புதன், 28 நவம்பர், 2018

டி.என்.வடிவேல் கவுண்டர்



தருமபுரியில்  15-6-1926 அன்று நடுப்பைய கவுண்டர் - குந்தியம்மாள் தம்பதியினருக்கு மகனாய் பிறந்தவர் வடிவேல் கவுண்டர்.  விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் சிறு வயது முதலே நாட்டுப்பற்று கொண்டவர்.  சுதந்திர இந்தியா மலர்ந்த பிறகே திருமணம் செய்து கொள்வது என்ற திடமான மனதுடன் இருந்தவர் அவ்வாறே சுதந்திரத்திற்கு பிறகு நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னசாமி-முனியம்மாள் தம்பதியினரின் மகளான ராஜம்மாள் என்பவரைக் கரம்பிடித்தார்.  அன்னாருக்கு 6 புதல்வர்களும் 1 புதல்வியும் பிறந்தனர். 
1941 ஆம் ஆண்டு தருமபுரியில் சிறிய அளவில் பால் கொள்முதல் செய்து வியாபாரத்தைத் தொடங்கி படிப்படியாக வளர்ந்து வேல் பால் நிலையம் என்று தருமபுரியில் முன்னணி நிறுவனமாக மாற்றினார்.
1962 ஆம் ஆண்டு தருமபுரி சட்டமன்றதிற்கு சுயேட்சையாக நின்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. ஆர்.எஸ். வீரப்ப செட்டியார் அவர்கள் மறைவுக்குப் பின்னர் டி.என்.வடிவேல் கவுண்டர் தருமபுரி மக்களின் அன்பைப் பெற்றிருந்த காரணத்தால், பெருந்தலைவர் காமராசர் அவர்களின் ஆசியோடு 1965 ஆம் ஆண்டு தருமபுரியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நின்று பெரு வெற்றிபெற்று தருமபுரி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றம் சென்றார்.  
தருமபுரி மாவட்டம் உருவாக முயற்சி எடுத்த திரு. ஆர்.எஸ். வீரப்ப செட்டியார் அவர்கள் மறைவுக்குப் பின்னர் டி.என்.வடிவேல் கவுண்டர்  அவர்களின் தொடர் முயற்சியால்  1965 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்திலிருந்து பிரிந்து தருமபுரி தனி மாவட்டமாக உருவாக்கும் போது அதன் மாவட்டத் தலைநகராக  தருமபுரியே இருக்கவேண்டும் என்று அன்றைய முதலமைச்சர் திரு. பக்தவத்சலம் அவர்களிடம் கேட்டுப் பெற்றவர். 
தருமபுரி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட பிறகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பிற அரசு அலுவலகங்கள் ஒரே இடத்தில் அமைந்தால் மக்களுக்கு சிரமமின்றி இருக்கும் என்று கருதி சமந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் பேசி அரசிடம் ஒப்படைத்தார். 
தருமபுரி அரசு மருத்துவமனை அமைக்க தனது 40 ஏக்கர் நிலத்தை வழங்கிய தருமபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஏ.எம். சுப்பிரமணிய செட்டியாருக்கும், தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் பி.கே.சி. முத்துசாமிக்கும் சிலை அமைத்துப் பெருமை படுத்தியவர்.  வன்னிய குல சத்திரிய அறக்கட்டளை நிறுவி அதன் பெயரால் திருமண மண்டபம் காட்டினார். தருமபுரி அவ்வையார் பெண்கள் மேனிலைப்பள்ளியின் 15௦ வது ஆண்டுவிழாவில்  அந்த பள்ளியில் நிறுவ வெண்கலத்தால் ஆன அவ்வையார் சிலை அமைத்துக் கொடுத்துள்ளார்.  
தருமபுரி நகராட்சி மன்றத் தலைவராகவும் 1985 முதல் 1991 வரை இருந்து சிறந்த முறையில் பணியாற்றினார். இவர் நகர்மன்றத் தலைவராக இருந்தபோதுதான் அரசு மகப்பேறு மருத்துவமனை, நகர பேருந்து நிலையம், பஞ்சப்பள்ளி கூட்டுக்குடிநீர் திட்டம், வெண்ணாம்பட்டி அரசு குடியிருப்புகள் உருவாயின.  
டி.என்.வடிவேல் கவுண்டர் 25-07-1959 முதல் 1980 வரை தருமபுரி நகர கூட்டுறவு வங்கியின் இயக்குனராகவும்,  1980 - 1989 ஆண்டு வரை அவ்வங்கியின் தலைவராகவும், 1961 - 1979 ஆண்டு வரை தருமபுரி கூட்டுறவு வீட்டுவசதி சங்க இயக்குனராகவும் 1979 - 1989 ஆண்டு வரை இச்சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். 
தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்குப் பாடுபட்ட வடிவேல் கவுண்டர் 24-12-2011 அன்று மறைந்தார். 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக