புதன், 30 ஜனவரி, 2019

நீதிபதிகள், தருமபுரி மாவட்ட


வ.
எண்
மாவட்ட நீதிபதி பெயர்
முதல்
வரை
1
திரு டி. மதிவாணன் 
17-02-08
29-02-08
திரு. எம்.விஜயராகவன்
10.04.08
27-05-08
3
திரு எஸ்.மீனாக்ஷிசுந்தரம்
04-08-08
29-01-09
4
திரு.ஏ.ஐயப்பன்
09-03-09
04-05-09
5
திரு.எஸ்.குமரகுரு
07-05-09
30-04-12
6.
திரு.எஸ்.வணங்காமுடி
02-05-12
26-08-13
7.
திருமதி ஆர். தரணி
26-08-13
06-11-13
8.
திரு. சு.வில்லியம்
06-11-13
31-07-14
 9.
திரு.ஆர். செல்வக்குமார்
06-08-14
12-09-15
 10.
திருமதி எஸ்.சுபாதேவி
14-09-15
இன்று வரை

கரும்பு


கரும்பின் வரலாறு:
பப்புவா நியூ கினியா தீவை தாயகமாகக் கொண்ட கரும்பு விவசாயம் தென்கிழக்கு ஆசிய நாடுகள், தெற்கு சீனம் என்று பரவி குப்தர்கள் காலத்தில் இந்தியா வருகிறது.
கி.மு.8000 ஆண்டுகள் வரலாறு கொண்டது கரும்பு. இந்தோ-சீன மக்கள் இடம்பெயர்ந்த தென் பசிபிக் கடற்பகுதியில் உள்ள பப்புவா நியூ கினியா தீவில் காடுகளில் இயற்கையாக வளர்ந்துகிடந்த கரும்புப் பயிர்களைக் கண்டனர். உள்ளூர் மக்கள் கரும்புகளில் பல இனங்களை விவசாயம் செய்வதைக் கண்டனர். ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்குப் பிறகு கரும்புப் பயிர் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வட இந்தியாவிற்குள் வருகிறது. வட இந்தியாவில் கரும்பு (Saccharum barberi) பயிரிடத் தொடங்கிய காலத்தில் அங்கிருந்து கி.மு. 800- இல் கரும்பை  சீன நாட்டிற்கு கொண்டுசென்று பயிரிடத் தொடங்கினர். இவ்வாறாக கரும்புப் பயிரிடும் முறை பரவாலாகத் தொடங்கியது. ஆரம்பகாலத்தில் கரும்பு கடித்து சுவைத்து உண்ண மட்டுமே இருந்த நிலையில், குப்த பேரரசின் காலத்தில் (கி.மு.400) கரும்பிலிருந்து சாறு எடுத்து அதனைக்கொண்டு சர்க்கரை தயாரிக்கும் தொழில்நுட்பம் வளர்ந்தது.
அதவர்வன வேதத்தில் (1500-800 கி.மு) கரும்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயுர்வேதத்தை படைத்த சர்க்கா, சுஸ்ருதர் பல இடங்களில் கரும்பின் உபயோகம் குறித்து எழுதியுள்ளனர்.  சுஸ்ருத சம்ஹிதையில் 12 வகையான கரும்புகள் குறித்து எழுதப்பட்டுள்ளன. 
ஜைன மதத்துறவி முதலாம் தீர்த்தங்கர ரிஷபதேவர் மக்களுக்கு கரும்பிலிருந்து சாறு எடுக்கும் முறையைக் கற்றுத்தந்துள்ளார். ஜைனமத இலக்கியமான உபமித்பவ பிரபஞ்ச கதா என்ற நூலில் கரும்பிலிருந்து சாறு எடுப்பதற்கான இயந்திரம் (ஜைந்த்ரா) பற்றி கூறுகிறது.
மனுதர்ம சாஸ்த்திரத்தில் கரும்புப் பயிர் குறித்தும் கரும்புச் சர்க்கரைக் குறித்தும் குறிக்கப்பட்டுள்ளன.
சிந்து சமவெளி ஆராய்ச்சியாளர்கள், அன்றைய மக்கள், கரும்புப் பயிர் பற்றியும், கரும்பிலிருந்து சாறு எடுத்து அதனை சர்க்கரையாகச் செய்யும் தொழில்நுட்பம் அறிந்தவர்களாக இருந்துள்ளனர் என்று குறிப்பிடுகின்றனர். ஏறத்தாழ கி.மு 700 வாக்கில் கரும்பிலிருந்து சர்க்கரை எடுக்கும் தொழில்நுட்பம் வணிக ரீதியில் பரவியதாகச் சொல்லப்படுகிறது.
கரும்பை அரைத்து சாறெடுத்து அதனை சூரிய ஒளியில் காயவைத்து எடுக்கப்படும் சர்க்கரை மணல் போல இருக்கும். சமஸ்க்ருத மொழியில் சர்க்கரை என்பதற்கு 'மணல்என்பது பொருள். இந்தியாவிற்கு வந்த புத்த துறவிகள் இந்த தொழில்நுட்பத்தை சீன தேசத்திற்கு எடுத்துச் சென்றனர். பழங்கால சீன மொழியிலும் 'மணல் சர்க்கரை' என்றே கரும்புச் சர்க்கரைக்கு பொருள். 
தருமபுரியில் அதியமான் பரம்பரையைச் சேர்ந்த நெடுமான் அஞ்சி, கரும்பை தூர தேசத்திலிருந்து கொண்டுவந்து பயிரிடப்பட்டதாக ஔவையார் அதியமானை பாராட்டுகிறார்.
அரும் பெறல் அமிழ்தம் அன்ன 
கரும்பு இவன் தந்தோன் பெரும் பிறங்கடையே'  
-   புறநானூறு 329: 20-22
'அமரர்ப் பேணியும் ஆவுதி அருந்தியும் 
அரும்பெறல் மரபின் கரும்பு இவன் தந்தும் 
நீரை இருக்கை ஆழி சூட்டிய 
தொன்னிலை மரபின் முன்னார்'   
 -    புறநானூறு 99:1-4
கரும்பு பெரும்பாலும் நீர்வளம் உள்ள பகுதிகளில் (அன்றைய சோழ நாட்டில்) பயிரிடப்பட்டதையும், கரும்பிலிருந்து சர்க்கரை எடுக்கும்போது வரும் வாசனைக் குறித்தும் பல சங்கப் பாடல்கள் உள்ளன. 
(உதாரணம்) மருதை கூளவாணிகன் சீத்தலைச் சாத்தனாரின் ஒரு பாடல்: 
"ஆர் குறுகு உறங்கும் நீர் சூழ் வள வயல் 
கழனிக் கரும்பின் சாய்ப் புறம் ஊர்ந்து
பலான யாமை பசு வெயில் கொள்ளும் 
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர்" 
- அகநாநூறு (பாடல் 306) 
வரிபூங் கரும்பின் கழனி   (2ஆம் பத்து 3:13) 
கரும்பு பயிர் செய்யப்பட்ட இடம் 'கரும்பின் கழனி என்று கூறப்பட்டது. 
சங்க இலக்கியங்களில் சொல்லப்படும் மலையும் மலைசார்ந்தப் பகுதியான தகடூரில் ஆடுமாடுகள் வளர்ப்பிலும், மேட்டு விவசாயம் செய்யும் முல்லை நில மக்களுக்காக தகடூரை ஆண்ட அதியன் நெடுமான் அஞ்சி, ஏரிகளை உருவாக்கிநிரந்தரமாக முழுமையான பாசன வசதிகொண்ட நிலமாக்கிகரும்பை விளைவித்தான் என்று பார்க்கும்பொழுதுமுல்லை நில விவசாயத்தை மருதநில விவசாயமாக மாற்றி, மக்களை முன்னேற்றவேண்டும் என்கிற அவனது உயரிய சிந்தனை, அதோடு கரும்புப் பயிரிடும் முறையை தமிழகம் முழுவதும் பரவிடக் காரணமான அவனது தொலைநோக்குப் பார்வை குறித்து .நாம் வியப்படையாமல் இருக்கமுடியாது. 



செவ்வாய், 29 ஜனவரி, 2019

மொரப்பூர்-தருமபுரி-ஹோசூர் ரயில் பாதை


அன்றைய ஆங்கிலேய அரசின் சார்பாக, "மெட்ராஸ் ரயில்வே கம்பெனி" என்ற இங்கிலாந்து நாட்டில் பதிவு செய்த நிறுவனம், பஞ்ச நிவாரணம் போக்க மக்களுக்கு யாதொரு  கூலியுமின்றி  உணவுப் பொருட்களை மட்டுமே வழங்கி,  இரண்டு ரயில் பாதைகளை  அமைக்கும்  பணியைத் தொடங்கியது. 1904 ஆம் ஆண்டுதிருப்பத்தூர் - கிருஷ்ணகிரி வரையிலும் ஒரு பாதையும், 1906 ஆம் ஆண்டில் மொரப்பூரிலிருந்து தருமபுரி வரையிலும்  ஒரு ரயில் பாதை அமைக்கும்  பணியைத் தொடங்கியது. இது தனது பணிகளை 31-12-1907 ஆம் ஆண்டு முடித்தது.  இவைகள் இரண்டுமே  2.5 அடி அகல ரயில் பாதைகளாகும். 1909 ஆம் ஆண்டு  சௌத் இந்தியன் ரயில்வே கம்பெனி ஒப்பந்த தாரராக நியமிக்கப்பட்டுமொரப்பூர் - தருமபுரி ரயில் பாதையை மீண்டும் விரிவுபடுத்தி ஹோசூர் வரை நீட்டித்து சுமார் 73 கி.மீ. நீளத்திற்குப் பாதை அமைக்கப்பட்டு 1913 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்தது
(தி கிரேட் சதர்ன் ஆப் இந்தியா ரயில்வே கம்பெனி இங்கிலாந்து நாட்டை தலைமையிடமாகக் கொண்டு பதிவு செய்து இயங்கிவந்த ஒரு கம்பெனி ஆகும். அதேபோல தி கர்நாடிக் ரயில்வே கம்பெனி 1869 இல் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனம். இவைகள் இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு தி சௌத் இந்தியன் ரயில்வே கம்பெனி என்ற பெயரில் 1890 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் லண்டனில் பதிவு செய்யப்பட்டு திருச்சிராப் பள்ளியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது.  1891 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி ரயில்வே கம்பெனி (இது 1845 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது)  தி சௌத் இந்தியன் ரயில்வே கம்பெனியுடன் இணைக்கப்பட்டு இதன் தலைமையகத்தை முதலில் மதுரையிலும் பின்னர் சென்னை சென்ட்ரலுக்கும் மாற்றியமைக்கப்பட்டது). 
இந்த சாலைகள் ஆங்கிலேய அரசாங்கத்தின் சொத்தாக இருப்பினும்தி சௌத் இந்தியன் ரயில்வே கம்பெனிதான் (SIR) 1913 முதல் மொரப்பூர்-ஹோசூர் ரயில்வே என்ற புதிய பெயரிட்டு இந்த ரயில் பாதையை பராமரித்து வந்தது. 1913 ஆம் ஆண்டு  தருமபுரி - ஹோசூர்   ரயில் பாதையை மீட்டர் காஜ் பாதையாக மாற்றி அமைக்கும் பணியை மெட்ராஸ் ரயில்வே தொடங்கியது.


தொப்பூர் தர்க்கா

தொப்பூர் தர்கா நுழைவாயில் 
தொப்பூரை அடுத்த செக்காரபட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஹசரத் சையத் ஷா வலி உல்லா என்ற முகமதியர்களின் தர்கா (தொப்பூர் தர்கா) பிரசித்தி தர்காக்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. 

தொப்பூர் தர்காவிற்கு தமிழ்நாடு, கர்நாடகம் என பல பகுதிகளில் இருந்தும் அனைத்து மதத்தினரும் வாரந்தோறும் வியாழன், வெள்ளி கிழமைகளில் வருகை தருகின்றனர். இந்த தர்காவிற்கு வரும் நாட்களில் பக்தர்கள் புலால் உண்ணாமையை கடைப்பிடித்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்த தர்கா நாகவனம் என்னும் பகுதியில் அமைந்துள்ளதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

தொப்பூர் கணவாய்

தொப்பூர் கணவாய்
தருமபுரி மாவட்டத்தின் தெற்கு எல்லைப் பகுதியாக, தமிழகத்தின் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுள் அமைந்துள்ளது தொப்பூர் கணவாய். இது (என்.ஹெச். எண்:7) பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. தருமபுரி நகரிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் தெற்கிலும் சேலம் மாநகரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் வடக்கு திசையிலும்  அமைந்துள்ளது.  இந்தியாவின் வடக்கே காஷ்மீர் முதல் தெற்கு திசை நோக்கி கன்யாகுமரி வரை  செல்லும் முதன்மையான வணிக வழித்தடமாக இந்த நெடுஞ்சாலை விளங்குகிறது. நாள்தோறும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட கனரக சரக்கு வாகனங்கள் இந்த நெடுஞ்சாலை வழியாகப் பயணிக்கிறது.

இந்த தொப்பூர் கணவாய் பகுதியில், சுமார் மூன்று கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறமும் மலைகளும் காடுகளுமாக காட்சியளிக்கின்றன. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதியில் பயணிக்கும்போது மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். இதற்கு இங்குள்ள அடர்த்தியான காடுகளே காரணம். ஆனால் சாலைப்போக்குவரத்துக்காகவும், பல்வேறு காரணங்களால் இங்குள்ள வனப்பகுதி அழிக்கப்பட்டதாலும் தற்போது அந்த குளிர்ச்சியான சூழ்நிலையை நாம் உணரமுடியவில்லை. இந்த பகுதியில் வன விலங்குகளான, குரங்குகள், மான்கள், காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள், மயில், காட்டு முயல்கள் அதிகம் உள்ளன.
இந்த கணவாயில் அமைக்கப்பட்டுள்ள சாலையானது ஆங்கில “S” வடிவத்தில் அபாயகரமான வளைவாக அமைந்துள்ளதால்  சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன. 1916 ஆம் ஆண்டில் 114 விபத்துகளும், 1917 ஆம் ஆண்டில் 104 விபத்துகளும் 1918 ஆம் ஆண்டில் சுமார் 100 விபத்துகளும் நடைபெற்றுள்ளன. நூற்றுக் கணக்கானோர் விபத்துக்குள்ளாகியுள்ளனர். பலர் இறந்துள்ளனர். இங்குள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ள இடத்தில் சாலையின் ஒருபகுதி மிகவும் இறக்கமாகவும், எதிர் திசையில் மிகவும் மேடாக உள்ளதாலும் கனரக வாகனங்கள் ஓட்டுநர்களது கட்டுப்பாட்டை இழந்து இத்தகைய விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் போக்குவரத்து  கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன் சாலையில் விபத்துக்குள்ளானவர்களுக்கு மருத்துவ உதவிகள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. பெரும்பாலும் வடமாநிலங்களில் இருந்து முதன்முறையாக தொப்பூர் கணவாய் சாலை வழியாக வரும் கனரக வாகன ஓட்டிகளால் இந்த சாலையின் வளைவுகளை அனுமானிக்க முடியாததால் விபத்துகள் ஏற்படுவதாக போக்குவரத்து துறையினர் கூறுகின்றனர். இருப்பினும் இந்த சாலையை சீர்திருத்தம் செய்து விபத்துகள் நடக்காமல் பார்த்துக்கொள்வது போக்குவரத்து துறையினர் பொறுப்பு. 


தொப்பூர் கணவாயிலுள்ள  ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில்.
(இந்த கோயிலின் அருகில்தான் தாமஸ் மன்றோ குளம் அமைந்துள்ளது. பார்க்க: தாமஸ் மன்றோ குளம்)




தொப்பூர்


தொப்பூர் என்னும் சிறிய கிராமம்சேலம் மாவட்டத்தின் வடக்கு எல்லைப்பகுதியிலும்  தருமபுரி மாவட்டத்தின் தெற்கு  எல்லையாகவும் (தேசிய நெடுஞ்சாலை எண் -7இல்) அமைந்துள்ளது. இந்த கிராமம் தருமபுரி - மேட்டூர் அணை சாலையை (மாநில நெடுஞ்சாலை எண் 20) இணைக்கும் ஊராக உள்ளது. தருமபுரி நகரிலிருந்து சேலம் சாலையில் 28 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.  இதனை ஒட்டி தொப்பையாறு என்ற ஆறு ஒடுவதால் இந்த ஆற்றின் பெயரி லேயே இக்கிராமத்தின் பெயரும் அமைந்துள்ளது. இவ்வூரில் சத்திரம் ஒன்று உள்ளது. இவ்வூரின் கிழக்கே மனுக்கொண்டமலையின் உச்சியில் கோட்டை ஒன்று தென்படுகிறது. இந்த ஊரை ஒட்டியே தொப்பையாறு அணைக்கட்டு உள்ளது. (பார்க்க: தொப்பையாறு நீர்த்தேக்கம்)
தொப்பூர், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு ஊராட்சியாகும்.  ஆவாரன்காடு, சந்திரநல்லூர்,  செட்டிகோம்பை,   சின்னக் கணவாய்காடு, டி.புதூர்ராமதாஸ் நகர், செக்கரப்பட்டி காலனி, செக்காரப்பட்டி, தொப்பூர் செக் போஸ்ட், தொப்பூர் செக்போஸ்ட் காலனி, உம்மியம்பட்டி, உம்மியம்பட்டி காலனி, வெள்ளைய கவுண்டன் கொட்டாய், தொப்பூர், தொப்பூர் புது காலனி என  15  குக்கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் 211 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த குடும்பங்கள் 2300. மொத்த  மக்கள் தொகை 10392. இந்த ஊரில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று சந்தை கூடுகிறது.

தீர்தமலையில் உள்ள தீர்த்தங்கள்


அக்னி தீர்த்தம் 
அக்னி தீர்த்தம்
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், தீர்த்த மலையில் உள்ள 5 தீர்த்தங்களுள் ஒன்று இந்த அக்னி தீர்த்தம். தீர்த்தகிரி தல புராணத்தின்படி அக்னித்  தேவனுக்குப்  பெண்ணாசையால் ஏற்பட்ட பாவங்களைப் போக்கிய தீர்த்தம் இது. இந்த தீர்த்தம்  சளித் தொல்லைகளை அகற்றும் ஆஸ்துமா நோயை குணமாக்கும். உடலை சமநிலையில் வைத்திருக்கும். 

அகத்தியர் தீர்த்தம் 
அகத்தியர் தீர்த்தம் 

தீர்த்தகிரி தல புராணத்தின்படி, அகத்திய முனிவரின் குன்ம (வயிற்றுப்புண்) நோயினை நீங்க சிவனால் அருள்பெற்றது இந்த தீர்த்தம்.  தாமிர சத்தும், மூலிகைகளின் சக்தியும் கொண்டது இந்த அகத்தியர் தீர்த்தம். இதனைக் குடிக்கவும், உணவு சமைக்கவும் பயன்படுத்தி வந்தால் குன்ம நோய் குணமாகி, சீரண சக்தி கிடைக்கும். வயிற்று உபாதைகள் நீங்கும். 

இராமர் தீர்த்தம் 
இராமர் தீர்த்தம் 
தீர்த்தமலைக்கோயிலின் பின்புறம் ராமபிரான் உருவாக்கிய ராமதீர்த்தம், ராமபிரானின்  பாணத்தால் தோன்றியதாகும்.  இந்த ராம தீர்த்தம்’. பாறைகளில் இருந்து வெளிப்படும் அரிய தீர்த்தமாகும். இந்த தீர்த்தத்தில் ராம ஜெயம்என்று உச்சரித்தபடி மூழ்கி எழுந்தால், அனைத்து பாவங்களும் நீங்கும் என்கிறது தல புராணம். இதில் நீராடி தீர்த்தகிரீஸ்வரரை வழிபாடு செய்தால் மன நிம்மதி கிடைக்கும்மேலும் உடல்ரீதியான எந்தவித நோயாக இருப்பினும் அவை தீரும் என்கிறார்கள். 


குமாரத் தீர்த்தம் 
தீர்த்தமலையின் பதினொரு தீர்த்தங்களுள் ஒன்று, குமார தீர்த்தம். சூரபத்மனை வதம் செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட முருகப்பெருமான், தேவர்களின் சேனாதிபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தமே குமார தீர்த்தம்என்று அழைக்கப்படுவதாக புராணம் கூறுகிறது. இந்தத் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொள்வதாலும், பருகுவதாலும் உயர்ந்த வாழ்வும் ஞானமும் பெருகும்

கௌரி தீர்த்தம்
கௌரி தீர்த்தம் 
இது தீர்த்தமலையில் உள்ள பதினொரு தீர்த்தங்களுள் ஒன்று. இது  அன்னை வடிவாம்பி கைக்காக வழங்கப் பெற்றது. இத்தீர்த்தத்தை கொண்டு இறைவனை வழிபாடு செய்ததால் அன்னை வடிவாம்பிகை இறைவனை மணந்தார். இறைவனின் இடப்பாகத்தில் இடம் பெற்றவள் என புராணம் கூறுகிறது. இதனைக் கொண்டு அம்மை அப்பரை வணங்கினால் திருமண பாக்கியம் கிடைக்கும். திருமண தடையாக இருக்கும். சகல தோசங்களும் நீங்கும். இல்லறம் நல்லறமாக இருக்கும்

இந்திர தீர்த்தம்
தீர்த்தமலைக்கு கீழே மலைக்குத் தென்கிழக்கே அரூர்-தீர்த்தமலை-பையர்நாய்க்கன்பட்டி செல்லும் சாலையில், வேடகட்டமடுவு ஊராட்சிக்குட்பட்ட  மொண்டுக்குழி என்னும் கிராமம் உள்ளது. இது தென்பெண்ணை ஆற்றின் கரைப் பகுதியில் உள்ளது. இங்குள்ள சிறு சிவன் கோவிலிலுள்ள மூலவர் தீர்த்தகிரீஸ்வரர் என்றும் பின்னாளில் இங்கிருந்து மூலவர் சிலையை தீர்த்தமலை கோவிலுக்குக் கொண்டுசென்று பிரதிஷ்டை செய்யதாக ஒரு செவிவழி கதை உண்டு.

எமதீர்த்தம்
எமதீர்த்தம்
தீர்த்தமலையின் பின்புறம் வேப்பம்பட்டி எனும்  கிராமத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் எமதீர்த்தம் உள்ளது. இம்மலையின் பின்புறம் உள்ள மலைத்தொடர்களுக்கு இடையே உயர்ந்த சிகரத்தினின்று ஓர் அருவி ஓடி ஓடையாக  அடிவாரத்தில் ஓடுகிறது. இந்த அருவி விழும் பாறையில் படர்ந்துள்ள மரவேர்களுக்கு கீழே சிறு குழியில் நிரம்பியுள்ள நீரே யம தீர்த்தம்எனப்படும் தருமர் தீர்த்தம்’. இவை வற்றுவதில்லை. இதனை ஒட்டி அழகான ஒரு சிறிய சிவன் கோவில் உள்ளது. அழகிய வேலைப்பாட்டுடன் இரட்டை நந்திகள் கருவறையின் முன்னே அமைந்துள்ளன. இக்கோயிலுக்கு வரும்பாதை முழுவதும் சீராகக் கற்கள் புதைக்கப்பட்ட பாதை உள்ளது. ஒரு காலத்தில் இந்த கோவில் சீரும் சிறப்புமாக இருந்திருக்கவேண்டும். இன்று பொலிவிழந்து காணப்படுகிறது.
வசிஷ்டர் தீர்த்தம்
தீர்த்தமலையின் வடகிழக்குச் சிகரத்தின் கீழ் மகரிஷி வசிஷ்டர் தவம்  கூறப்படும் குகை உள்ளது.    இப்பாறையின் வெடிப்பிலிருந்து சொட்டுசொட்டாக வசிஷ்டர் தீர்த்தம் வருகிறது.
அனுமன் தீர்த்தம்
அனுமன் தீர்த்தம் 

அரூர்-ஊத்தங்கரை மாநில நெடுஞ்சாலையில் தென் பெண்ணையாற்றின் கரையில் அமைந்துள்ளது அனுமன் தீர்த்தம். தீர்த்தமலையிலிருந்து 6 கி.மீ. தொலைவில் வடக்கு திசையில் அமைந்துள்ளது. இங்கு தென் பெண்ணையாற்றங்கரையில் வற்றாத கிணறு ஒன்று உள்ளது. அதில்  எப்போதும் நீர் நிரம்பி வழியும். தீர்த்தமலைக்கு வரும் பக்தர்கள், இந்த தீர்த்தத்தில் நீராடிய பின்னரே தீர்த்தமலைக்குச் செல்லவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.
இராமர் தனது சாப நிவர்த்திக்காக தீர்த்தமலை வந்து நீராடி பூசைகள் செய்யவேண்டி அனுமனிடம் நீர்கொண்டுவர பணித்தார். அவர் நீர் எடுத்து வர தாமதானதால் ராமர் மலையிலேய ஒரு தீர்த்தத்தை உருவாக்கி நீராடி பூசைகளை ஆரம்பித்துவிட்டார். இதனால் அனுமன் தான் கொண்டுவந்த தீர்த்தத்தை தூர வீசி எரிந்ததாகவும் அந்த நீர் விழுந்த இடமே அனுமன் தீர்த்தமாக பெயர் பெற்று விளங்குவதாகவும் தலபுராணம் கூறுகிறது. 
வருண தீர்த்தம் 
அரூர் நகரையொட்டிய வருணீசுவரர் கோயிலை ஒட்டி அமைந்துள்ள வருணீசுவரர் குளத்து நீர்தான் வருண தீர்த்தம்.