புதன், 13 பிப்ரவரி, 2019

“பாப்பரப்பட்டி காந்தி” தியாகி ஆர். சுப்பாராவ் (06-07-1906 – 31-07-1995)


1906 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் தேதி, தருமபுரியை அடுத்த பாப்பாரப்பட்டி அக்ரஹாரத்தை சேர்ந்த ராமகிருஷ்ண ஐயர்-வெங்கம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் சுப்பாராவ். பள்ளிப்படிப்பை முடித்த கையோடு, ஆசிரியர் பயிற்சிப் படிப்பையும் முடித்து, 1932 ஆம் ஆண்டில், தாம் பிறந்த பாப்பாரப்பட்டியிலேயே தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். சிறு வயதிலேயே காந்திஜியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட சுப்பாராவ், தாழ்த்தப்பட்ட மாணவ மாணவியரை பள்ளியில் சேர்ந்து பயிலவேண்டியதின் அவசியம் குறித்து கிராமந்தோறும் பிரச்சாரங்கள் மேற்கொண்டு அவர்களை பள்ளியில் சேர்க்க பெரும் முனைப்பு காட்டிவந்தார். 1943 ஆம் ஆண்டில், தமது பள்ளியில், கிராமப்பகுதி மாணவமாணவியர் வறுமையின் காரணமாக பள்ளிக்கு வரமுடியாத காரணத்தை அறிந்து பொதுமக்களிடம் நிதி திரட்டி, மாணவ மாணவியருக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடுகள் செய்தார். தாம் பணியாற்றிய பள்ளியிலேயே தங்கி, கல்விப்பணியில் ஈடுபட்டு வந்த சுப்பாராவ், தாம் பணியாற்றிய பள்ளியை, உயர்நிலைப்பள்ளியாக மாற்றவேண்டும் என்று எண்ணி, பள்ளிக்கான கட்டடங்கள் கட்ட பொதுமக்களிடம் நிதி திரட்டி பள்ளி கட்டடங்களைக் கட்டினார். இவரது முயற்சியினாலேயே பாப்பாரப்பட்டியில் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளியானது. அத்தோடு, இவரே பொதுமக்களிடம் நிதி திரட்டி பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக் கட்டடங்களை கட்டவும் ஆவண செய்தார். பாப்பரப்பட்டியின் ஜமீன்தார் கிருஷ்ணமூர்த்திராவ் என்பார், தமது மகளை இவருக்குத் திருமணம் முடிக்க எண்ணி கேட்டபோது, கல்விப்பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டதால், எந்நேரமும் மாணாக்கர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதிலேயே அதிக கவனம் செலுத்திய காரணத்தால், திருமணம் செய்து கொள்வதுகூட தமது கொள்கைக்கு பகையாகிவிடும் என்று திருமணத்தை மறுத்து, இறுதிகாலம்வரை பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தவர். “பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று யாரும் கிடையாது. அனைவரும் சமமானவர்களே” என்று, பிறப்பால் உயர்குலத்தில் பிறந்த சுப்பாராவ் தமது பூணூலை அவிழ்த்து எறிந்தவர். தமது ஊதியத்தையும், கூட ஏழை எளிய மக்களுக்கு வழங்கினார். இந்திய விடுதலைப்போரில் பங்குபெற்ற இவர், தீவீரமாக அரிசனமக்களின் ஆலயப்பிரவேசம், கதராடை, மதுவிலக்கு முதலான பிரச்சாரங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். தியாகி சுப்பிரமணிய சிவா, சேலம் சிறைச்சாலையிலிருந்து வெளிவந்ததும், அவரை பாப்பரப்பட்டிக்குக் கூட்டி வந்து தங்க வைத்தவர்களுள் பாப்பரப்பட்டி சின்னமுத்துமுதலியார், கந்தசாமிமுதலியார் ஆகியோருடன் சுப்பாராவும் ஒருவர். சிவா அவர்கள், தமது இறுதிக்காலத்தில், பாப்பரப்பட்டியிலேயே தங்கி தேச விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டபோது அவரின் சீடராக இருந்து அவருக்கு அனுக்கத் தொண்டாற்றியவர்களுள் இவரும் குறிப்பிடத்தகுந்த ஒருவர்.  1967 ஆம் ஆண்டு தமது ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவர், பாப்பாரப்பட்டியில் தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் அவர்களின் நினைவாக தேசபந்து ஆசிரமத்தை துவங்கினார். இந்த ஆசிரமத்திலேயே தங்கி இரவில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வகுப்புகள் எடுத்துவந்தார். மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆசிரமத்தில் ஒரு நூலகமும் அமைத்தார். தமக்கு அரசு வழங்கிய தியாகி உதவித்தொகையைக் கூட தம்மிடம் உதவிக் கேட்டு வரும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கினார். இவர்பால் அன்பு கொண்டவர்களுள் காமராஜரும் ஒருவர். சுப்பாராவ் ஒருமுறை சட்டமன்றத் தேர்தலில் நின்று தோல்வியைத் தழுவியவர்.
நல்ல ஆசிரியர், சுதந்திரப்போராட்ட தியாகி, சமுதாயத் தொண்டில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் என்ற பண்முகத்தன்மை கொண்ட தியாகி சுப்பாராவ் அவர்கள், 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் தேதி இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார். அன்னாரது அஸ்தி, அவர் இறுதிக்காலம் வரை வாழ்ந்த தேசபந்து ஆசிரமத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காக தமது வாழ்நாளை அர்ப்பணித்த அன்னாரின் தியாகம் போற்றுதலுக்குரியது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக