செவ்வாய், 15 நவம்பர், 2016

தருமபுரி நகராட்சி

தருமபுரி நகராட்சி:



            இன்றைய தருமபுரி மாவட்டத்தின் தலைநகரமாக இருக்கக்கூடிய தருமபுரி, ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் ஒருப்பகுதியாக இருந்த தருமபுரி வட்டத்தில், தருமபுரி நகராட்சி 01-04-1964 அன்று உருவாக்கப்பட்டது. இந்த நகராட்சி மூன்றாம் நிலை நகராட்சியாக 14-02-1964 ஆம் ஆண்டு தொடங்கியது. பின்னர் முதல் நிலை நகராட்சியாக 01-10- 1987 ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. இந்நகராட்சி 02-12-2008 ஆம் ஆண்டில், முதல் தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்ந்துள்ளது. தற்போதுள்ள மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 33.  இந்நகராட்சியின் மொத்தப் பரப்பளவு 11.65 சதுர கி.மீ. தருமபுரி நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 68>595. 
         தருமபுரி நகராட்சி உருவானதற்குப் பிறகு 1969 ஆம் ஆண்டு முதல் முறையாக நகர் மன்றம் உருவாக்கப்பட்டது. 
 தருமபுரி நகராட்சியின் முதல் தலைவராக தி.மு.க-வை சேர்ந்த திரு.டி.வி.வடிவேலன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்து காங்கிரசை சேர்ந்த திரு.டி.என். வடிவேல் கவுண்டர் 1986-ஆம் ஆண்டு முதல் 1991-ஆம் ஆண்டு வரை தலைவராக இருந்து பணியாற்றினார். இவரைத் தொடர்ந்து மீண்டும் தி.மு.க.வை சேர்ந்த திரு. சிட்டி. வி. முருகேசன் 1996 முதல் 2001 வரை தலைவராக இருந்தார். இவருக்குப் பின் 2001 முதல் 2006 வரை அ.தி.மு.க.வை சேர்ந்த திரு.அ.வெற்றிவேல் தலைவராக பணியாற்றினார். இவர் பென்னாகரம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட தனது நகராட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததால் நகராட்சியின் துணைத் தலைவராக இருந்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்த திருமதி. மலர்விழி குப்புசாமி 2006 ஏப்ரல் மாதம் முதல் தேதி முதல் நகராட்சி தலைவராக பணியாற்றினார். இவரைத் தொடர்ந்து 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை காங்கிரசை சேர்ந்த திரு டி.சி. ஆனந்தகுமார் நகர் மன்றத் தலைவராகப் பணியாற்றினார். இவருக்குப் பின் 2011 முதல் 2016 வரை அ.தி.மு.க.வை சேர்ந்த திருமதி. சுமதி தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.  
 தருமபுரி நகராட்சி எல்லைக்குள் ஹளே தருமபுரி, வெள்ளேகவுண்டன் பாளையம், அன்னசாகரம், விருப்பாட்சிபுரம் ஆகிய வருவாய் கிராமங்கள் உள்ளன.      
தருமபுரி நகராட்சியை அருகிலுள்ள ஊராட்சிகளை இணைத்து விரிவுபடுத்தவேண்டும் என்பது பல ஆண்டுகாலமாக மக்களின் கோரிக்கையாக இருந்தது. அதன் அடிப்படையில் தருமபுரி நகராட்சியுடன் செட்டிக்கரை, இலக்கியம்பட்டி, தடங்கம், சோகத்தூர், ஹளே தருமபுரி, ஏ.கொல்லஹள்ளி, அதியமான்கோட்டை, ஏ.ஜெட்டிஹள்ளி ஆகிய எட்டு ஊராட்சிகளை இணைத்து நகராட்சியை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்றுவருகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக