வெள்ளி, 18 நவம்பர், 2016

திரு. எம்.கே. மாரியப்பன்



திரு. எம்.கே. மாரியப்பன்: (1907 – 1989)

      தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில், ஆதி திராவிடர் இனத்தில் 1907 ஆம் ஆண்டு,  திரு. மொட்டையன் கொன்னன் என்ற ஏழை சிறு விவசாயிக்கு மகனாகப் பிறந்த திரு எம்.கே. மாரியப்பன், 1913 ஆம் ஆண்டு வரை தனது பள்ளிப் படிப்பை பாப்பிரெட்டிப்பட்டியிலேயே முடித்தார். தனது 18 ஆவது வயதில் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து தனது நாட்டுக்கும் தான் சார்ந்த சமூகத்திற்கும் பணியாற்றத் தொடங்கினார். அன்றைய மதராஸ் மாகாணத்தில், ஆதி திராவிடர் இயக்கம் உருவாகி வந்ததை அறிந்து, தருமபுரி மாவட்ட ஆதி திராவிடர் நலச் சங்கத்தின் தலைமை பொறுப்பேற்றுப் பணியாற்றினார். இவர் தாழ்த்தப்பட்டவர்களுக்கான அடிப்படை உரிமைகளுக்காக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். 1942 ஆம் ஆண்டு, சுமார் ஆயிரம் பேருக்கும் மேலான தாழ்த்தப்பட்ட மக்களைத் திரட்டி தீர்த்தமலையிலுள்ள தீர்தகிரீஸ்வரர் கோயிலில் ஆலயப்பிரவேசம் செய்ய வைத்து வெற்றிகண்டார்.  
      திரு மாரியப்பன் அவர்கள் அதே 1942 ஆம் ஆண்டு, தாழ்த்தப்பட்டவர்களுக்கான கூட்டமைப்பில் தம்மை இணைத்துக்கொண்டு பணியாற்றினார். அண்ணல் அம்பேத்கார் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் திரு. என். சிவராஜ் அவர்களின் எண்ணங்களினாலும், கொள்கைகளினாலும் ஈர்க்கப்பட்டார். இதனால்  கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் பதவியை ஏற்று தமது பணியினைத் தொடர்ந்து வந்தார். 
     அன்றைய மதராஸ் மாகாணத்தில் 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், அரூர் (தனி) தொகுதியில் களம் இறங்கித் தோல்வி கண்டார். அடுத்து வந்த 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், அரூர் (தனி) தொகுதியில் காங்கிரசின் சார்பாக நின்று வெற்றிபெற்றார். அடுத்து 1967 ஆம் ஆண்டு தேர்தலிலும் அதே தொகுதியில் நின்று தோல்வியைத் தழுவினார். 
      திரு. மாரியப்பன், 1952 ஆம் ஆண்டு முதல் 1962 ஆம் ஆண்டு வரை தீர்த்தமலை, தீர்த்தகிரீஸ்வரர்  கோவிலில் ஒரு அறங்காவலராக இருந்தார். எந்தக் கோவிலில் தாழ்த்தப்பட்டவர்களை உள்ளே நுழைய விடாமல் இருந்தார்களோ, அதே கோவிலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான வழிபாடு செய்யும் உரிமையைப் பெற்றுத் தந்ததுடன், இவர் அறங்காவலாராக இருந்து, சமத்துவத்தையும், மத சுதந்திரத்தையும் காப்பாற்றினார். 
      திரு. மாரியப்பன் தனது கிராமத்தில் தமிழ்நாடு அரசின் கால்நடைத் துறையின் உதவியோடு ஆடு வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தைத் தொடங்கி தனது காலம் உள்ளளவும் அச்சங்கத்தின் தலைவராகப் பணியாற்றினார்.  


    திரு மாரியப்பன், முதலில் சின்னம்மா என்பவரையும் பின்னர் சின்னக்காள் என்பவரையும் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உண்டு. இவர் 28-1-1989 அன்று தனது 82 ஆவது வயதில் காலமானார்.



 

      
Thanks to:  Dalit Movement in India and its Leaders (1859-1956)  Pp: 266-267
  by  R.K. KSHĪRASĀGAR
  Published by: M D Publications Pvt. Ltd., in associate of Prints India, New Delhi.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக