வெள்ளி, 16 செப்டம்பர், 2016

சர்.தாமஸ் மன்றோ

தாமஸ் மன்றோ       
தாமஸ் மன்றோ சிலை -தீவுத்திடல்
     
அன்றைய சென்னை மாகாண அரசால் தாமஸ் மன்றோவுக்காக அமைக்கப்பட்ட நினைவுத்தூண்-தருமபுரி 



      
   
சர்.  தாமஸ் மன்றோ (1761-1827)
1761ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் ஸ்காட்லாண்டு கிளாஸ்க்கோ நகரத்தில் அலெக்சாண்டர் மன்றோ - மார்கிரட் ஸ்டார்க் ஆகியோருக்கு பிறந்தவர். இவரின் குடும்பம் புகையிலை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தது. சிறுவயதில் அம்மை நோயினால் பாதிக்கப்பட்டு அழகிலன்தவர் செவித்திறனையும் இழந்திருந்தார். கிளாஸ்க்கோ நகரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றார். இதே காலகட்டத்தில் இவரது குடும்ப வியாபாரம் நொடித்துபோய் பெரும் கடன்சுமையில் வீழ்ந்தது. இவருடைய 18 வது வயதில் 1779 ஆம் ஆண்டு ஆங்கிலேய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய இவர் 1780 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். ஆங்கிலேயர்களுக்கும் திப்புசுல்தானுக்கும் நடைபெற்ற மைசூர் முதல் மற்றும் இரண்டாம் போர்களில் பணியாற்றினார். போரின் வெற்றியைத் தொடர்ந்து சுமார் 12 ஆண்டுகள் ஆங்கிலேய ராணுவத்தில் இருந்த மன்றோ போரை முன்னின்று நடத்திய கவர்னர் ஜெனரலான கார்ன் வாலிஸ்திப்புவின் ஆட்சியின் கீழ் இருந்த பாரமகால் பகுதியை நிர்வகிக்க கர்னல் ரீடுவுடன் தாமஸ் மன்றோவையும் அனுப்பி வைத்தார். பின்னர் அன்றைய சென்னை மாகாணத்தில் சேலம் கோவை பகுதிகளில் ஆட்சியராக பணியாற்றினார். மைசூரின் கனரா பகுதிகளிலும் பின்னர் ஹைதராபாத் நிஜாமின் ஆட்சிக்கு கீழே இருந்த பகுதிகளிலும் ஆட்சியராகப் பணியாற்றினார்.
பின்னர் இங்கிலாந்து சென்ற இவர் மீண்டும் இந்தியா திரும்பினார். 1817ல் மராட்டிய பேஷ்வாக்களுக்கு எதிரான போரை தலைமைவகித்து நடத்தி அவர்களைத் தோற்கடித்தார். 1820 ஆம் ஆண்டு  சென்னையின் கவர்னராக திரும்பி வந்தார். சென்னை கவர்னராக அவரது சிறப்பான பணியைக் கருத்தில்கொண்டு அவரை கவர்னர் ஜெனரலாக நியமிப்பதற்கான பரிந்துரை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இருந்தது. அப்போது ஆந்திராவில் இருந்த கூத்தி என்ற கோட்டைக்குச் சென்ற மன்றோ உடல்நலம் குன்றி 1827ல் தன்னுடைய 65 ஆவது வயதில் மரணமடைந்தார். அவரது உடல் கூத்தியில் இருந்த ஆங்கிலேயருக்கான மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இவரது கீழுள்ள பகுதியில் அங்கு வாழும் மக்களின் பண்பாட்டையும் பொருளியலையும் புரிந்துகொள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் கற்றுக்கொண்டு, காடுமேடுகள், ஒதுக்குபுறமாக உள்ள கிராமங்கள் என பல பகுதிகளுக்கும் குதிரை சவாரி செய்து மக்களுடன் நேரடியாகவும் நெருக்கமாகவும் பழகினார்.  சென்ற இடங்களில் மக்களுக்கு அவசியமான குடிநீர் வசதி, பாசன வசதிகளை ஏற்படுத்திட தனிக்கவனம் செலுத்தினார்.
தாமஸ் மன்றோ 1792 ஆம் ஆண்டு ஏப்ரல்  மாதம் முதல் 1799 ஆம்  ஆண்டு மார்ச் மாதம் வரை தருமபுரியிலேயே தங்கி பணியாற்றியுள்ளார். இவருக்கு தோட்டக்கலையில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அதனாலேயே தருமபுரியில் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் தோட்டமும்  அமைத்திருந்தார். அந்த தோட்டம்  "மன்றோ சாப்புத் தோட்டம்" என்று அழைக்கப்பட்டது. (அந்த இடம் தற்போதுள்ள தருமபுரி வனச்சரக அலுவலகம் மற்றும் அவ்வையார் அரசு மேனிலைப்பள்ளியின் ஒருபகுதியாக இருக்கலாம் என்று வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர்).
மன்றோ இறந்தவுடன் அவரது மனைவி வில் ஹெல்மினா  தருமபுரியில் நினைவிடத்தை அமைத்துள்ளார். அந்த இடத்தில்தான் இப்போது மன்றோ நினைவுத்தூண் இருக்கிறது.  
 சர் தாமஸ் மன்றோவின் நினைவுத் தூணில் எழுதப்பட்டுள்ள வாசகம்:
சர் தாமஸ் மன்ரோ துரைக்கும் தருமபுரிக்கும் உள்ள சம்பந்தத்தைக் காட்டுவதற்காக சென்னபட்டணம் கவர்மெண்டார் இந்த ஸ்தம்பம் கட்டியிருக்கிறார்கள். மன்ரோ துறை பாரமஹாலில் ரெவின்யு சூப்ரிண்டேண்டுக்கு உதியோகஸ்தராயிருந்து  1792  வரு ஏப்ரல்  மாதம் முதல் 1799 வரு மார்ச்சு மாதம் வரையில் இங்கே வசித்து வந்தார். இந்த ஸ்தம்பம் கட்டியிருக்கும் ஸ்தானத்திலிருந்து சிலகஜ தூரத்தில் அவருடைய வீடும் அவருக்கு இஷ்டமான தோட்டமும் இருந்தன".

  

  
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக