சனி, 17 செப்டம்பர், 2016

ஒஹெனக்கல்

  ஒஹெனக்கல் (Smoking Rocks)

 
 
      ஒஹெனக்கல் 12°0709வடக்கு அட்சரேகைக்கும் 77°4626’  தீர்க்கரேகைக்கும் நடுவில் உள்ளது.
   தமிழ் நாட்டின் மிகச் சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்றான ஓஹெனக்கல்,   தருமபுரி   மாவட்டத்தில் பென்னாகரம் வட்டத்தில், ஓஹெனக்கல் ஊராட்சிக்கும் கூத்தப்பாடி ஊராட்சிக்கும் உட்பட்டப் பகுதியில் அமைந்துள்ளது. 
  கர்நாடக மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளுள் ஒன்றான பிரம்மகிரி மலை (குடகு மலை)  தலைக்காவிரி எனும் இடத்தில் உருவாகி  ஆறுகளுடன் இணைந்து காவிரி ஆறாகப் பெருக்கெடுத்து ஓடி வந்து தமிழ்நாட்டில் தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களின் எல்லைப்பகுதியான பிலிகுண்டு என்ற இடத்தில் பரந்துவிரிந்து  மலைகளுக்கு இடையேயும் பாறைகள் மீதும் தவழ்ந்து வெள்ளமென ஓடிவரும் காவிரி ஆறு இங்கு  நீர்வீழ்ச்சியாகக் கொட்டுகிறது.
   'ஓஹெனக்கல்' என்பது இரண்டு கன்னட சொற்களால் உருவான பெயராகும். 'ஓஹே' என்றால் கன்னடமொழியில் புகை என்று பொருள். காவிரி ஆறு இந்த இடத்தில் ஆர்ப்பரித்து வரும்போது நீர்த்திவலைகள்  புகையைப்  போல   காட்சியளிக்கும்.  கற்பாறைகளினூடே புகையைப் போல பாய்ந்துவரும் இந்தப் பகுதிக்கு ஓஹெனக்கல் என்று பெயர். இங்கு எண்ணற்ற கற்பாறை பிளவுகளினூடே பாய்ந்து வரும் காவிரி ஆறு,  இடங்களில் சுமார் 20 மீட்டர் உயரத்திலிருந்து நீர்வீழ்ச்சியாகக் கீழ்நோக்கிப் பாய்கிறது. அவ்வாறு  பாய்கையில் ஏற்படும்  ஓசை இடியைப் போல ஒலிக்கிறது.
  தெற்கு ஆசியாவிலேயே மிகப் பழமையானதும் உலகில் மிகப் பழமையான பாறை வகைகளுள் ஒன்றான கார்போனோடைட் (Carbonatite) வகைப் பாறைகளால்  உருவானது ஓஹெனக்கல் பகுதி.
  இந்த நீர்வீழ்ச்சியானது 'இந்தியாவின் நயாகரா' என்று போற்றத்தக்க அளவில் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் குளித்துமகிழ இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் கூட சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.   குறிப்பாகக் கோடைகாலத்தில் சுமார் 4 லட்சம் முதல் 10 லட்சம் வரை சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள்.
  இங்கு காவிரி ஆற்றின் ஒரு கரை தமிழ்நாட்டின் வனப்பகுதியில் மறுகரை கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதியில் அமைந்துள்ளது. 
 ஓஹெனக்கல் சுற்றுலாத்தலமாக மட்டுமல்லாமல் திரைப்படங்களுக்கான படப்பிடிப்புத்  தளமாகவும் விளங்குகிறது. இந்தியாவின் பிரபலமான திரைநட்சத்திரங்களின் படப்பிடிப்புகள் இங்கு நடந்தவண்ணம் உள்ளன. 
  இங்கு பார்க்கவேண்டிய இடங்களாக மெயின்பால்ஸ், சினிபால்ஸ், கூட்டாறு, தொங்குபாலம், மணல்மேடு, ஜெகன்மோகினி குகை, முதலைப்பண்ணை மற்றும் ஆலம்பாடி பரிசல் துறை  ஆகிய இடங்கள் உள்ளன. 
 இங்கு பரிசல் பயணம் மிகவும் பிரசித்தம். இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பரிசல் சவாரி செய்வதை மிகவும் விரும்புகிறார்கள். பரிசல் ஓட்டுவதெற்கென இப்பகுதியைச் சார்ந்தோர் நூற்றுக்கணக்கில் உள்ளனர். 
 'பரிசல்' என்பது 2.24 மீட்டர் விட்டம் கொண்ட மூங்கிலால் செய்யப்பட்ட மிதவையாகும். அடிபாகம் தண்ணீர் புகாவண்ணம் பாதுகாப்பு செய்யப்பட்டிருக்கவேண்டும். ஆனால் பெரும்பாலும் பிளாஸ்டிக் துணியால் மூடப்பட்டுள்ளது. ஒரு பரிசலில் அளவுக்கதிகமாகப் பயணிகளை ஏற்றிச் செல்வதும் தக்க பாதுகாப்பு முறைகளைக் கையாளாமல் ( without Life Jocket)
பயணம் செய்வதும் கண்கூடு. இதனால் இங்கு விபத்து நேர்வதும் உண்டு. (பார்க்க: ஓஹெனக்கல் சோகம்).
 இங்கு நீர்வீழ்ச்சியில் மட்டுமின்றி ஆற்றில் இறங்கி குளிக்கவும் சுற்றுலாப் பயணிகள் விரும்புகின்றனர். இவர்களுக்கு ஆழமான பகுதிகள் எது என்பது தெரியாமலேயே ஆற்றில் இறங்கி மூழ்கி இறக்கநேரிடும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. இங்கு ஓர் ஆண்டில் சுமார் 60 முதல் 100 சுற்றுலாப்பயணிகள் ஆற்றில்  குளிக்க  இறங்கி மரணிக்கிறார்கள்.  இதற்காக மாவட்ட நிர்வாகம் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு மொழிகளில் எச்சரிக்கை பலகைகளை வைத்திருந்தாலும் பயணிகள் அதை கண்டுகொள்வதே இல்லை என்பதே உண்மை.  

  அடுத்து இங்கு மிகவும் பிரசித்தமானது மீன் உணவு. தமிழ் நாட்டின்  சுற்றுலாத் தளங்களில் வேறு  எங்கும் கிடைக்காத அளவுக்கு அனைத்துவித ஆற்று மீன்களும் இங்கு கிடைப்பதுதான். ரோகு, கட்லா, ஜிலேபி, வாளைமீன், மிர்கால், விரால், ஆரால், விலாங்குமீன், ஐகெளுத்தி, பஞ்சாலை, கெண்டை, கல்பாசை, கண்ணாடிக்கெண்டை, சொட்டவாலை, சேனாங்கெளுத்தி, உருட்டைமீன் உள்ளிட்ட பலவகை மீன்கள் இங்கு கிடைக்கின்றன. தேவைக்கேற்ப மீன்கள் வாங்கித் தந்தால்  கூலிக்கு  சமைத்துத்தர இப்பகுதி பெண்கள் உள்ளனர்.
   ஏனைய  சுற்றுலாத் தளங்களை  போலவே இங்கும் சுற்றுலாப்பயணிகளால் சுற்றுச்சூழல் மாசடைந்து வருகின்றன. சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்க எண்ணற்ற நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுவந்தாலும் மாசடைவது நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு சுற்றுலாப்பயணிகளிடையே   சுற்றுச்சூழல் குறித்த  விழிப்புணர்வு மிகவும் அவசியம். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக