வெள்ளி, 16 செப்டம்பர், 2016

சுப்ரமணிய சிவா




சுப்ரமணிய சிவா
1884 - 1925

             சுப்ரமணிய சிவா என்றழைக்கப்பட்ட சுப்ரமணிய சிவம் ராஜம் அய்யர் - நாகலட்சுமி அம்மாள்  தம்பதியருக்கு 04-10-1884 ஆம் ஆண்டு வத்தலகுண்டு என்ற ஊரில் பிறந்தார். இவருக்கு ஞானாம்பாள், தைலாம்பாள் என்ற 2 சகோதரிகளும் வைத்தியநாதன் என்ற சகோதரரும் உண்டு.
   இவர் தமது 12ஆம் வயது வரை மதுரையிலும் பின்னர் திருவானந்தபுரத்திலும் அதன் பின்னர் ஓராண்டு கோவையில் தங்கி தனியார் தேர்வுக்காகப் படித்தார்.
       கோவையில் படித்துக்கொண்டிருக்கும் போது தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வந்த போயர் யுத்தத்தில் போயர்களின் வீரம் குறித்து ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதிவந்தார்.
          குடும்பச் சுமை காரணமாக சிவகாசியில்  காவல்துறையில் குமாஸ்தா வேலையில் சேர்ந்து ஒரே ஒரு நாள் மட்டும் பணி செய்துவிட்டு அவ்வேலையை உதறித்தள்ளி வெளியேறினார். 1889 ஆம் ஆண்டு இவருக்கும் மீனாட்சியம்மைக்கும் திருமணம் நடைபெற்றது.
        1906 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த தாவூர்க்கான் சந்திரவர்மா சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டு தேசபக்தியை இளைஞர்களிடம் தூண்டும்வகையில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபடத்தொடங்கினார். இதனால் திருவாங்கூர் சமஸ்தானம் இவரை அங்கிருந்து வெளியேற்றியது.  இக்காலக்கட்டத்தில்தான் இவருக்கு வ.உ .சியின் நட்பு கிடைத்தது. அதேபோல மஹாகவி பாரதியின் நட்பும் கிடைத்தது. இம்மூவரது நட்பும் தமிழக சுதந்திர போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. இவர்களை தமிழ்நாட்டின் தேசிய மும்மூர்த்திகள் என்று குறிப்பிடுவார்கள். இவர் வ.உ.சி.வுடன் இணைந்து நடத்திய விடுதலைப் போராட்டத்தினால் ஆங்கிலேய அரசால்   கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் மேல்முறையீட்டினால் 6 ஆண்டு தண்டனையாகக் குறைக்கப்பட்டு  02.12.1912 அன்று விடுதலை அடைந்தார். பிறகு சென்னையில் குடியேறினார். 
      சென்னையில் பிரபஞ்சமித்திரன் என்ற வாரப்பத்திரிகையையும் ஞானபானு  என்ற மாத இதழையும் நடத்தினார். பாண்டிச்சேரியிலிருந்து பாரதியார் பல்வேறு புனைப் பெயர்களில்  எழுதிய கதை,கவிதைகள்,கட்டுரைகள் என எண்ணற்ற படைப்புகள் ஞானபானு இதழில் வெளியிட்டு விடுதலை வேட்கையைத் தூண்டினார்.
      இவரது மனைவியார் 15-5-1915 அன்று சென்னையில் காலமானார். அதற்குப் பிறகு  ஊர் ஊராகச் சென்று  நாடு விடுதலைக்கு குறித்து பேசிவந்தார். 1919 ஆம் ஆண்டு தேசாந்திரி என்ற   தொடங்கினார்.  1920 ஆண்டு சென்னையில் நடைபெற்ற டிராட் தொழிலாளர்களுக்கு  ஆதரவாக தீவிரமாக உழைத்தார். அதே ஆண்டு கல்கத்தாவில் லாலா  லஜ்பதிராயின் ஒத்துழையாமை இயக்க மாநாட்டில்  கலந்துகொண்டு விபின் சந்திரபாலன் கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தார். மகாத்மா  காந்தியின் தாக்கத்தினால் தமிழ்நாடு பத்திரிகையில் திலகர்-காந்தி தரிசனம் என்ற சிறு நாடகம் ஒன்றை எழுதினார்.  சிவாவின் எரிமலைப் பேச்சு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியதன்  விளைவாக ஆங்கிலேய அரசாங்கம் அவருக்கு பலவழிகளில் தொல்லை கொடுத்தது. காந்தியத்தின் தாக்கம் இவரிடம் இருந்தாலும் இவரது போராட்டக்குணம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் 1921ஆம் ஆண்டு இவருக்கு இரண்டரை ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது. அனால் 2 வாரங்களில் இவர் சிறைத்தண்டனையிலிருந்து விடுதலைப் பெற்றார். மீண்டும் 27-11-1922 ஆம் ஆண்டு ஓர் ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது ஆங்கிலேய அரசு. இந்த காலத்தில் இவருக்குத் தொழுநோய் ஏற்பட்டது.  தொழுநோயினால் பாதிக்கப்பட்ட இவரை இரயில் பயணங்கள் மேற்கொள்ளக்கூடாது என்றும் தடை விதித்தது அரசு.  ஆனாலும் இவர் மாட்டுவண்டிகளிலும் நடைப்பயணமாகவும் ஊர் ஊராகச் சென்று தொடர்ந்து தேச விடுதலைக்காக பிரச்சாரம் செய்தார். மராட்டியசிவாஜியின் நாடகம் மூலம் தேசபக்தியைப் பரப்பினார்.
       இந்த பாரதநாட்டையே கடவுளாகக் கண்ட சிவாவுக்கு பாரதமாதா கோவில் ஒன்றைக் கட்டவேண்டும் என்ற தீராத ஆவல்கொண்டார். நாட்டின் ஒருமைபாட்டையும் கண்ணியத்தையும் பறைசாற்றும் வகையில் சாதி,மத பேதமில்லாமல், பாரதமதாவுக்கு கோவில் கட்ட 1919 ஆம் ஆண்டு தருமபுரியில் பாப்பரப்பட்டிக்கு அருகில் உள்ள ஆவணிஒன்னப்பகவுந்தனஹள்ளி கிராமத்தில் 6.21 ஏக்கர் நிலத்தை விலைகொடுத்து வாங்கினார். (தற்போது இந்த இடம் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது). அங்கு தமது ஆசிரமத்தை உருவாக்கி அதில் தேசபந்து சித்தரஞ்சன்தாஸைக் கொண்டு 23-01-1923 அன்று பாரதமாதா  கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். தேசவிடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களின்  உருவச் சிலைகளை அங்கு வைக்கவேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது.  அனால் அவர் இறக்கும் வரையில் அவரது முயற்சி கைகூடவில்லை.
      இராமகிருஷ்ண பரமஹம்ஸர் மீதும்  விவேகானந்தர் மீதும் உள்ள ஆழ்ந்த பற்றின் காரணமாக அவர்களது நூல்களை மொழிபெயர்த்தார். 
              1925ஆம் ஆண்டு கான்பூரில் நடைபெற்ற  கம்யூனிஸ்ட்  கட்சியின் முதலாவது மாநாட்டில் கலந்துகொள்ள இவர் விரும்பிய நிலையில் உடல்நிலை மோசமாகி இவரது சீடர் சுந்தரபாரதியின் துணையோடு 22-07-1925 அன்று பாப்பரப்பட்டிக்குத் திரும்பினார். அடுத்தநாள் 23-07-2025 வியாழக்கிழமை   அன்று அதிகாலை 5 மணியளவில் தனது 41-வது வயதில் உயிர்நீத்தார்.  
           அவரது உடல்  அடக்கம் செய்த  இடத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டது.  1984 ஆம் ஆண்டு அன்னாரது நூற்றாண்டு விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. அப்போது அவரது நினைவிடத்தில் நினைவுத்தூண் எழுப்பப்பட்டது. அஞ்சல்துறையின் சார்பாக சிவாவின்   உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.
    சிவாவிற்கு மணிமண்டபம் கட்டவேண்டும் என்பது பாப்பரப்பட்டி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது. தமிழக அரசு அதனை ஏற்று மண்டபம் கட்ட 40 லட்சம்   ரூபாய்  நிதி ஒதுக்கி கோவில் கட்ட சிவாவால் வாங்கப்பட்ட நிலத்தில் 205 சதுரமீட்டர் பரப்பளவில் செய்தி  மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அன்றைக்கு  இத்துறையில் பொறுப்பு வகித்த அமைச்சர் திரு. பரிதி இளம்வழுதி அவர்களால் 19-08-2010 அன்று  மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.  2011 ஆம் ஆண்டு மணிமண்டபம் திறக்கப்பட்டது.
          சிவாவின் நினைவாக அவரது பெயரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் அவர் பிறந்த ஊரான வத்தலகுண்டு பேருந்து நிலையத்திற்கும் வைக்கப்பட்டுள்ளது.
சுப்ரமணிய சிவா மணிமண்டபம்-பாப்பரப்பட்டி 


சுப்ரமணிய சிவா நினைவுத் தூண் 
   
     
சுப்ரமணிய சிவா சமாதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக