திங்கள், 14 நவம்பர், 2016

சனத்குமார நதி




கூவம்நதியாய் மாறிப்போன சனத்குமார நதி:
மனிதனும் இன்ன பிற உயிரினங்களும் வாழ மிகவும் இன்றியமையாதது நீர். இது இயற்கை நமக்கு வழங்கிய அருப்பெருங்கொடை. அந்த நீரை மனிதன் செயற்கையாக உருவாக்கிப் பயன்பெறுதல் என்பது இயலாத காரியம். எனவேதான் மனிதகுலம் நீரை கடவுளாகப் பார்கிறது, வழிபடுகிறது. ஆனால் மனிதனின் பேராசைகள் எதையும் விட்டுவைப்பதில்லை. இந்த உலகில் இயற்கையைச் சூறையாடுவதில் மனிதனுக்கு நிகரானவர் யாருமில்லை. தனக்கு மட்டுமே இந்த உலகம் படைக்கப்பட்டிருப்பதாய் எண்ணி, இந்த உலகில் உள்ள ஏனைய உயிரினங்களைப் பற்றியோ, சக மனிதனின் வாழ்வாதாரங்களைப் பறிக்கிறோமே என்ற எண்ணம் துளிகூட இல்லாமல் வாழும் மனித கூட்டங்கள் தாம் மட்டுமே சுகபோகமாய் வாழ காடுகளையும், வன உயிரிகளை அழித்தும் நீர்நிலைகளை ஆக்ரமித்தும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தியும், அழித்தும் வருகின்றன. இப்படி காணமல்போன காடுகளையும் நீர் நிலைகளையும் மறு உருவாக்கம் செய்வது என்பது மிகவும் கடினமான செயல். இயற்கையை அழிப்பதை எத்தனை சட்டங்கள் இயற்றித் தடுக்க முயற்சித்தாலும், சட்டங்களிலுள்ள ஓட்டைகள் வழியே தப்பித்துக் கொள்ள அரசியல்வாதிகளும், அரசாங்கமும் இப்படிப்பட்டவர்களுக்கு ஒத்துழைப்பு தருவதுதான் வேதனையான விஷயம்.  
கடந்த வாரம் சென்னை மவுலிவாக்கம் பதினோரு மாடி கட்டடம் இடிக்கப்பட்டதை ஒட்டி, ஒரு தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் ஒருவர் மக்கள் தொகை பெருக்கத்தை சமாளிக்க, வறண்டு கிடக்கும் நீர்நிலைகளை தூர்த்து வீடுகள் கட்டப்பட்டால்தானே மக்கள் குடியேற முடியும். மக்களை தெருவிலா குடியிருக்கச் சொல்லமுடியும், இப்படிப்பட்ட இடங்களில் தொழிற்சாலைகள் அமைந்தால்தானே மக்களுக்கு வேலை வாய்ப்புப் பெருகும் என்றெல்லாம் பிதற்றிக்கொண்டிருந்தார். இவர், நீர் நிலைகளையும் விவசாய நிலங்களையும் அழித்து விட்டு பசிக்கு பர்கரையும் பீட்சாவையும், தாகத்திற்கு கோக்கையும் பரிந்துரை செய்வாரோ? சரி, விசயத்திற்கு வருவோம்...
சுமார் முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தருமபுரி நகர்ப் பகுதியை ஒட்டி ஒரு அழகான ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்ததைப் பற்றி உங்கள் வீட்டு பெரியவர்களிடம் (கேட்க மனமிருந்தால்) கேட்டுப் பாருங்கள். கோட்டை பரவாசுதேவ சுவாமி, மஹாலட்சுமி தாயார் சன்னதிக்கும், மல்லிகார்ஜுன சுவாமி சன்னதிக்கும் கிழக்கே கோவிலின் வெளி பிரகாரத்தின் சுற்றுச் சுவரை ஒட்டி ஓடிக்கொண்டிருந்த நதியின் படித்துறையில் நாள்தோறும் நீராடி முடித்து அருகில் உள்ள கோவில்களுக்குச் சென்று வழிபட்டதை கதைகதையாகக் கூறுவார்கள்.  இக்கோயில்கள் இரண்டும் கோட்டைக்குள் இருந்ததால், இவைகளை கோட்டைகோயில் என்றுதான் மக்கள் இன்றுங்கூட அழைக்கின்றனர். இந்த கோயில்களின் புண்ணிய தீர்த்தமாய் விளங்கிய அந்த நதிக்குப் பெயர் சனத்குமார நதி. 
கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின்போது, மக்களுக்கு உதவ நினைத்த கிழக்கிந்தியக் கம்பெனி கோட்டைச் சுவர்களை இடித்துத் தரைமட்டமாக்கும்படி கூறியதாகவும், 1883 ஆம் ஆண்டிலேயே கோட்டை சுற்றுச்சுவர்கள் இல்லை என்று திரு லே பானு கூறியிருப்பதும் வரலாறு. மேலும்  ஆக்ரமிப்புகளால் கோயில்களின் வெளி பிரகாரச்சுவர்கள் அழிந்துபோயின. கோவில்களின் எல்லைகள் சுருங்கி ஊர் பெரிதானது. தருமபுரி - திருப்பத்தூர் மாநில நெடுஞ்சாலை வந்ததால் நதியின் போக்கு  மாறி திருப்பத்தூர் மொரப்பூர் சாலைப் பிரிவு வழியாக பயணித்தது. 
         தமிழ்நாட்டின் முக்கிய ஆறுகளில் ஒன்றான தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றுதான் சனத்குமார நதி. தருமபுரியை ஒட்டிய வத்தல் மலையின் நீர்பிடிப்புப் பகுதியிலிருந்து வரும் நீர் அப்பனஹள்ளி கோம்பை கிராமத்துக்கு அருகே நதியாக உருவெடுக்கிறது. இங்கிருந்து இந்த நதி, தருமபுரி நகரைச் சுற்றி ஓடி சுமார் நாற்பது கிலோமீட்டர் பயணித்து கம்பைநல்லூர் ஏரிக்குச் சென்று பின்னர் தென்பெண்ணையாற்றில் கலக்கிறது. லளிகம், மிட்டாரெட்டிஹள்ளி, ஏமகுட்டியூர், இலக்கியம்பட்டி, அன்னசாகரம் வழியாக இந்த நதியின் கால்வாய் செல்கிறது. இடையில் உள்ள லளிகம் பெரிய ஏரி, அதியமான்கோட்டை ஏரி, மாதேமங்கலம் சோழவராயன் ஏரி, ஒட்டப்பட்டி ஏரி, நூலஹள்ளி ஏரி, கோவிலூர் ஏரி, ஏமகுட்டியூர் ஏரி, அன்னசாகரம் ஏரி, இலக்கியம்பட்டி ஏரி, மொடக்கேரி, ராமக்காள் ஏரி, மதிகோன்பாளையம் ரெட்ரி ஏரி, ஹளே தருமபுரி ஏரி, குண்டலப்பட்டி பக்கிரிகுட்டை ஏரி, செட்டிக்கரை ஏரி முதலான பல ஏரிகள் இந்த நதியால் மழைக்காலங்களில் நிரம்பி வழிந்து, வழிநெடுக பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில், கரும்பு, வாழை, நெல், மஞ்சள் என விவசாயம் செழித்து விளங்கக் காரணமாய் இருந்துள்ளது.  இந்த நதியால் ஏரிகள் மட்டுமல்ல, தருமபுரி நகரிலும் அதனை ஒட்டியுள்ள கிராமங்களிலும் உள்ள சர். தாமஸ் மன்றோ உருவாக்கிய கான் சாஹிப் குளம், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆங்கிலேய அதிகாரிக்கு கீழ் பணியாற்றிய நரச ஐயர் என்பாரது பெயரால் உள்ள நரசையர் குளம், குண்செட்டி குளம், பலப்பன்குட்டை போன்று வழிநெடுகிலும் எத்தனையோ குளங்கள் நிரம்பி அதனைச் சுற்றியுள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயரக் காரணமாய் இருந்துள்ளது. (இன்று பலப்பன்குட்டை தருமபுரி நகராட்சியின் பூங்காவாக மாறிவிட்டது. நகராட்சிக் குப்பைகளாலும், கட்டடக் கழிவுகளாலும் இந்த குளத்தை தூர்த்து விட்டு பூங்காவாக ஆக்கிவிட்டார்கள்!!)
1946 ஆம் ஆண்டு சனத்குமார நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அன்னசாகரம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு அந்த கிராமத்தில் பல வீடுகள் மூழ்கிப் போனது என்றும் அதில் தியாகி தீர்த்தகிரி முதலியார் அவர்கள் வீடும் கூட மூழ்கிபோய் அவர் அந்த கிராமத்தை விட்டு, குடியாத்தம் பகுதிக்குக் குடிபெயர்ந்து சென்றதாகவும் அவரது வாழ்க்கை வரலாற்றில் இருந்து அறிந்துகொள்ளலாம். (இந்த அன்னசாகரம் ஏரி நிரம்பினால் அதன் உபரிநீர், போக்குக்கால்வாய் வழியாக வெளியேறி கடத்தூர் ஏரிக்குச் சென்று, பின் அங்கிருந்து அரூர் பெரிய ஏரிக்கு செல்வதற்கும் வாய்க்கால்கள் இருந்ததாக மூத்தகுடிமக்கள் சொல்ல நான் கேள்விப்பட்டிருக்கிறேன்).
நான் முந்தைய கட்டுரைகளில் குறிப்பிட்டதைப் போல, விவசாயத்திற்கும், மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் மழைநீரை மட்டுமே நம்பியிருக்கக்கூடிய ஒரு மாவட்டம் நமது தருமபுரி மாவட்டம். அந்த மழைநீரை முழுமையாக சேகரிக்க நமது முன்னோர்கள் மிகவும் சிரத்தையுடன் உருவாக்கிவிட்டுச் சென்ற இந்த நீர் ஆதாரங்களை மிகக் குறுகிய காலத்தில் நாம் அழித்து விட்டோம் என்பதே வேதனையான விஷயம்.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்புகூட நீர்வரத்துடன் காணப்பட்ட இந்த சனத்குமார நதி, இன்று நீர் செல்லும் கால்வாய்கள் ஆக்ரமிக்கப்பட்டும், தூர்ந்து போய், குப்பை மேடாகவும், புதர்மண்டியும் போனதால், நதி மாசுபட்டு  நகரத்தின் குப்பைக்கூளங்களை சுமந்து செல்லும் சாக்கடையாக மாறி அழிந்தே போய் விட்டது. ஏரிகளும் நீர்வரத்து இன்றி வேலிக்கருவை காடுகளாகி விட்டன. புதர்மண்டிய ஏரிகளில் ஆக்ரமிப்புகளால் அவைகளின் பரப்பளவு நாளுக்குநாள் குறைந்துகொண்டே வருகின்றன. சனத்குமார நதியின் வழித்தடம் தேடி நான் பயணித்தபோது வழிநெடுகிலும் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என்னிடம் பகிர்ந்துகொண்ட சில விசயங்கள்:  
  • பெரும்பாலான ஏரிகள், வரத்து மற்றும் போக்குக்கால்வாய்கள் தூர்வாரி 15 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன. 
  •  ஏரிகள், வரத்து மற்றும் போக்குக்கால்வாய்களில் ஆக்ரமிப்புகள் நடைபெறுவதை அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை.
  • புகார் மனுக்கள் கொடுத்தால் செல்வாக்கு மிக்கவர்களிடம் இருந்து வரும் மிரட்டல்களுக்கு அஞ்சியே யாரும் புகார்கள் கொடுப்பதில்லை.
  • ஏரிகளின் நீர் கொள்ளளவு மிகவும் குறைந்துவிட்டன. எனவே பெய்யும் சிறிதளவு மழைநீரும் தேங்க வழியின்றி வீணாகிவிடுகின்றன.
  •  ஏரிகளின் வளமான வண்டல்மண் அளவுக்கதிகமாக திருட்டுத்தனமாக அள்ளப்பட்டதால், ஏரிகள் நீரை உள்வாங்கும் திறனின்றி, கட்டாந்தரையாகிக் கொண்டிருக்கின்றன.
  • ஓரிரு முறை ஏரிகள் நிரம்பினாலும், வேலிக்கருவை மரங்களால் நீர் விரைவில் ஆவியாகிப் போய்விடுவதால் இருக்கும் நீரை நம்பி சாகுபடி செய்வது இயலாத காரியம். 
  • ஏரிகள் நீரின்றி கிடப்பதால், சுற்றுப்பகுதி கிணறுகளின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துபோய் விட்டது. 
  • குடிநீர் ஆதாரமின்றி, கால்நடைகளின் வளர்ப்பும் குறைந்துகொண்டே வருகிறது.
  •  வேலிக்கருவை மரங்களை ஏரிகளிலிருந்து போர்க்கால அடிப்படையில் அகற்றவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும்  இதுவரை எந்தவொரு ஏரியிலும் வேலிக்கருவை மரங்கள் வேரோடு முழுமையாக அகற்றப்படவில்லை. நூறுநாள் வேலைத்திட்டத்தில் வெறும் கிளைகள் மட்டுமே வெட்டி அகற்றப்பட்டன. தற்போது, அவைகள் மீண்டும் துளிர்த்து மரங்களாகிவிட்டன. அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் ஊராட்சி மன்றங்களும் இதுகுறித்து அவ்வப்போது தீர்மானங்கள் இயற்றுவதோடு நின்றுவிடுகிறது. செயல்பாட்டில் இல்லை. கேட்டால் ஊராட்சியில் போதுமான நிதி வசதி இல்லை என்ற பதிலையே சொல்கிறார்கள்.  
  • மக்கள் பிழைப்பு தேடி வெளியூர் செல்வதும் தவிர்க்க இயலாததாக உள்ளது.   
இதற்குக் காரணம் மக்களின் அறியாமை மட்டுமல்ல, நீர் வளங்களைப் பாதுகாக்கும் அரசுத் துறைகளின் மெத்தனமும், அரசியல் செல்வாக்குமிக்கவர் களின் அதிகாரம் மற்றும் பணபலம், எதிர்காலம் பற்றிய சிந்தனையற்ற அதிகாரிகளின் திட்டமிடல்கள், தேவையான நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம், ஒதுக்கப்பட்ட நிதியை வேறு திட்டங்களுக்கு செலவிடுதல், சாதாரண ஏழை எளிய குடிமக்களின் உணர்வுகளை, தேவைகளை, ஆலோசனைகளை செவிமடுக்க விரும்பாத அலட்சியப் போக்குமே என்று சொன்னால் மிகையாகாது.
பழைய வரைபடங்களில் இருந்த எத்தனையோ நீர் நிலைகள், துணை ஆறுகள் இன்றைய வரைபடங்களில் காணவில்லை. பெய்யும் மழை நீர் தேங்கி, மனிதகுலத்தை வாழ வைத்துக் கொண்டிருந்த நீர் நிலைகள் எல்லாம் ஆக்ரமிப்புக்கு உள்ளாகி வருகின்றன. சாக்கடைகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. (சேலம் திருமணிமுத்தாறு, சென்னை கூவம் ஆறு- சில உதாரணங்கள்) இப்படியான ஆக்ரமிப்புகளால் சனத்குமார நதியும், அதன் கால்வாய்களும் அடுத்த 10 ஆண்டுகளில் வரைபடத்தில் இருந்து மறைந்துவிடலாம். இந்த நதி பாய்ந்து சென்ற இடங்கள் யாவும் வீட்டு மனைகளாக, ஷாப்பிங் மால்களாக மாறிவிடலாம். சுகாதார சீர்கேட்டினிடையே வாழ்ந்து மடியப்போகிறோமா? அல்லது இப்படியான நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்தி அவைகளை நமது எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்லப்போகிறோமா? சிந்திப்போம்...
எதிர்காலம் செழிக்க செயல்படுவோம்...
(உங்கள் பார்வைக்கு: தருமபுரியில் சில ஏரிகளின் தற்போதைய நிலை)
 
 
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக