சனி, 2 பிப்ரவரி, 2019

தருமபுரி மாவட்டத்தில் பேரூராட்சிகள்

அரூர் பேரூராட்சி
ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில், அரூர் வட்டத்திற்குட்பட்ட, அரூர் பேரூராட்சியானது 1945 முதல் மூன்றாம் நிலை பேரூராட்சியாகவும், தொடர்ந்து 09-02-1955 முதல் இரண்டாம் நிலைப் பேரூராட்சியாகவும், 23-05-1960 முதல் முதல் நிலை பேரூராட்சியாகவும் இருந்து வந்துள்ளது. தொடர்ந்து, சேலம் மாவட்டத்திலிருந்து தருமபுரி மாவட்டம் தனியாகப் பிரிக்கப்பட்டப் பிறகு 17-09-1969—ஆம் நாள் முதல் தேர்வு நிலைப் பேரூராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.
இப்பேரூராட்சியின் மொத்த நிலப்பரப்பு 14.75 சதுர கி.மீ. ஆகும். 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்த பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 25469. மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 18. மொத்த தெருக்களின் எண்ணிக்கை 113. இப்பேரூராட்சிக்குட்பட்ட 8வது வார்டில் அமைந்துள்ள வருணீசுவரர் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. இந்தக் கோயிலில் உள்ள வருணீசுவரர் குளத் தீர்த்தம், வருண தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தம், தீர்த்த மலையின் புகழ்பெற்ற 10 தீர்த்தங்களுள் ஒன்றாக விளங்கிவருகிறது. இந்த பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது.  
கம்பைநல்லூர் பேரூராட்சி
இன்றைய தருமபுரி மாவட்டத்தின் காரிமங்கலம் வட்டத்திற்குட்பட்டது கம்பைநல்லூர் பேரூராட்சி. தருமபுரி நகரிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது. வரலாற்றுப்பெருமை வாய்ந்த தேசிநாதேஸ்வரர் கோயில் இந்த பேரூராட்சியின் 5ஆவது வார்டில், தங்கவேல் தெருவில் அமைந்துள்ளது. 16 குக்கிராமங்கள் மற்றும் 15 வார்டுகளைக் கொண்ட இந்த பேரூராட்சியிலுள்ள மொத்த தெருக்கள் 31.  பேரூராட்சியின் மொத்த பரப்பளவு 7.24 சதுர கி.மீ. ஆகும். 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்த பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 12194. கம்பைநல்லூர் பேரூராட்சி, அரூர் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. இங்குள்ள கடைவீதியில் பெருமாள் கோயிலும், சுப்ரமணியர் கோயில் தெருவில் சுப்பரமணியசாமி திருக்கோயிலும் அமைந்துள்ளது. 
பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி
தருமபுரி மாவட்டத்தில், பாப்பிரெட்டிபட்டி வட்டதிற்குட்பட்ட வட்டத் தலைநகர் பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சி. தருமபுரியிலிருந்து பொம்மிடி வழியாக சேலத்திற்கு செல்லும் வழியிலும், திருப்பத்தூர்- ஊத்தங்கரை-அரூர்-சேலம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சி நாலாபுறமும் மலைகள் சூழப்பட்ட சிறிய பேரூராட்சியாகும். இப்பேரூராட்சியின் மொத்த நிலப்பரப்பு 4.85 சதுர கி.மீ. ஆகும். 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இந்த பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 9369. மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 15. மொத்த தெருக்களின் எண்ணிக்கை 15 ஆகும். சேர்வராயன் மலைப்பகுதியின் பின்புறம் இந்த பேரூராட்சி அமைந்துள்ளது. இதன் எல்லையில் சுமார் 6 கி.மீ தொலைவில் வாணியாறு நீர்த்தேக்கம் உள்ளது. இங்குள்ள மாரியம்மன் கோயில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோயில் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. தனியார் தொழில் நுட்பக் கல்லூரி ஒன்றும் உள்ளது.
