திங்கள், 31 அக்டோபர், 2016

ஸ்ரீகொல்லாபுரி அம்மன் கோவில்

 

கொல்லாபுரி   அம்மன் கோவில் 
        தருமபுரி நகரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் மாநில நெடுஞ் சாலையில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில், இருமத்தூர் கிராமத்தில் சாலையோரத்தில் அமைந்துள்ளது கொல்லாபுரி அம்மன் திருக்கோயில்.  இங்கு அம்மன்  சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறாள்.

   ஈஸ்வரருக்கு உணவு படைத்த ஒரு பெண்ணிற்காக ஈஸ்வரனே இந்த கோவிலைக் கட்டி வழிபட்டதாகவும், உரல் சத்தம், உலக்கை சத்தம் இல்லாத இடத்தில் அம்மன் அமர்ந்து அருள்பாலித்து வருவதாகவும் இக்கோயிலைப் பற்றியும், அம்மனைப் பற்றியும் கூறப்படுகிறது.
     குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த அம்மனை வழிபட்டு வந்தால் குழந்தை பேறு கிடைக்கும் என்றும், திருமணத்தடை நீங்கவும், நோய்கள் குணமாகவும் வேண்டிக்கொள்ள இங்கு பக்தர்கள் வருகிறார்கள்.
  பில்லி-சூனியத்தில் இருந்து விடுபடவும், களவு போன பொருட்கள் கிடைக்கவும், எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு வேண்டியும் இந்த கோயிலின் முன்பு உள்ள வேல், சூலம் மற்றும் ஈட்டிகளில் கோழிகளை உயிரோடு குத்தித்தொங்கவிடும் வழக்கம் உள்ளது. மரத்தில் கட்டப்பட்ட கோழி இறப்பதற்குள் களவுபோனப் பொருட்கள் திரும்ப கிடைத்துவிடும் என்றும், பில்லி-சூனியத்தில் இருந்து விடுபட்டு விடுவோம் என்பதும் இப்பகுதி மக்கள் நம்பிக்கை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்துவந்த இந்த வழக்கம் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. தற்சமயம் ஆடு, கோழி பலியிட்டு பொங்கல் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.
 மேலும் இங்கு பேய் ஒட்டுதலும் உண்டு. இந்த கோயில் பூசாரியே பேய் ஓட்டுவார்.
     ஆடி மாதத்தில் இங்கு திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திங்கள் மற்றும் வெள்ளிகிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.