வெள்ளி, 4 நவம்பர், 2016

வள்ளிமதுரை (வரட்டாறு) நீர்த்தேக்கம்


  

      தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், சித்தேரி மலையில் பருவமழைகளின் போது உற்பத்தியாகும் வரட்டாறு வானியாற்றின் துணை ஆறுகளில் ஒன்றாகும். இந்த ஆறு வள்ளிமதுரை, கீரைப்பட்டி, எல்லபுடையாம்பட்டி முதலான கிராமங்களின் வழியாக சென்று அரூர் நகருக்கு வடகிழக்கே வாணியாற்றில் கலக்கிறது.  
     வரட்டாற்றுப் படுகை அரூர் வட்டத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஆற்றின் நீர் பிடிப்புப் பகுதியின் பரப்பளவு சுமார் 1005 சதுர கி.மீ. ஆகும். இந்த பகுதியில் ஆண்டு சராசரி மழை அளவு 895 மி.மீ. இதன் அமைவிடம் 11°–12°  வடக்கு அட்ச ரேகைக்கும்  78° – 79° கிழக்கு தீர்க்கரேகைக்கும் இடையில் உள்ளது.  
    வரட்டாற்று நீரை பாசனத்திற்குப் பயன்படுத்திக்கொள்ள, சித்தேரி மலையின் அடிவார கிராமமான வள்ளிமதுரையில், வரட்டாற்றின் குறுக்கே ஒரு தடுப்பு அணை கட்டவேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது. 1977 ஆம் ஆண்டு, சுமார் முப்பத்து ஐந்து கோடி ருபாய் செலவில் இந்த அணை கட்டி முடிக்கப்பட்டது.  
      இந்த நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 110 மில்லியன் கன அடி ஆகும். வரட்டாறு நீர்தேக்கத்தின் வழியாக 15 கிராமங்களில் உள்ள பழைய  ஆயக்கட்டு ஏரிகளான 9 ஏரிகளும், புதிய ஆயக்கட்டு ஏரிகளான வலது, இடதுபுறக் கால்வாய் வழியாக உள்ள 15 ஏரிகளும் நிரம்பும் வகையில், அணை நிரம்பினால் அணையை திறந்துவிட வேண்டிய அவசியமில்லாமல் தானாகவே வழிந்தோடும் வகையில் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த வரட்டாற்று நீர்த்தேக்க அணையிலிருந்து வாணியாறு கணக்கன் அணைக்கட்டு வழியாக லிங்காபுரம் ஏரியை நிரப்ப வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
 இந்த நீர்த்தேக்கத்தின் மூலம், சாமநத்தம், சாமநத்தம் புதூர், குடுமியாம்பட்டி, கீரைப்பட்டி, அச்சல்வாடி, எல்லப்புடையாம்பட்டி, நாச்சினாம்பட்டி, கெளாப்பாறை, ஈட்டியம்பட்டி, மாம்பாடி, செல்லம்பட்டி, மாவேரிபட்டி, கம்மாளம்பட்டி, வள்ளிமதுரை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5,108 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக