திங்கள், 7 நவம்பர், 2016

தியாகி ஜி.ஏ. வடிவேலு


தியாகி ஜி.ஏ. வடிவேலு:

 


          தர்மபுரியை அடுத்த அன்னசாகரம் கொல்லஹள்ளி கிராமத்தில் வெங்கடாசல நாயுடு-காத்தம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாக 12-06-1925 அன்று பிறந்தவர் தியாகி ஜி.ஏ. வடிவேலு அவர்கள். சிறு வயது முதலே சுதந்திர போராட்டத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவராக இருந்தவர். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் வருவாய் ஆய்வாளர் பணியில் சேர்ந்தார். பின்னர் அப்பதவியைத் துறந்து சுதந்திரப் போராட்டத்தில் தீவரமாக ஈடுபட்டார். காந்தியடிகளின் தனிநபர் சத்தியாகிரகத்தில் பங்குகொண்டார். தொடர்ந்து 1954-ல் புதுச்சேரி விடுதலை அடையும்வரை அங்கேயே தங்கியிருந்தார்.
       ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தீவீரமாக பணியாற்றி வந்தவர், 1948-ல், ராம் மனோகர் லோகியா தலைமையிலான சோசியலிஸ்ட் கட்சியில் இணைந்தார். அதன் பின்னர், ஜனதா கட்சியில் இணைந்து அதன் துணைத் தலைவரானார். தொடர்ந்து, தேவேகௌடா அவர்களின் தலைமையிலான மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இணைந்து, அக்கட்சியின் மாநிலத் தலைவராகப் பணியாற்றினார். அக்கட்சியின் அகில இந்திய துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.
         பின்னர் 2002-ல் சோனியா காந்தி முன்னிலையில் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மாநில காங்கிரசின் துணைத் தலைவராகவும், சொத்து பாதுகாப்பு குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.
       சுதந்திர போராட்ட காலத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு 17 முறை சிறைவாசம் அனுபவித்துள்ளார். 1975 ஆம் ஆண்டில் இந்திரா காந்தியின் ஆட்சியின்போது பிறப்பித்த அவசரநிலை பிரகடனத்தை எதிர்த்து ஜெயப்ரகாஷ் நாராயணன் போராடி கைது செய்யப்பட்ட நிலையில், அந்நிகழ்ச்சியைக் கண்டித்து திரு ஜி.ஏ. வடிவேலு அவர்கள் தருமபுரியில் போராட்டத்தை நடத்தினார்.
பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் தலைவராக இருந்த அவர், பட்டு நூல் விற்பனைக் குழுமத்தின் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி, சேலம், மதுரைப் பகுதி விவசாயத் தொழிலாளர் போராட்டங்களிலும், தருமபுரி, காஞ்சிபுரம் பகுதிகளில் நடைபெற்ற குடிசைவாழ் மக்களுக்கான போராட்டங்களிலும் தீவிரமாக ஈடுபட்டவர்.
       தருமபுரி ரயில் நிலையத்திற்கு அருகில் நீண்ட காலம் வசித்துவந்த ஏழை மக்களுக்காக ரயில்வே துறையிடம் போராடி அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வாங்கித் தந்துள்ளார். மேலும் சேலம் மாவட்டம் வனவாசி பகுதியில் வசித்து வந்த சுமார் 2000 ஏழை குடும்பங்களுக்காக பல போராட்டங்கள் நடத்தி, பட்டா வாங்கித் தந்துள்ளார். தலித்துகளுக்காக தீண்டாமையை எதிர்த்து உணவு விடுதிகளில் இரட்டை டம்ளர் வைப்பதை எதிர்த்துப் பலப் போராட்டங்களை நடத்தினார். தருமபுரி மாவட்ட மது விளக்கு தலைவராக பத்து ஆண்டுகள் இருந்தார்.   
      இவர் புதுச்சேரியில் இருந்தபோது “சோசியலிஸ்ட் என்ற பத்திரிகையை நடத்தியுள்ளார். மேலும் இவர் சேலத்தில் “புதுவாழ்வு என்ற இதழையும் நடத்தியுள்ளார். இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களும், தினமணி போன்ற பிரபலமான நாளிதழ்களிலும், வாரப்பத்திரிகைகளிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார். 
      சென்னை, கஸ்தூரி சீனுவாசன் அறக்கட்டளை திருமதி ரங்கம்மாள் பரிசை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறந்த நாவலுக்கு வழங்கி வருகிறது.  1987-ஆம் சிறந்த நாவலுக்கான பரிசுத்தொகையான 25000 ரூபாய் திரு. ஜி.ஏ. வடிவலு அவர்கள் எழுதிய “செம்பியர் திலகம் என்ற 1200 பக்கங்கள் கொண்ட இரண்டு பாகங்களாக வெளிவந்த வரலாற்றுப் புதினத்திற்கு கிடைத்தது. இந்த நாவலை பூம்புகார் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 
        சில காலம் உடல்நலன் குன்றி சேலத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இவர் 2016, ஜனவரி மாதம் 13-ந் தேதி அன்று தனது 91-ஆம் வயதில் காலமானார். இவரது மனைவியார் பட்டம்மாள் ஏற்கனவே காலமாகிவிட்டார். இவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர்.

           அன்னாரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதையை செய்தனர்.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக