செவ்வாய், 15 நவம்பர், 2016

கல்வட்டங்கள்


கல்வட்டங்கள்:

    தருமபுரி மாவட்டம் தமிழகத்தின் மிகவும் பழமையான கலாச்சாரம் கொண்ட பகுதிகளில் ஒன்றாக விளங்கிவருகிறது. சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தருமபுரி பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக எண்ணற்ற தொல்லியல் சான்றுகள் இம்மாவட்டத்தில் பல இடங்களில் கிடைத்தவண்ணம் இருக்கின்றன. இதன் மூலம் நுண்கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம்  போன்ற காலகட்டங்களில் வாழ்ந்த மக்களின் சமூக வளர்ச்சிநிலையை சர்வதேச அளவில் ஆய்வுகள் செய்ய இயலும். மேலும் இத்தகைய ஆய்வுகள் மூலம் தருமபுரி மாவட்டம், தொல்லியல் ஆராய்ச்சித் துறையில் மிக முக்கியமான மையமாக எதிர்காலத்தில் திகழும். 
 பெருங்கற்காலத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யும்போது, இறந்தவர் பயன்படுத்திய பலவகையானப் பொருட்களை அவரது உடலுடன் சேர்த்து வைத்து அடக்கம் செய்வது வழக்கம். இறந்தவர்களின் நினைவாக அவரை அடக்கம் செய்த இடத்தில் ஈமச்சின்னங்களாக பெரிய கற்களைக் கொண்டு அமைத்தவைதான் கல்திட்டைகள், கல்வட்டங்கள், கல்பதுக்கைகள், கற்குவியல்,  முதுமக்கள் தாழி முதலானவைகள். இவ்வாறு அடக்கம் செய்த இடத்தின் மேல் பெரிய கற்களை வைத்து ஈமச்சின்னங்களை உருவாக்கியதால் இந்த காலகட்டம் “பெருங்கற்காலம்” என்றும், மக்கள் இரும்பின் பயன்பாட்டை அறிந்து அதனை பயன்படுத்தி வந்ததால் “இரும்புக்காலம்” என்றும் அழைக்கப்பட்டது.  இந்த காலத்திய மக்களிடம் இரும்பின் தாக்கம் அதிக அளவில் இருந்துள்ளன, இவர்கள் நீர் நிலைகளை ஒட்டியே குடியிருப்புகளை அமைத்து வசித்து வந்துள்ளனர். ஏரி விவசாயத்திலும், நெற்பயிரிடுதலிலும், கால்நடை வளர்ப்பிலும் அறிவும் திறனும்  பெற்றிருந்தனர், எழுத்து முறையை கொண்டிருந்தனர், இறந்தவர்களுக்கு பலவிதமான முறைகளில் பெரிய பெரிய கற்களைக் கொண்டு ஈமச்சின்னங்கள் அமைத்துள்ளனர், பண்ட மாற்று முறையிலும், நாணய முறையிலும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்நிய தேசங்களுடன் வாணிபத்தொடர்பில் இருந்துள்ளனர்.
     இந்த பெருங்கற்கால (அ) இரும்புக்கால மக்கள் இறந்தவர்களைத் தங்களின் வசிப்பிடத்திற்கு அப்பால் உள்ள தரிசு நிலங்களில் அடக்கம் செய்து வந்துள்ளனர். இத்தகைய ஈமக்காடுகளில் அகழ்வாய்வுகள் செய்யப்படும்போது கிடைக்கின்ற மட்பாண்டங்கள், இரும்புக் கருவிகள், தங்கம், வெள்ளி, வெண்கலப் பொருட்கள், அணிகலன்கள், சுடுமண் பொம்மைகள் முதலானவைகள் மூலமே அவர்களின் வாழ்வியல் முறைகளை நாம் அறிந்துகொள்ள முடியும். தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல இடங்களில் ஈமக்காடுகள் உள்ளன.
   இத்தகைய ஈமக்காடுகளில் ஒன்றுதான் தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி-பென்னாகரம் சாலையில், நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட இண்டூர் கிராமத்தில் இருந்து நான்கு கி.மீ. தொலைவில் உள்ளது பங்குநத்தம் என்ற ஊரில் உள்ள ஏகல் கட்டு என்ற 2 மலைக்குன்றுகளிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காணப்படுகின்றன. சுமார் 66 ஏக்கர் பரப்பளவில், முன்னூறுக்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் மற்றும் கல்திட்டைகள் இப்பகுதியில் தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளன. 
    இதுபோன்ற தொல்லியல் சின்னங்களை அழியாமல் பாதுகாத்து மாவட்டத்துக்குப் பெருமை சேர்க்க வேண்டியது அரசின் கடமை. இல்லாவிடில் தருமபுரியின் பழமையான கலாச்சாரத்தை எதிர்கால சந்ததியினருக்குத் தெரியப்படுத்த வாய்ப்பில்லாமல் அழிந்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக