ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

பி.ஆர். ராஜகோபால் கவுண்டர்


அன்றைய மதராஸ் மாகாணத்தில், 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் சட்ட மன்றத்  தேர்தலில், சேலம் மாவட்டத்திற்குட்பட்ட, தருமபுரி தொகுதியில் சுயேச்சையாக நின்று, தம்மை எதிர்த்துப் போட்டியிட ஆர்.எஸ். வீரப்ப செட்டியார் என்பவரை வெற்றிகண்டு, முதல் சட்டமன்ற உறுப்பினரானவர் பி.ஆர். ராஜகோபால் கவுண்டர் அவர்கள்.
தருமபுரி நகராட்சிப் பகுதியில் இன்றைய மதிகோண்பாளையத்தில், 1901 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் நாள், பீம கவுண்டர்-சின்னதாயம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர், ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவர், தமது 23ஆவது வயதில், பொதுவாழ்வில் ஈடுபட ஆரம்பித்தார், 1930 ஆம் ஆண்டு, தருமபுரியில், வன்னிய இளைஞர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக “வன்னிய இளைஞர் சங்கம்” என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார்.
மதிகோண்பாளையத்தை ஒட்டிய இராமக்காள் ஏரி வடிகால் பாசனத்தில் இவருக்குச் சொந்தமான செழிப்பான வயல்கள் உண்டு. இவைகளைத் தமது நேரடிப் பார்வையில் கண்காணித்து வந்துள்ளார். மேலும், நெல் அறவை ஆலை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். புளியந்தோப்புகளை எல்லாமெடுத்து புளி பதப்படுத்தி விற்பனை செய்தும் வந்துள்ளார். தமது வருமானத்தில் பல தரும காரியங்களை செனிதுவந்துள்ளார். தமக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்களை தமது ஊர் மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். மதிகோண் பாளையத்தின் ஊர் கவுண்டராக இவரது குடும்பம் இன்றளவும் விளங்கி வருகிறது. இவருக்கு சாதி மதங்களைக் கடந்து அனைத்துத் தரப்பிலும் ஏராளமான நண்பர்கள் உண்டு. இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், தற்போதைய பேருந்து நிலையம் இருக்கும் பகுதியில் உள்ள ஒரு பகுதியை இவரது இஸ்லாமிய நண்பர்கள், சங்கம் ஆரம்பிக்க இலவசமாகக் கொடுத்துள்ளார். அதுவே முகம்மது அலி கிளப் சாலயில் உள்ள வக்பு வாரியத்திருக்குச் சொந்தமான மௌலானா முகமது அலி ஜவ்கர் இஸ்லாமியர் முன்னேற்ற சங்கம் மற்றும் உருதுப்பள்ளி, மசூதி அமைந்துள்ள இடம். மேலும் இன்றைய பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள தமது ஒரு ஏக்கர் நிலத்தை பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகள் இளைப்பாற பூங்கா அமைக்க, இலவசமாகத் தந்துள்ளார். (இன்று இந்த பூங்கா தருமபுரி நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது). இதன் காரானமாகவே, பேருந்து நிலையத்திற்கும், பூங்காவிற்கும் அன்னாரது நினைவு என்றென்றும் மக்கள் நினைவில் இருக்கும் வகையில் இவரது நினைவை  போற்றும் வகையில் இவரது பெயர் சூட்டப்பட்டு இன்றும் நிலைத்து நிற்கிறது.  மேலும் இவரது பெயரில் நகர்ப்பகுதியில் ஒரு தெருவும், மதிகோண்பாளையத்தில் உள்ள ஒரு வீதியும் உள்ளது.



இவர் தருமபுரி கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் மஞ்சள் காமாலை நோய்க்கு ஆளாகி தமது 70 ஆவது வயதில், 07-02-1970 அன்று உயிர் நீத்தார். இவரது வாரிசுகள், தருமபுரி நகரில் வசித்து வருகின்றனர். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக