திங்கள், 11 பிப்ரவரி, 2019

பாவலர் மணிவேலனார்



பாவலர் மணிவேலனார் (இயற்பெயர் பெ.இரத்தினவேலு) தருமபுரி மாவட்டம், கடத்தூருக்கு அருகே அஸ்திகிரியூர் என்ற சிற்றூரில் பெரியண்ணன் – முத்துவேடியம்மாள் தம்பதியினருக்கு மகனாக 1932 ஆம் ஆண்டு பிறந்தார். அஸ்திகிரியூரில் ஆரம்பக்கல்வி படித்தவர் பின்பு கடத்தூரிலும் அரூரிலும் உயர்நிலைக் கல்வியை முடித்தவர், மேட்டூரில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியர் பயிற்சி முடித்தார். 1953 ஆம் ஆண்டு அரூரை அடுத்த செட்ரப்பட்டியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றிவந்தார். தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர் என்பதால், 1955 ஆம் ஆண்டு முத்தியாலம்மாள் என்பவரை சாதிமறுப்புத் திருமணம்  செய்துகொண்டார். தமது ஆசிரியர் பணிக்கிடையே தொடர்ந்து படித்து இளங்கலை (பொருளியல்) பட்டமும் 1977 ஆம் ஆண்டில் முதுகலை (தமிழ்) பட்டமும் பெற்றார். இதனைத் தொடர்ந்து முதுகலைத் தமிழாசிரியராக பதவி உயர்வு பெற்றார். 1990 ஆம் ஆண்டு இவர் தமது ஆசிரியப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
சிறுவயது முதலே கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். இவருடைய 12 ஆவது வயதில் “கும்மிப்பாட்டு” என்ற கவிதை எழுதியுள்ளார். தமது பள்ளிப்பருவத்தில் திரு.என்.எஸ்.கிருஷ்ணன் தலைமையில் நகைச்சுவை நாடகத்தையும், புலவர் குழந்தை தலைமையில் “கண்ணாடி வளையல்” என்ற ஈழப்பிரச்சனைக் குறித்த நாடகத்தையும், பரம்பரை பரிசு” என்ற சீர்திருத்த நாடகத்தையும் நடத்தியுள்ளார்.
தமிழறிஞராகவும், தமிழாசிரியராகவும், கவிஞ ராகவும், எழுத்தாளராகவும் இலக்கியத் திறனாய்வாளராகவும், பன்முகத்தன்மை கொண்ட பாவலர் மனிவேலனார் பல்வேறு இலக்கிய விருதுகளையும் பெற்றவர். இவரது படைப்புகள் சில தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான விருதுகளைப் பெற்றவை. தமிழ் நாட்டில் பல இடங்களில். பல்வேறு தமிழ் அமைப்புகள் இவரைப் பாராட்டி, பட்டங்களும் விருதுகளும் வழங்கி கௌரவித்துள்ளது. இவரது கவிதை நூல்கள் பல்கலைக் கழகத்தில் பாடநூலாக வைத்துள்ளன. மேலும் “சுவை நோக்கில் சுரதா” என்ற இவரது திறனாய்வு நூல்  1995 ஆம் ஆண்டு சிறந்த திறனாய்வு நூல் என்று தமிழக அரசு விருது வழங்கி பாராட்டியது. இவரது “நாக நாட்டு இளவரசி பீலிவளை” என்ற நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் 1997இல்- சிறந்த கவிதை நூல் என்று பாராட்டி பத்தாயிரம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கி இவரை கௌரவப்படுத்தியுள்ளது.
இவரது படைப்புகளாக “மழலை இன்பம்” (1963), “மழலை இலக்கியம்” (1965), “காதைத் திருப்பு சொல்கிறேன்” (1977), “இயற்கை அழைக்கிறது வா” (1978) ஆகிய கவிதை நூல்களும், வரலாற்று கவிதை நூல்களாக “நாக நாட்டு இளவரசி பீலிவளை” மற்றும் “வஞ்சினம்”, இலக்கியத் திறனாய்வு நூல்களாக  “கலித்தொகையில் உவமைகள்”, “அவலநோக்கில் சிலம்பு”, “பாவேந்தர் நோக்கில் குடும்பம்”, “பாவேந்தர் விழையும் பெண்ணுரிமை”, “சுவை நோக்கில் சுரதா” ஆகியவையும் “முதுமைச் சிக்கல்களும் அவற்றுக்குத் தீர்வுகளும்” என்ற தொகுப்பு நூலும் உள்ளன.
தருமபுரி மாவட்டத்தில், அரூரில் 1995 ஆம் ஆண்டு “தமிழியக்கம்” என்ற அமைப்பை தோற்றுவித்து தமிழ் இலக்கியங்கள் குறித்தும், தமிழ் இலக்கண வகுப்புகளையும், மேடைப்பேச்சு குறித்தும் பயிற்சி வகுப்புகள் நடத்தி வந்துள்ளார். மேலும், கவியரங்கங்கள் போன்றவைகளையும் இந்த அமைப்பின் மூலம் நடத்திவந்துள்ளார்.
1978 இல் பெரியார் நூற்றாண்டு விழாவினை யொட்டி, பெரியார் எழுத்து திருத்த முறையை நடைமுறைப்படுத்த அரசு ஆணை வெளியிட்ட போது, லை, னை எழுத்துகளில் செய்த மாற்றங்களைப் போல ஐ, ஒள என்ற உயிர் எழுத்துகளையும் அய், அவ் என மாற்றி எழுத வேண்டும் என ஆணையிட்டது. பாவலர் மணிவேலனார் இந்த இரண்டு எழுத்துகளை பெரியார் எழுத்து சீர்திருத்த முறையில் எழுதுவதால் ஏற்படும் இலக்கண மாற்றங்களைச் சுட்டிக்காட்டி மேற்படி இரண்டு எழுத்துகளையும் மாற்றத் தேவையில்லை என்று வேண்டுகோள் வைத்ததையடுத்து, அறிஞர்கள் இவரது வேண்டுகோளை பரிசீலித்து அதனை ஏற்றுக்கொண்டு மேற்படி எழுத்துகளில் மாற்றம் தேவையில்லை என்று ஆணையிட்டது. அதேபோல தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில் தமிழில் ஆய்வு செய்யும் மாணவர்கள், தங்கள் ஆய்வேடுகளை தமிழிலேயே எழுத ஆனையிடவேண்டும் என்ற அவரது கோரிக்கையும் தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது இவரது சாதனைகளாகும். தமிழ்மொழி மீது கொண்ட பற்றையும், தமிழுக்காக வாழ்ந்துவரும் பாவலர் மணிவேலனார் அவர்கள் இம்மண்ணில் பிறந்தது நமது தருமபுரிக்கு மிகவும் பெருமை என்றே சொல்லலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக