வியாழன், 17 நவம்பர், 2016

முதலைகள் மறுவாழ்வு மையம்

    புலிகள் வாழும் காடுகள் வளமாக இருக்கும். அதேபோல முதலைகள் இருக்கும் நீர்நிலைகளின் சுற்றுச்சூழல் மிகவும் தூய்மையாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும். நீர்நிலைகளில் உள்ள மீன்களை வேட்டையாட வரும் விலங்கினங்களை முதலைகள் உணவாகக் கொள்வதால், மீன் இனங்கள் காப்பாற்றப்படுகின்றன. இந்த மீன் இனங்கள் சிறு உயிரிகள், கழிவுகளை உன்று நீர் நிலைகளை தூய்மையாக வைத்திருக்க உதவுகின்றன. வேட்டையாடியும்  மற்றும் இறந்துபோன விலங்கினங்களையும் முதலைகள் உண்பதால் ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் எண்ணிக்கையை சமநிலையில் வைத்திருக்கவும் முதலைகள் உதவுகிறது.
உலகில் உள்ள மிகப்பெரிய பல்லி இனம் முதலையே ஆகும். இது ஊர்வன இனத்தைச் சார்ந்தது. நான்கு  கால்களையும் வலுவான வாலினையும் கொண்டது, இரைகளைத் தாக்க வலுவான  தாடைகளையும் கூரான பற்களையும் கொண்டவை. இவைகள் பதுங்கித் தாக்கும் குணம் கொண்ட வேட்டை விலங்கினமாகும். குறைந்த வெப்ப ரத்த பிராணிகள் வகையைச் சேர்ந்த இந்த முதலைகளால் வெகு காலம் வரை உணவின்றி இருக்க இயலும். முதலைகள் அதிக அளவு செரிமான சக்தி பெற்றவை. இதன் செரிமான உறுப்புகளில் சுரக்கும் அமிலம், கற்கள், எலும்புகள் போன்றவைகளையும் கரைக்கும் ஆற்றல் கொண்டது.
உலக அளவில் சுமார் 23 வகையான முதலை இனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆசியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா கண்டங்களில் உள்ள வெப்பமண்டலப் பகுதிகளில் முதலைகள் வசிக்கின்றன. இந்தியாவில் சதுப்பு நில அல்லது மக்கர் முதலை, உப்புநீர் முதலை மற்றும் கரியால் முதலை என 3 வகை முதலை இனங்கள் வாழ்கின்றன. முதலைகளின் வாழ்விடங்களான நீர்நிலைகள் அழிந்துகொண்டே வருவதாலும், முதலைகளின் தோலுக்காக திருட்டுத்தனமாக கொல்லப்பட்டு வருவதாலும் முதலைகள் அழிவு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன.
1975 ஆம்  ஆண்டு முதலை இனங்களை அழிந்துவரும் விலங்கினங்கள் பட்டியலில் சேர்த்து அவைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது.  அந்த வகையில் தமிழ்நாட்டில், வத்துறையின் பராமரிப்பில்,  சாத்தனூர், அமராவதி, ஒகேனக்கல் ஆகிய இடங்களில் முதலைப் பண்ணைகள் தொடங்கப்பட்டன. (திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியிலுள்ள சாத்தனூர் அணைக்கட்டில் அமைந்துள்ள முதலை பண்ணை ஆசிய கண்டத்திலேயே மிகவும் பெரியதாகும். இங்கு சுமார் 138 பெண் முதலைகள் உட்பட 373 முதலைகள் உள்ளன.) இந்த பண்ணைகள் மூலம் முதலைகள் இனப்பெருக்கம் அதிகரித்ததால் தற்சமயம் முதலைகள் அழிந்துவரும் விலங்கினங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. அவ்வப்போது ஏரிகள், ஆறுகளில் இருந்து வெளியேறி மக்களுக்குத் தொல்லைதரும் முதலைகளைப் பிடித்து, இந்த பண்ணைகளுக்குக் கொண்டுவந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
தற்சமயம் ஓகேனக்கல் முதலைகள் பண்ணையில் 120 முதலைகள் உள்ளன. சுமார் 10 அடி முதல் 12 அடி நீளம் கொண்ட முதலைகள் 80 உள்ளன. 5 முதலைக் குட்டிகளும் உள்ளன. 12 அடி ஆழம் கொண்ட 23 தண்ணீர் தொட்டிகளில் இந்த முதலைகள் வளர்க்கப்படுகிறது. வாரம் ஒருமுறை முதலைகள் இருக்கும் தண்ணீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்படுகின்றன.
இங்குள்ள முதலைகள் ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றன. ஒரு முதலை சராசரியாக 50  முதல் 70 முட்டைகளை ஒரு பருவத்தில் இடுகிறது. இனப்பெருக்கம் அதிகரித்து விட்டதால் முட்டைகள் செயற்கையாக அழிக்கப்பட்டு வருகின்றன. சில வேலைகளில் முதலைகளே தாங்கள் இடும் முட்டைகளை சாப்பிட்டுவிடுவதும் உண்டு.
இந்த முதலைகளுக்குத் தேவையான தண்ணீர் தொட்டிகள் போதுமானதாக இல்லை என்பதும், இடப்பற்றாகுறையினால் இவைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என்பதும், கால்நடை மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சைகள் இவைகளுக்குக் கிடைக்கிறதா? என்ற கேள்வியும், இவைகளுக்கு வழங்கப்படும் உணவு போதுமானதாக இல்லை என்பதுமான குற்றச்சாட்டுகள் நிறையவே உள்ளன. ஒரு முதலைக்கு சராசரியாக, வாரத்திற்கு 2 கிலோ மாட்டிறைச்சி உணவு தேவை. ஆனால் இங்கு வாரம் இரண்டு முறை, செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ஒரு முதலைக்கு அரைகிலோ வீதம் மாட்டிறைச்சியை மட்டுமே உணவாகக் கொடுக்கப்பட்டு வருகிறது. உணவுப் பற்றாக்குறையினால் முதலைகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக்கொண்டு காயத்துடன் காணப்படுகின்றன.
இந்த முதலை பண்ணையை பார்க்க கட்டணமாக 5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பார்வையாளர்கள் மேலிருந்து கீழ்நோக்கிப் பார்க்கும் வகையில் இரும்பு கம்பியால் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. பார்வை நேரமாக காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் உள்ளது. 
தற்போது இந்த முதலைகள் பண்ணையை பார்வையிட வரும் பார்வையாளர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு, இந்த முதலைகள் பண்ணையை “முதலைகள் மறுவாழ்வு மையம் என்று பெயர் மாற்றம் செய்ததுடன், பண்ணையை மேம்படுத்தத் தேவையான நடவடிக்களையும் மேற்கொண்டு வருகிறது.
 
 










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக