ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

தருமபுரி மாவட்டத்தில் புதிய ஊராட்சி ஒன்றியங்கள்

தருமபுரி மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய மற்றும் மலைப்பாங்கானப் பகுதிகளான பென்னாகரம், மொரப்பூர் ஆகிய பகுதிகளில் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக  குறிப்பாக, குடிநீர் பிரச்னைகள், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத்திட்டம், பசுமை வீடு திட்டம், திருமண நிதியுதவி போன்றவை களுக்காக இந்தப் பகுதி மக்கள் மொரப்பூர் மற்றும் பென்னாகரம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு நீண்ட தூரம் பயணம் செல்லவேண்டி இருந்த காரணத்தால் மக்களின் பயண நேர விரயம் மற்றும் செலவுகளைத் தவிர்க்கும் பொருட்டு, புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்படவேண்டும் என மக்கள், அரசுக்கு 20  ஆண்டுகளாகக் கோரிக்கை களைத் தொடர்ந்து வைத்தவண்ணம் இருந்தனர்.  2012 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் தருமபுரி மாவட்டத்தில் மேற்படி இரண்டு ஊராட்சிகளிலிருந்தும் சில ஊராட்சிகளைத் தனியாகப் பிரித்து கடத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு கடத்தூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஏரியூரை தலைமையிடமாகக் கொண்டு ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் என 2 புதிய ஊராட்சி ஒன்றியங்கள் விரைவில் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்தார். இதற்கான அரசு அறிவிப்பாணை 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் தேதி வெளியானது. இருப்பினும் ஏறத்தாழ 2016 ஆம் ஆண்டு மத்தியில் இதற்கான பணிகள் துவங்கியது. இந்த ஒன்றியங்களுக்கான கட்டடங்கள் எதுவும் கட்டப்படாமல் தற்காலிகமாக சமுதாயக்கூடங்களில் இயங்கி வந்த நிலையில் தற்போது இடங்கள் தேர்வு செய்யப்பட்டு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
கடத்தூர் ஊராட்சி ஒன்றியம்:
பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டத்திற்குட்பட்ட கடத்தூர் வருவாய் கிராமங்களிலிருந்து பசுவா புரம், புட்டிரெட்டிபட்டி, ஒசஹள்ளி, லிங்கி நாய்க்கன ஹள்ளி, மணியம்பாடி, மடத ஹள்ளி, நல்லகுட்லஹள்ளி, ஒபுளிநாய்க்கன ஹள்ளி, சில்லாரஹள்ளி, புளியம்பட்டி, சுங்கரஹள்ளி, தாளநத்தம், வகுத்துப்பட்டி, வெங்கடதாரஹள்ளி, சிந்தல்பாடி ஆகிய 15 ஊராட்சி மன்றங்களையும், பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டத்திற்குட்பட்ட பொம்மிடி வருவாய் கிராமங்களிலிருந்து கெத்து ரெட்டிப்பட்டி, மோட்டாங்குறிச்சி, ரேகடஹள்ளி ஆகிய 3 ஊராட்சி மன்றங்களையும் பாப்பிரெட்டிப் பட்டி வருவாய் வட்டத்திற்குட்பட்ட தென்கரைக் கோட்டை வருவாய் கிராமங்களிலிருந்து கோபிசெட்டிப்பாளையம், குருபரஹள்ளி, இராமியனஹள்ளி, கர்த்தானூர், தாதனூர், தென்கரைக்கோட்டை ஆகிய 6 ஊராட்சி மன்றங்களையும் அரூர் வருவாய் வட்டத்திற் குட்பட்ட மொரப்பூர் வருவாய் கிராமங்களி லிருந்து சந்தப்பட்டி ஊராட்சி மன்றம் என 1 ஊராட்சி மன்றத்தையும் சேர்த்து மொத்தம் 25 ஊராட்சி மன்றங்கள் கொண்டதாக புதிய கடத்தூர் ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்றியத்தின் மொத்தப் பரப்பளவு சுமார் 175 சதுர கி.மீ ஆகும்.
ஏரியூர் ஊராட்சி ஒன்றியம்:
பென்னாகரம் வருவாய் வட்டத்திற்குட்பட்ட பெரும்பாலை வருவாய் கிராமங்களிலிருந்து பத்ரஹள்ளி, கெண்டேனஹள்ளி, பெரும்பாலை ஆகிய 3 ஊராட்சி மன்றங்களையும், பென்னாகரம் வருவாய் வட்டத்திற்குட்பட்ட சுஞ்சல்நத்தம் வருவாய் கிராமங்களிலிருந்து அஜ்ஜனஹள்ளி, தொன்னகுட்லஹள்ளி, கோடிஹள்ளி, மாஞ்சாரஹள்ளி, நாகமரை, இராமகொண்டஹள்ளி மற்றும் சுஞ்சல்நத்தம் ஆகிய 7 ஊராட்சி மன்றங்களையும் சேர்த்து மொத்தம் 10  ஊராட்சி மன்றங்களளைக் கொண்டதாக புதிய ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக