திங்கள், 11 பிப்ரவரி, 2019

பேராசிரியர். மதிவாணன். இரா.


தகடூர் மண் பெருமையுடன் ஈந்த பெருமகன்களுள் ஒருவர் “வரலாற்று ஒளி ஞாயிறு” பேராசிரியர் இரா. மதிவாணன் அவர்கள். தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் 1936 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நாளன்று பிறந்தவர். தஞ்சை திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டமும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை, முனைவர் ஆய்வுப்பட்டங்களும் பெற்றவர். 
சேலம் அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றியவர். பின்னர் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரை இயக்குனராகக் கொண்ட செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்டத்தில் அவருடன் இணைந்து பணியாற்றி ஆராய்ச்சி அனுபவம் கண்டவர். அவருக்குப் பின் அகரமுதலித்திட்டத்தில் இயக்குனராகி, சொற்பிறப்பியல் அகரமுதலியின் ஆறு தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.
இவர் தமிழறிவு, சிந்துவெளி எழுத்தாராய்ச்சி, மொழியியல், சொற்பிறப்பியல், தொன்மை நாகரிகம், இலக்கணம், இலக்கியம், மொழிபெயர்ப்பு, கல்வெட்டுகள், பாறை ஓவிய எழுத்துகள் முதலான பல துறைகளிலும் ஆய்வுகள் நடத்தி சிறந்த ஆய்வாளர் எனப் பெயர் பெற்றவர். சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றிய ஆய்விலும், எழுத்தாய்விலும் உலகப்புகழ் பெற்றவர். நாற்பதிற்கும் மேற்பட்ட நூல்களும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளும் வெளியிட்டுள்ளார். பல வெளிநாடுகளுக்கும் பயணம் செய்து சொற்பிறப்பியல் மொழி ஆய்வுகளை நடத்தியுள்ளார். உலகின் பல நாடுகளுக்கும் பயணித்து ஆய்வரங்கங்களிலும், கருத்தரங்குகளிலும் மாநாடுகளிலும் கலந்துகொண்டு தமது ஆய்வுகள் குறித்து சொற்பொழிவுகள் ஆற்றி, பல விருதுகளும், பாராட்டுகளும் பட்டங்களும் பெற்றுள்ளார். 1981 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில், இவர் எழுதிய “இலெமூரியா முதல் அரப்பா வரை” என்ற நூலை அடிப்படையாக வைத்து திரைப்பட இயக்குனர் பா.நீலகண்டன் அவர்கள் “குமரிக்கண்டம்” என்ற வரலாற்றுக் குறும்படத்தை இயக்கி வெளியிட்டார். பட உருவாக்கத்திற்கு இயக்கு னருக்கு மதிவாணன் பேருதவியாக இருந்தார். மாநாட்டில், அன்றைய தமிழக முதலமைச்சர்  பேராசிரியர் மதிவாணனை பாராட்டி விருது வழங்கி கௌரவித்தார். .  

இவரது ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும்:
·    தொல்காப்பியம் அரங்கேறிய ஆண்டு கி.மு 835
·    சிந்துவெளி முத்திரைகள் அனைத்தும் தமிழில் எழுதப்பட்டுள்ளன.
·    சிந்துவெளி நாகரிகம் தமிழர்களால் தென்னாட்டிலிருந்து வடநாட்டில் பரப்பப்பட்டது.
·    சிந்துவெளி எழுத்து இரண்டாம் சங்க காலத்து எழுத்து முறை. முதல் சங்க காலத்தில் பட எழுத்துமுறை நிலவியது எனத் தெரிகிறது.
·  பிராமி எனப்படும் எழுத்துமுறை மூன்றாம் சங்க காலத்தில் சிந்துவெளி எழுத்தை மாற்றியமைத்த தமிழ் புலவர்களால் உருவாக்கப்பட்ட புதிய எழுத்துமுறை ஆகும். பாலி, பிராகிருதம், திபெத்தியம் ஆகிய வட இந்திய மொழியினரும் இந்தத் தமிழ் எழுத்து முறையை அக்கால இந்திய மொழிகளுக்கு பொது எழுத்து முறையாகக் கொண்டிருந்தனர். பிராமி என்பது அண்மைக் காலத்தில் இடப்பட்ட புதிய பெயர்.
·  நியூ கினியாவுக்கு அருகிலுள்ள சாலமன் தீவில் இயற்கையாக விளைந்த கரும்புப் பயிரை கி.மு. 300 கால அளவில் தமிழகத்திற்கு கொண்டு வந்து பயிரிட்ட சேரனின் பெயர் அதியஞ்சேரல்.
·  சிந்துவெளி எழுத்துகளும் குறியீடுகளும் குமரி முதல் இமயம் வரை வாழும் கல்லாத மக்களிடையே இன்றும் அடையாளக் குறியீடுகளாக ஆளப்பட்டு வருகின்றன. இவை சிந்துவெளி நாகரிகக் காலத்து எழுத்து முறை என்பது அவர்களுக்குத் தெரியாது.
·    வட இந்திய தாய் மொழிகளுக்கு மூலத்தாய் மொழி தமிழே.
·    பரதநாட்டியக் கலையின் தந்தை அவிநயர்.
·    2000 ஆண்டுகளுக்கு முந்தைய கிரேக்க நாடகத்தில் 22 தமிழ்ச் சொற்கள் இடம்பெற்றுள்ளன.
·    அன்றில் பறவை இன்றும் வாழ்கிறது.   
இவர் எழுதிய நூல்கள்:
1.   குளிர்காவிரி (1969)
2.   எல்லைப்போர்- வில்லுப்பாட்டு (1966)
3.   இலெமூரியா முதல் அரப்பா வரை (1977)
4.   குறள் அறிமுகம் (1978)
5.   குறள்வழி பிராகிருத இலக்கிய இன்பம் (1978)
6.   தமிழ் வளர்ச்சி (1978)
7.   சிவகோட்டாச்சாரியாவின் நல்லறக் கதைகள் (சமண பெரியபுராணம்) (1978)
8.   கிரேக்க நாடகத்தில் தமிழ் உரையாடல் (1978)
9.   ஆந்திர நாட்டு அகநானூறு (கதா சப்தசதி) (1979)
10.  பி.எம். சீகண்டையா (1979)
11.     Quotations of Tamil and Tamil Culture (1981)
12.  பாவாணர் ஆய்வுநெறி (1990)
13.   பி.டி. கைலாசம் (1990)
14.  சிந்துவெளி எழுத்தின் திறவு (1991)
15.     Indus Script Dravidian-1995
16.     Indus Script Among Dravidian Speakers-1995
17.     Indus Dravidian Civilization
18.     Phonetic Value of the Indus Script-1995
19.  அயல்சொல் கையேடு (1996)
20.  கன்னடம் மூலம் ஆங்கிலம் கற்க (1997)
21.  சங்கர குரூப் (1998)
22.  கடல்கொண்ட தென்னாடு முதல் சிந்துவெளி வரை (2001)
23.  அகரமுதலி செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் (பேரகரமுதலி) 6 தொகுதிகள் (1986 – 2001)
24.  தருமபுரி மாவட்டப் பாறை ஓவியங்களில் சிந்துவெளி எழுத்துகள் (2002)
25.  Language Archaeology (2002)
26.  சொல் என்ன சொல்கிறது (2003)
27.  திராவிட மக்களின் சிந்துவெளி எழுத்துகள் (2004)
28.  தமிழாய்வில் கண்ட உண்மைகள் (2005)
29.  கடைக்கழக நூல்களின் காலமும் கருத்தும் (2005)
30.  திருக்குறள் தேனமுதம் (2005)
31.  சொல்லாய்வுக் கட்டுரைகள் 2 (2005)
32.  ஒரு பூமாலையின் பாமாலை (2006)
33.  பாவானாரின் ஞால முதன் மொழிக் கொள்கை (2006)
34.  உலக நாகரிக்கத்துக்குத் தமிழரின் கொடை
35.  நாவினில் நற்றமிழ்
36.  சாதிகளின் பொய்த்தோற்றம்
37.  அபிநவகுப்தர்
38.  தொல்காப்பியர் காலம்
39.  சிலம்பின் காலக்கணிப்பு
40.  சிந்துவெளி நாகரிக ஆராய்ச்சி
41.  நாடகம்
நன்றி: தமிழ் விக்கிப்பீடியா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக