயிலில் மூலவராக இருக்கிறார். இவரது திருமேனியில் 27 நட்சத்திரங்களும் 12 இராசிகளும் உள்ளடக்கி வைத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது. எனவே, தோஷம் விலகவேண்டி அவரவர் ராசிக்கேற்ப, (மேஷ ராசிக்காரர்கள் இவரது தலையை பார்த்தும், ரிஷப ராசிக்காரர்கள் இவரது கழுத்தைப் பார்த்தும், மிதுன ராசிக்காரர்கள் தோல் புஜத்தைப் பார்த்தும், கடகராசிக்காரர்கள் மார்பை பார்த்தும், சிம்ம ராசிக்காரர்கள் வயிற்றுப் பகுதியை பார்த்தும், கன்னி ராசிக்காரர்கள் குறியைப் பார்த்தும், துலா ராசிக்காரர்கள் தொடையைப் பார்த்தும், விருச்சிக ராசிக்காரர்கள் முட்டிபகுதியை பார்த்தும் மகர ராசிக்காரர்கள் முட்டியின்  கீழ்ப்பகுதியைப் பார்த்தும், கும்ப ராசிக்காரர்கள் கணுக்காலைப் பார்த்தும், மீன ராசிக்காரர்கள் பாதத்தைப் பார்த்தும்) கும்பிட்டால் தோஷம் விலகும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் காசியில் கால பைரவருக்கென்று ஒரு தனிக்கோயில் உள்ளதாகவும் அதனை அடுத்து தென் இந்தியாவில் கால பைரவருக்கென்று அமைந்துள்ள தனிக்கோயில் இதுதான் என்றும் சொல்லப்படுகிறது. மொத்தமுள்ள 64 கால பைரவர்களுள் முதன்மையானவர் உன்மந்திர பைரவர். இவர்தான் இந்தக் கோயிலில் வீற்றிருக்கிறார்.
வரலாறு:
தகடூரை ஆண்ட அதியமான் வழிவந்த ஒருவர் எதிரி நாட்டரசர்களின் தொல்லைகளால் மிகவும் மன அமைதியின்றி இருந்ததாகவும், ஜோதிடர்களிடமும், அமைச்சரவையினரிடமும் இது குறித்துக் கேட்க, அவர்களது ஆலோசனைப்படி காலபைரவருக்குத் தனிக்கோயில் அமைத்து வழிபட அனைத்தும் சரியாகும் என்று அவர்கள் கூறியதன் அடிப்படையில் இந்த இடத்தில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு காலபைரவர் கோயில் கட்டப்பட்டது என்றும், இங்குள்ள காலபைரவர் சிலை, இவரது பிரதிநிதிகள் காசிக்குச் சென்று எடுத்து வந்ததாகவும், இந்தக் கோயிலில் காலபைரவரின் கருவறையின் அவருடைய சிலை மட்டும் தனியாக இருக்கக்கூடாது என்பதால், மேற்கூரையில் நவகிரகங்களின் வடிவங்களை சக்கரமாகவும் 12 இராசிகளையும் வடித்து வைத்துள்ளதாகவும், இங்குள்ள காலபைரவர் சிலையை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் விலகிவிடும் என்றும் நம்பப்படுகிறது.
காவல் தெய்வமான காலபைரவரின் கரங்களில் திரிசூலத்துடன் வாளும் கொண்டிருப்பதால் இவர் தம்மையும், தன் நாட்டையும் எதிரிநாட்டவர்களிடம் இருந்து காப்பார் என்றும் அரசன் நம்பி நாள்தோறும் வழிபட்டு வந்ததாகவும், அந்த அரசன் போருக்குச் செல்லுமுன் தன்னுடைய வாளை இங்கு வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்தபிறகே போருக்கு செல்வார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த காரணத்தினாலேயே இன்றளவும் மக்கள் தாங்கள் நினைத்த காரியங்கள் வெற்றியடையவும், எதிரிகளின் தொல்லைகள் அகலவும் இங்குள்ள காலபைரவரை திரிசூலத்துடன், வாளையும் வைத்து வணங்கி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
பூசைகள்:
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் ராகுகாலத்தில் பூசைகளும் மாதாந்திர தேய்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதியில் விநாயகர், லட்சுமிக்கு பூசைகளும், அஷ்ட பைரவ ஹோமம் செய்து சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படுகின்றன. மேலும் அன்றைய தினம் தீவினைகள் தீர ஹோம பூசைகளும் நடத்தப்படுகின்றன. இங்கு சாம்பல் பூசணியில் விளக்கேற்றி பூசை செய்தால், எதிரிகள் தொல்லைகள் விலகும் என்பது நம்பிக்கை. கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் இங்கு தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திறந்து வந்து காலபைரவரை தரிசித்து வழிபட்டுச் செல்கின்றனர்.  இங்கு தருமபுரி மக்கள் மட்டுமின்றி, கர்நாடகம், கேரளம், ஆந்திரம் முதலான மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து கால பைரவரை தரிசித்து வழிபாடு செலுத்தி இவரது அருள் பெற்றுச் செல்கின்றனர்.
இந்தக் கோயில், தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையின் கட்டுபாட்டில் உள்ளது.

சனி, 22 டிசம்பர், 2018

தருமபுரியில் பாரிவேட்டை

முயல் வேட்டை என்பது தென் தமிழகப் பகுதிகளில் பாரிவேட்டை என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பண்டிகைக்கால வீர விளையாட்டு ஆகும். நாட்டுப்புற தமிழகத்தில் பண்டைய காலங்களில் கிராமங்கள்தோறும், சமுதாயங்கள் தோறும் கடைபிடிக்கப்பட்ட சில பழக்க வழக்கங்கள் பல பகுதிகளில் இன்றளவும் தொடர்கிறது. இதில் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி, சித்திரை மாத பௌர்ணமி, சித்திரை முதல் ஞாயிற்றுக்கிழமை போன்ற நாட்களில் தமிழ்நாட்டில், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, பெரம்பலூர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் முயல் வேட்டை திருவிழா தமிழ்நாட்டின் பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்றாகும். இது போன்ற திருவிழாக்களில் குறு வனவிலங்கினங்களான முயல் மட்டுமின்றி வங்கநரி, மான், காட்டுப்பன்றி போன்றவைகளை வேட்டையாடி கொண்டுவந்து அதன் கறியை எடுத்து ஊர்மக்கள் அனைவரும் பகிர்ந்துண்ணும் வழக்கம் இன்றளவும் உள்ளது.
பண்டைய காலத்தில் சமுதாயமாக இனக்குழுக்கள் இருந்தன. இனக்குழுக்கள் தமிழ் நாட்டில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என திணை வாரியாக பாகுபடுத்தப்பட்டுள்ளன. வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் இனக்குழு சமூகத்தின் முக்கியத் தேவை உணவுப்பொருட்களே, இவர்கள் வனங்களில் வேட்டையாடுவதன் வழியாக தங்களுக்கான உணவை உற்பத்தி செய்துகொண்டனர். இந்த இனக்குழு சமூகத்தை மானிடவியலாளர்கள் வேட்டைச்சமூகம் என்கின்றனர்.  மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சித் திணைப்பகுதியில் வேட்டைச் சமூகத்தின் கூறுகள் அதிகமாக காணப்படுகின்றன. குறிஞ்சித்திணைப் பகுதிகளில் இன்றளவும் காணக்கிடைக்கின்ற வேட்டைச் சமூகத்தின் ஒரு பண்பாட்டுக் கூறுதான் முயல் வேட்டை அல்லது பாரிவேட்டை. (உதாரணம்: பெரம்பலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் பச்சமலை, பழனிமலையை ஒட்டிய கிராமங்களிலும், சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, ஆத்தூர் வட்டங்களில் உள்ள 25 கிராமங்களில் வங்கநரி  (Vulpes bengalensis என்ற விலங்கியல் பெயர் கொண்ட குள்ளநரி IUCN அமைப்பின் அழிந்துவரும் விலங்கினங்களின் சிவப்பு ஆவணப் பட்டியலிலுள்ள ஒரு விலங்காகும்) வேட்டை என இந்தத் திருவிழாக்கள் நடைபெறுவதை சொல்லலாம்). முல்லைத்திணைப் பகுதிகளில் மக்கள் சங்க காலத்திற்கும் முன்பே புன்செய் வேளாண்மையிலும் கால்நடை மேய்ச்சலிலும் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் வேட்டையில் ஈடுபட்டது தாங்கள் பயிரிட பயிர்களை காட்டு விலங்குகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ளவும் தங்களது உணவுத் தேவையை நிறைவாக்கி கொள்ளவே என்பதும் சங்கப் பாடல்கள் மூலம் நாம் அறிந்துகொள்ளமுடிகிறது. நெய்தல் திணையிலும் மக்கள், மீன் வேட்டையாடுவது தங்களின் உணவுக்காகவே. (புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடைக்காலங்களில் ஏரி, குளம், கண்மாய்களில் நீர் வற்றிய நிலையில் அப்பகுதிகளில் குறிப்பிட்டநாளில் மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது). இதுவும் வேட்டைச் சமூகத்தின் பண்பாட்டு எச்சமாகக் கொள்ளலாம். மருதத்திணை மக்களிடையே இதன் கூறுகள் சிறிய அளவிலேயே காணப்படுகின்றன.
வேட்டையாடிய விலங்கினங்களின் இறைச்சியைப் பாதுகாத்து வைக்க இயலாத நிலையில் இனக்குழுவினர் அனைவரும் பகிர்ந்துண்ணும் பழக்கமே இன்றைய காலத்திலும் திருவிழாவின்போது வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சியை கடவுளுக்குப் படைத்துவிட்டு இருப்பவர் இல்லாதவர் என பாகுபாடின்றி அனைவரும் பகிர்ந்துண்பது தொடர்கிறது.
தருமபுரி மாவட்டத்தில் அரூர் ஒன்றியத்தில் அச்சல்வாடி ஊராட்சிக்குட்பட்ட அச்சல்வாடி, குடுமியாம்பட்டி, ஓடசல்பட்டி ஆகிய கிராமத்தினர் ஒன்றுகூடி முயல் வேட்டை திருவிழாவை பாரம்பரியமாக நடத்தி வருகின்றனர். ஆனால் தென் தமிழகத்தில் இந்த விழா கொண்டாடும் நாட்கள் போலன்றி தை மாதத்தில் பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் சங்கராந்தி தினத்தின் போது நடத்தப்படுகிறது. இங்குள்ள மாரியம்மனை வேண்டிக் கொண்டு, ஆண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் முயல் வேட்டைக்கு அதிகாலையிலேயே அருகாமையிலுள்ள வேப்பம்பட்டி, தீர்த்தமலை காப்புக்காடுகளுக்குக் கிளம்பிச் செல்கின்றனர். (பண்டைய நாட்களில் வனங்களில் மரத்தின் மீது குடிலமைத்து தங்கி முயல்கள் பிடிப்பது நடந்து வந்ததாகவும் தற்போது அவ்வாறில்லாமல் வேட்டையாடும் தினத்தை முடிவு செய்து அதிகாலையில் வனத்திற்குள் செல்வதாகவும் இங்குள்ளவர்கள் கூறுகின்றனர். மரத்தின் மீது பரண் வீடமைத்து அங்கு தாங்கள் வேட்டையாடிய விலங்குகளைக் கொண்டுவந்து அங்கேயே இறைச்சியாக்கி கடவுளருக்கு படைக்கும் பழக்கம் திருநெல்வேலி பகுதிகளில் இன்றும் உள்ளது). குடுமியாம்பட்டி மக்கள் பாரிவேட்டையை “பாடிவேட்டை” என்று இன்றும் குறிப்பிட்டுச் சொல்கின்றனர். திருநெல்வேலி, பெரம்பலூர் மாவட்டங்களில் இதுபோல காட்டுக்கு வேட்டைக்குச் செல்வோர் குத்தீட்டி, இரும்புக்கம்பிகள், உருட்டுக்கட்டைகள் போன்றவைகளை எடுத்து செல்வதும் உடன் வேட்டை நாய்களைக் கூட்டிச் செல்வதும், இரவு முழுவதும் வேட்டையாடுவதும் வழக்கம். ஆனால் இங்கு, வலை விரித்து முயல்கள் பிடிக்கப்படுகின்றன. பிடிபட்ட முயல்களை சாயங்கால வேளையில் ஊருக்குள் கொண்டுவந்து அங்குள்ள மாரியம்மன் கோயில் திடலில் உள்ள நூறாண்டு பழமையான ஆலமரத்தடியில் வைக்கின்றனர்.  மாரியம்மன், வேடியப்பன் முதலான கடவுளர்களை அலங்கரித்து ஊர்வலமாக எடுத்து வருகையில் கிராமத்துப் பெண்கள் பொங்கல் வைத்து சாமிக்குப் படையலிடுகின்றனர். அப்போது பிடிபட்ட முயல்களை மாலைகள் அணிவித்து பூசைகள் நடத்தியபின் ஊராருக்கு காண்பித்து கடவுளர்களை  சுற்றிவந்து காணிக்கை அளிப்பது போல வழிபாடுகள் நடத்தப்பட்டு பின்னர் முயல்களை காட்டுக்குள் விட்டுவிடுகின்றனர்.  
காணிக்கை செலுத்துதல் 

முயலை காட்டிற்குள் விடுதல் 

தங்கள் நிலங்களில் உள்ள பயிர்களை காட்டு விலங்குகள் அழிக்க வரும்போது அவைகளைப் பொறிவைத்து பிடித்தழிப்பதும், கூட்டமாகக் காட்டிற்குள் சென்று காட்டுவிலங்குகளை வேட்டையாடி அழிப்பதும் பண்டைய நாட்களில் வழக்கமாக இருந்தது. அதன் தொடர்ச்சியே இதுபோன்ற நிகழ்வுகள். சமீபகாலமாக, வனத்துறையினரின் கடுமையான எச்சரிக்கைகள் காரணமாக, முயல்வேட்டை அல்லது பாரிவேட்டைகள் வெகுவாக குறைந்துவிட்டன. இருப்பினும் விலங்குகளை உயிருடன் கொண்டுவந்து கடவுளர்களுக்குப் படைக்கப்பட்டு பின் அவைகளை மீண்டும் காட்டிற்குள் விட்டுவிடுவதான நிகழ்வுகள் நமது பாரம்பரியமான திருவிழாக்களில் நடைபெறும் பண்பாட்டு மாற்றம் என்றே கொள்ளவேண்டும்.

நன்றி:
இந்த கட்டுரை ஆக்கத்திற்கு உதவியவை 
புகைப்படங்கள் -புதிய தலைமுறை 
உங்கள் நூலகம் ஏப்ரல் 2014 இதழில் வெளியான கட்டுரை - "செவ்வியல் இலக்கியம், தொல்குடி மரபும் தொடர்ச்சியும் (வேட்டை, விருந்து) - கோ. சதீஸ் 
தினகரன் சேலம் பதிப்பு 16-04-2018 
தினமலர் மதுரை பதிப்பு 01-08-2010
தினமலர் 14-12-2012 "மகா சிவராத்திரியில் பாரிவேட்டைக்கு தடை"  
தினமலர் சென்னைப் பதிப்பு 17-4-2017



பி. அக்ரஹாரம் முனியப்பன் கோயில்

பி.அக்ரஹாரம் முனியப்பன் கோயில்


தருமபுரி நகரிலிருந்து பென்னாகரம் செல்லும் சாலையில் 25 கி.மீ. தொலைவில் உள்ளது பிலியனூர் அக்ரஹாரம் எனும் ஒரு சிறிய கிராமம். நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட இந்த ஊரின் எல்லைப்புறத்தில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட பி.அக்ரஹாரம் ஏரிக்கரையில் கிழக்குதிசை நோக்கி அமைந்துள்ளது முனியப்பன் கோயில். (அநேகமாக தமிழத்தின் அனைத்துப்பகுதிகளிலும் சிறுதெய்வ கோயில்களில் ஆண் தெய்வங்கள் கிழக்குதிசை நோக்கியே அமைக்கப்பட்டிருக்கும்)
இங்கும் முனியப்பன்  கோயில் உருவான விதம் பற்றிய செவிவழிக் கதையொன்று சொல்லப்படுகிறது. இங்குள்ள மக்கள் அருகாமையிலுள்ள கொம்பரசன் கோட்டை என்ற மலைப்பகுதியில் உள்ள காட்டில் மூங்கில் வெட்டியெடுத்து வரச்சென்றதாகவும் அப்போது ஒருவர் தனியே மூங்கில் வெட்டிக்கொண்டிருந்தபோது, உடல்நலம் பாதித்து மயங்கி விழுந்துவிட்டதாகவும் அப்போது ஒருவர் குதிரையில் வந்து விழுந்துகிடந்த நபரை தூக்கி குதிரையில் வைத்து ஊருக்குள் கொண்டுவந்து இறக்கிவிட்டுச் சென்றதாகவும், ஊருக்குள் வந்தவுடன் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நபர் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாகவும், இந்த செய்தியை அவர் ஊர் மக்களிடம் பகிர்ந்துகொள்ள, அவரை ஊருக்குள் கொண்டுவந்து விட்டது ஊர்க்காவல் தெய்வமான முனியப்பன்தான் என்றும் அந்த மலைப்பகுதிக்குச் சென்று முனியப்பனை வழிபாடு செய்து வந்தனர்.
காலப்போக்கில் முனியப்பனுக்கு கோயில் எழுப்பி கொண்டாடவேண்டும் என்று தீர்மானித்து கொம்பரசன் மலையில் கிடைத்த ஒரு வேல் மற்றும் பூசைமணியை எடுத்து வந்து ஊர் எல்லையில் ஏரிக்கரையில் கோயில் எழுப்பி வழிபடத் தொடங்கினர்.  இப்போதுள்ள கோயில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் சுதை வடிவ முனியப்பன், ஒரு கால் மடக்கி ஒரு கால் தொங்கவிட்டு வலது கையில் பெரிய கத்தியுடனும் இடது கை அவரது தொடையிலும் வைத்து அமர்ந்த நிலையில் அவரது வலது மற்றும் இடது பக்கங்களில் 2 காவலர்கள் குதிரைகளுடன் நின்ற நிலையிலும் முனியப்பனின் காலுக்கு அடியில் ஒரு புற்றும் அதில் பாம்பு ஒன்று படமெடுத்த நிலையிலும் அருகில் ஒருவர் மகுடி வாசிப்பது போலவுமான சிலைகள் எழுப்பப்பட்டுள்ளன. சுமார் 300 சதுர அடி பரப்பளவில் 6 அடி உயரம் கொண்ட மேடையில் இந்த சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முனியப்ப சாமி சிலைகளுக்கு கோயில் கோபுரமோ, கூரையோ கிடையாது. திறந்த வெளியில் உள்ளது. (பெரும்பாலும் நாட்டுப்புற தெய்வக்  கோயில்கள் திறந்த வெளியிலேயே எழுப்படுகின்றன.) ஆரம்பத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மார்கழி மாத வளர்பிறை நாட்களில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று முனியப்பனுக்கு விழா எடுத்து கொண்டாட ஊர்மக்கள் ஊர்க்கவுண்டர் முன்னிலையில் முடிவு செய்தனர். அதன்படி கார்த்திகை மாதத்தில் ஊர்மக்கள் ஒன்றுகூடி விழா எடுப்பது குறித்து முடிவு செய்கின்றனர். தலைக்கட்டு வரி வசூல் செய்யப்பட்டு விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று நடத்தப்பட்ட திருவிழா, தற்போது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்றன.  
திருவிழா:
மார்கழி மாதம் வளர்பிறை நாட்களில் வரும் செவ்வாய் கிழமையை திருவிழா நடத்த அருள்வாக்கு கேட்டு முடிவுசெய்யதவுடன், விழா நடைபெறும் நாட்களுக்கு முன்னதாக இக்கிராம மக்கள் கையில் மஞ்சள் காப்பு கட்டி  விரதம் மேற்கொள்கின்றனர். திருவிழா நாளில் பறை, மேளதாளம் முழங்க ஊர்மக்கள், புதுப்பானை, புத்தரிசி, பூசை பொருட்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோயிலுக்கு செல்வர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் ஆடு, கோழி ஆகியவைகளையும் உடன் கொண்டு செல்வர். தெற்கு -வடக்காக ஓர் அடுப்பும், கிழக்கு-மேற்காக ஓர் அடுப்பும் குழி எடுத்து கோயில் தர்மகர்த்தாவால்  அதில் பொங்கல் வைக்கப்பட்டு சாமிக்குப் படைக்கப்படும். ஏனையோர் கோயிலைச் சுற்றி பொங்கல் வைப்பார்கள்.  சாமிக்குக் கோழி, ஆடு, பன்றிகள் பலியிடுவது நடக்கும். அவைகளின் இரத்தத்தை புதுப்பானையில் பிடித்து, சாமிக்குப் படையலிட்ட சமைக்கப்பட்ட கறி மற்றும் பொங்கல், பூசைபொருட்கள் ஆகியவைகளைக் கலந்து பலி சோறு செய்வார் தர்மகர்த்தா. சாமிக்கு முப்பூசைகள் நடக்கும். முதல் பூசை வன்னியர் சமூக மக்களுக்கும், இரண்டாவது பூசை கன்னிமார் சாமிக்கும் மூன்றாவது பூசை ஏனைய சமூகத்தினருக்காகவும் நடத்தப்படும். பின்னர் பலிசோற்றை கிழக்குதிசை தவிர அனைத்து திசைகளிலும் பூசாரி பொலியோபொலி என்று உரத்தகுரலில் சொல்லியபடி வாரி இறைப்பார். பின்னர் புதுப்பானையை உடைத்து விட்டு மீண்டும் தேங்காய் உடைத்து மறுபூசை செய்வார். சாமிக்கு நேர்த்திக்கடனாக விரதம் இருப்போர் மஞ்சள் ஆடை அணிந்து  அலகுக்குத்தி வந்து வேண்டுதல்களை நிறைவேற்றிச் செல்வர்..
மார்கழி மாதம் வளர்பிறை செவ்வாய்க்கிழமை நடைபெறும் திருவிழா மட்டுமின்றி  ஆடிபெருக்கு, தைப்பொங்கல் போன்ற பண்டிகை நாட்களிலும்,  பிரதி மாதம் அமாவாசை தினங்களில் முனியப்பனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. பி.அக்ரஹாரம் முனியப்பனுக்கு நடைபெறும் திருவிழாவுக்கு நூற்றுக்கணக்கில் ஆடுகளும், ஆயிரக்கணக்கில் கோழிகளும் பலியிட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் பிற பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து இந்த விழாவை சிறப்பித்துச் செல்கின்றனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில், நூற்றுக்கணக்கான சிறு கடைகள் போடப்பட்டு வியாபாரம் நடக்கும். பிற கேளிக்கைகள், வானவேடிக்கை முதலானவைகளும் அப்போது நடத்தப்படுகின்றன. (ஏனைய பெருங்கோயில் தெய்வங்களுக்கு நடத்தப்படுவது போல தினமும் ஆறுகால பூசைகள் இன்ன பிற விசேஷ பூசைகள் இங்கு நடத்தப்படுவதில்லை. பக்தர்களின் வசதிக்கும் விருப்பத்திற்கேற்ப பூசைகள் நடத்தப் படுவதுண்டு.
இந்த கோயிலும் தமிழ அரசின் இந்து அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் வருகிறது
இது தவிர தருமபுரியில். தொப்பூர் பாலத்து முனியப்பன், இண்டூர் அருகே, பாப்பனேரி  கரையிலுள்ள முனியப்பன் சாமி கோயில், தருமபுரி ரயில்வே கேட் அருகே அமைந்துள்ள சக்தி முனியப்பன் என எண்ணற்ற முனியப்பன் கோயில்கள் உள்ளன. இவைகளில் மிகவும் புகழ் பெற்ற கோயில்களாக மேலே குறிப்பிட்ட இரண்டு கோயில்களைச் சொல்லலாம். தற்போது சில முனியப்ப சாமி கோயில்கள், பெருந்தெய்வக் கோயில்கள் போல், மேல்நிலை ஆக்கம் செய்யப்பட்டு கோயில் கோபுரங்கள் எழுப்பட்டும் மேலாதிக்க சாதி அர்ச்சகர்களைக் கொண்டு கும்பாபிஷேகங்களும் நடத்தப்படுகின்றன. இவைகள் நாட்டுப்புறப் பண்பாட்டு மரபுகள் கொண்டதாகாது.


சிங்காரதோப்பு முனியப்பன் கோயில், நடுப்பட்டி, மொரப்பூர்


தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மொரப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட நடுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது சிங்காரதோப்பு முனியப்பன்  கோயில். நடுப்பட்டி கிராமம் மொரப்பூரிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு ஊர் எல்லையில் சுமார் 230 சதுர அடி பரப்பில் 7 அடி உயர மேடையில் இரண்டு முனியப்பன்கள் (அண்ணன் தம்பி என்று சொல்லப்படுகிறது) சிலைகள் ஒருக்கால் மடக்கியும் ஒருக்கால் தொங்கவிட்டும் அமர்ந்த நிலையில், கண்கள் விரிந்து,  காண்போர் அஞ்சத்தக்க வகையில் உள்ளன. பலவகையான மரங்களால் சூழப்பட்ட இந்த இடம் அமைதியான சூழ்நிலையில் அழகாக இருப்பதால் சிங்காரத்தோப்பு என்று பெயர் வந்திருக்கலாம். (எப்படி தென் தமிழகத்தில் உள்ள ஐயனார் ஊர்க்காவல் தெய்வமாக நாட்டுப்புறங்களில் கருதப்படுகிறாரோ அதே அளவில் முனியப்பன் என்ற தெய்வம் கருதப்படுகிறது.  தருமபுரி மாவட்டத்தில் நீர் நிலைகளைப் பாதுகாக்கும் தெய்வமாக பல கிராமங்களில் முனியப்பன் கோயில்கள் உள்ளது. அநேக இடங்களில் முனியப்பன் கோயில்கள் நீர்நிலைகளை ஒட்டிய இடங்களிலேயே உருவாக்கப்பட்டுள்ளன.)

இந்த சிங்காரதோப்பு முனியப்பன்  கோயில் உருவான விதம் பற்றிய செவிவழிக் கதை: இந்த கோயிலின் அருகாமையில், ஆங்கிலேயர்கள் காலத்தில் புகைவண்டிப் போக்குவரத்திற்காக தண்டவாளங்கள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருக்கும்போது, இரவில் கட்டுமானப் பொருட்கள் அடிக்கடி திருட்டு போய்விடுமாம். அப்போது ஒரு பணியாளரின் கனவில் முனியப்பன் தோன்றி, இங்குள்ள தோப்பில்தான் நான் இருக்கிறேன். எனக்கு கோயில் எடுத்து வழிபட்டால் உங்கள் குறைகளைத் தீர்த்துவைப்பேன் என்று சொன்னாராம். இதைக் கேட்ட சக பணியாளர்கள் சேர்ந்து இங்கு முனியப்பன் சிலை அமைத்து வழிபட ஆரம்பித்தப் பிறகு களவு போவது நின்று விட்டதாகவும் பின்னர் ஆண்டுதோறும் அந்த பணியாளர்கள் ஒன்று சேர்ந்து இங்கு விழா எடுத்து வந்தனர் என்று சொல்லப்படுகிறது.
தீவினைகள் போக்கும் தெய்வமாக எண்ணி, திருமணம், குழந்தைப்பேறு, தொழில்வளம் சிறக்கவும் இந்த முனியப்பனை வேண்டிக்கொண்டால், அப்படியே நிறைவேறும் என்பது சுற்றுப்பகுதி மக்களின் நம்பிக்கை. வேண்டியது நிறைவேறியவுடன், மக்கள் இங்குவந்து பொங்கலிட்டு, முனியப்பனுக்கு நேர்த்திக்கடனாக ஆடு, கோழி பலியிட்டு பூசைகள் செய்து வழிபட்டு செல்கின்றனர்.  
செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. மாதாந்திர அமாவாசை நாட்கள் மற்றும் ஆடி 18ஆம் நாள், ஆயுதபூஜை, கார்த்திகை தீபம் முதலான நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஆனால் இப்போது தினந்தோறுமே தருமபுரி, சேலம், வேலூர், கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து முனியப்பனை தரிசித்து பூசைகள் செய்து வழிபடுகின்றனர். வார இறுதி நாட்களில் சுமார் பத்தாயிரம் பேர் வரை இந்தக் கோயிலுக்கு வருகின்றனர்.
இந்த கோயில் தமிழ அரசின் இந்து அறநிலையத்துறைக் கட்டுபாட்டில் வருகிறது. நாள்தோறும் அரசின் அன்னதானத் திட்டத்தின் கீழ் சுமார் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

திங்கள், 17 டிசம்பர், 2018

அதியமான் பெருவழிக்கல்

       சங்க காலத்திற்குப் பின்னர் அதியர்கள், பல்லவர்கள் ஆட்சிகாலத்தில் அதிகாரிகளாகப் பணியாற்றிவந்துள்ளனர். நாமக்கல் நகரில் உள்ள மலைக்கோட்டையையும் புகழ்பெற்ற குடைவறை கோயிலையும் கட்டி ஆட்சி செய்தவர்கள் இந்த அதியமான்களே. பாண்டியர்களது ஆட்சிகாலத்தில் நாமக்கல்லை ஆண்ட அதியர்கள் தோற்கடிக்கப்பட்டனர். பிறகு இவர்கள் சோழர்களின் கீழ் அதிகாரிகளாக பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்களில் சிலர் தகடூரையும் (இன்றைய தருமபுரி) ஆண்டுள்ளதைக் கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் அறியலாம்.
       கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சி காலத்தில் தகடூர் நாட்டையும் கிழக்கில் போளூர் வரையிலும், வடக்கில் ஆந்திரமாநிலம் வட்டிகம் வரையிலும்  “விடுகாதழகிய பெருமாள் எனும் “இராஜராஜ அதியமான் ஆட்சி செய்துள்ளான். இக்காலகட்டத்தில் இவன் காலத்தில் உருவானதே அதியமான் கோட்டையிலிருந்து நாவற் தாவளம் என்ற ஊர் வரை சுமார் 30 காதத்திற்கு அமைக்கப்பட்ட சாலையே “அதியமான் பெருவழி அன்றைய காலத்துப் போக்குவரத்து சாலை ஆகும். (இந்த நாவற் தாவளம் என்ற ஊர் எது என்பது இன்றுவரை அறியப்படாமலே உள்ளது).
       இந்த அதியமான் பெருவழியில், வழித்தூரத்தை பாமரரும் அறிந்துகொள்ளும் வகையில் அந்த சாலை எந்த ஊருக்குச் செல்கிறது, இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும் என்பதை குறிக்கும் விதமாக முதலில் ஊர் பெயர்களையும், தொடர்ந்து எண்ணாலும் எழுதி, பெரிய துளைகள் மற்றும் சிறிய துளைகள் கொண்டு கணக்கிட்டுக் கொள்ளும் வகையில் கல்லில் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு காத தூரத்திலும் இருந்துள்ளன. இவைகளில் தருமபுரியை அடுத்த பாலக்கோடு வட்டத்தில் மாட்லாம்பட்டி, இண்டமங்கலம் என்னும் ஊர்களுக்கு அருகே மேற்கு பகுதியில் வயல்வெளிகளுக்கு நடுவே தமிழக தொல்லியல் துறையினரால்  27 காதம் கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டன. மற்றொருகல் தருமபுரியிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள குள்ளனூர் என்னும் ஊரில் சாலையின் வலப்புறம் உள்ள கிணற்று மேட்டில் (29 காதம்) கண்டுபிடிக்கப்பட்டது. .
        பெரிய துளைகள் ஒவ்வொன்றும் 10 காதத்தைக் குறிப்பதாகவும் (ஒரு காதம் என்பது நான்கரை மைல் தூரம்) சிறிய துளைகள் 1 காதத்தைக் குறிப்பதாக இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். (இதேபோல ஆரகழூரிலிருந்து காஞ்சிபுரம் வரை மகததேசப் பெருவழி இருந்ததை ஆறகழூர் பெருவழிக்கல் குறிப்பிடுகிறது).

அதியமான் பெருவழிக் கல் 29 காதம்