கடத்தூர் பேரூராட்சி
தருமபுரி மாவட்டத்தில், பப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ளது கடத்தூர் தேர்வுநிலைப் பேரூராட்சி. இப்பேரூராட்சியின் மொத்த நிலப் பரப்பு 5.6 சதுர கி.மீ. ஆகும். 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்த பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 11382. மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 15. மொத்த தெருக்களின் எண்ணிக்கை 40. இந்த பேரூராட்சி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. குறிப்பிடத்தக்க தொழில் வளர்ச்சி இல்லாத இந்த பேரூராட்சியில் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ளனர். இங்கு காளியம்மன் கோயில் அரூர் பிரதான சாலையிலும், பிள்ளையார் கோயில் தருமபுரி சாலையிலும், பெருமாள் கோயில் காந்தி நகரிலும் கோதண்டராமர் கோயில் தருமபுரி சாலையிலும் உள்ளன. இந்த பேரூராட்சியில் மாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் மே மாதத்தில் 3 நாட்கள் நடைபெற்று வருகிறது.
பாப்பரப்பட்டி பேரூராட்சி
தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட பாப்பாரப்பட்டி தேர்வுநிலைப் பேரூராட்சி தருமபுரி நகருக்கு மேற்கே சுமார் 16 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. மொத்த நிலப் பரப்பு 8 சதுர கி.மீ. ஆகும். 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்த பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 12555. மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 15. மொத்த தெருக்களின் எண்ணிக்கை 42. இந்த பேரூராட்சியில், அக்ரகாரத் தெருவில் உள்ள ராகவேந்திரர் கோயில் பிரபலமான ஒன்று. இந்த கோயிலில் மே மாதம் சுமார் 4 நாட்களுக்கு விழக்கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இங்கு பழைய மற்றும் புதிய சுப்பிரமணியசாமி கோயில்களும் உள்ளன. இது, பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.
காரிமங்கலம் பேரூராட்சி
காரிமங்கலம் தேர்வுநிலைப் பேரூராட்சி, தருமபுரி நகரிலிருந்து 22 kகி. மீ தொலைவில் தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. காரிமங்கலம் வட்டதிற்குட்பட்ட காரிமங்கலம் தேர்வுநிலைப் பேரூராட்சி, 15 வார்டுகளைக் கொண்டது. மொத்த தெருக்களின் எண்ணிக்கை 69. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இதன் மொத்த மக்கள் தொகை 13511. மொத்த நிலப் பரப்பு 3.2  சதுர கி.மீ. ஆகும். இங்கு காரிமங்கலம் ஊரை ஒட்டியுள்ள 200 அடி உயரம் கொண்ட ஒரு  சிறிய குன்றில், 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட  அருணேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை கௌதம மகரிஷி என்பார் 1895 ஆம் ஆண்டு குடமுழுக்கு செய்துள்ளார். (பார்க்க: அருணேஸ்வரர் கோயில்). இங்குள்ள ராமசாமி கோயில் திருவிழா, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பொங்கல் திருநாளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி இந்தப்பகுதியில் பிரசித்தி பெற்றது. இந்த பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சர்ச், மசூதி மற்றும் திரௌபதியம்மன் லட்சுமி நாராயணர், பெருமாள், மாரியம்மன், ஆஞ்சநேயர், விநாயகர் கோயில்கள் ஆகியன உள்ளன.
பாலக்கோடு பேரூராட்சி
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டத்திற்குபட்டது பாலக்கோடு பேரூராட்சி. இது தருமபுரி நகரிலிருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.  மொத்த நிலப் பரப்பு 2.56 சதுர கி.மீ. ஆகும். 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்த பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 21500. மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 18. மொத்த தெருக்களின் எண்ணிக்கை 126. இங்குள்ள தக்காளி, வெங்காயம் போன்ற விவசாய விளைபொருட்களுக்கான சந்தைகள் பிரபலமானவை. இங்கிருந்து விளைபொருட்கள் சென்னை கோயம்பேடு,  பெங்களூரு தினசரி சந்தைகளுக்கும் வெண்டைக்காய் சிங்கப்பூர், துபாய் முதலான நாடுகளுக்கும்  அனுப்பப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் முதன்முதலாக திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் இங்கு துவக்கப்பட்டு நல்ல நிலையில் இயங்கி வருகிறது. இந்த பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 6 மசூதிகளும், 2 சர்ச்சுகளும், 23 இந்துக்களின் கோயில்களும் உள்ளன. 
பென்னாகரம் பேரூராட்சி
தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்டது பென்னாகரம் தேர்வுநிலைப் பேரூராட்சி. தருமபுரி நகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் தென்மேற்கில் அமைந்துள்ளது.   14-10-1970 இப்பேரூராட்சி முதல் நிலைப் பேரூராட்சியாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 14-02-1985ஆம் தேதி முதல் தேர்வு நிலைப் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இயங்கி  வருகிறது. 4 வருவாய் கிராமங்களையும் 18 வார்டுகளைக் கொண்ட இந்த பேரூராட்சியின் மொத்த தெருக்களின் எண்ணிக்கை 83. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இதன் மொத்த மக்கள் தொகை 17089. மொத்த நிலப் பரப்பு 6.75 சதுர கி.மீ. ஆகும். இந்தப் பேரூராட்சி பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது ஆகும். தருமபுரி மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வந்தபிறகு இங்குள்ள அரசு மருத்துவமனை அரசு தலைமை மருத்துவமனையாக மாற்றப்பட்டது. உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி இங்கிருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது.
பொ. மல்லாபுரம் பேரூராட்சி
பொ. மல்லாபுரம் முதல்நிலைப் பேரூராட்சி, தருமபுரி நகரிலிருந்து பாப்பிரெட்டிப்பட்டி மாநிலச் சாலயில் சுமார் 36 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் பாப்பி ரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்டது. இப்பேரூராட்சியின் மொத்த நிலப்பரப்பு 8.75 சதுர கி.மீ. ஆகும். 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்த பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 12705. மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 15. மொத்த தெருக்களின் எண்ணிக்கை 31. பொம்மிடி ரயில்நிலையம் இந்த ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், சாமந்தி, காக்கட்டான் போன்ற பூ வகைகள் விளைவிக்கப்பட்டு வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. இங்கு பஞ்சு நூற்பாலை மற்றும் இரயில் பாதை அமைக்கத் தேவைப்படும் சிமெண்ட் சிலிப்பர்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளன. 
மாரண்ட ஹள்ளி பேரூராட்சி
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டத் திற்குட்பட்டது மாரண்ட ஹள்ளி முதல்நிலைப் பேரூராட்சி. இது 1968 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. பின்னர் இந்த பேரூராட்சி தரம் உயர்த்தப்பட்டு தேர்வுநிலைப் பேரூராட்சியாக இருந்து வருகிறது. பாலக்கோட்டில் இருந்து கிழக்குதிசையில் சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 1.60 சதுர கி.மீ. ஆகும். 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்த பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 12451. மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 15. மொத்த தெருக்களின் எண்ணிக்கை 41. இந்த தேர்வுநிலைப் பேரூராட்சி கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதிக்கும், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்தப்பகுதியில் விளையும் தேங்காய், பாக்கு, தக்காளி, புளி முதலானவைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு வியாபாரிகளால் வாங்கப்பட்டு விற்பனைக்குக் கொண்டுசெல்லப் படுகின்றன. இங்குள்ள பட்டாளம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்திலும் அங்காளம்மன் கோயில் திருவிழா மார்ச் மாதத்திலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த பேரூராட்சிக்குட்பட்டப் பகுதியில் இரண்டு  சர்ச்சுகளும் ஒரு மசூதியும் உள்ளன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக