செவ்வாய், 27 நவம்பர், 2018

குண்செட்டி குளம்


     தருமபுரி நகராட்சிகுட்பட்ட 26 வது வார்டில் சாலை விநாயகர் தெரு, மிட்டாரெட்டிஹள்ளி சாலை, ராஜ மிசின் சாலை, குன்னன்குளம் தெரு, மாணிக்கம் தெரு, குருவன் தெரு, கொள்ளஹள்ளி சாலை,  சுண்ணாம்பு சூலை தெரு, பெருமாள் தெரு, சோழன் தெரு, அண்ணாசாமி தெரு, கோதண்டன் தெரு  முதலான தெருக்கள் உள்ளன. இங்கு மாரியம்மன் கோவில், சாலை விநாயகர் கோவில், ஆஞ்சநேயர் கோவில், முருகன் கோவில், சாய்பாபா, நாகம்மன் கோவில் என பல கோவில்கள் உள்ளன. இதில் முருகன் கோவில் அருகில் உள்ளது குண்செட்டிக் குளம். இந்த குளத்தைச் சுற்றி நான்கு புறமும் படிகட்டுகள் உள்ளன. ஆனால் அந்த படிக்கட்டு
களை மறைத்து நான்குபுறமும் வீடுகள் உருவாகி குளத்தை மறைத்துவிட்டன. இது கடந்த முப்பது ஆண்டுகளில் நடந்துள்ளது. குளத்திற்கு வரும் நீர் வழிகளும் மறைந்து சிமென்ட் சாலைகளாகி விட்டன. இதனால் குளம் ஆக்கிரமிக்கப்பட்டதோடு, குளத்திற்குள்ளும் எண்ணற்ற செடிகொடிகள், மரங்கள் வளர்ந்து குளத்தை மூடிக்கொண்டிருக்கின்றன. குளத்தைச் சுற்றியுள்ள வீடுகளின் கழிவு நீர் மற்றும் குப்பைகளால் குளம் மாசடைந்து இருக்கிறது.  இதனால் விசப் பூச்சி மற்றும் கொசுத் தொல்லைகளும் தொற்று நோய் பரவக்கூடிய வாய்ப்பும் உள்ளது.  ஒரு காலத்தில் இந்த குளத்தில் இருந்து நீர் எடுத்து வந்து கோவில்களில் சுவாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்து பின் பூசைகள் நடக்கும் என்றும் இப்பகுதி மக்கள் இந்த குளத்தில் நீராடிய பின் கோவிலில் வழிபட்டு செல்வார்கள் என்றும் சிறுவர்கள் இக்குளத்தில் நீச்சலடித்து விளையாடுவார்கள் என்றும் ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன் இந்தக் குளம் தூர் வாரப்பட்டதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். சாலை விநாயகர் கோவிலுக்குச் சொந்தமான இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளம் காலப்போக்கில் மறைந்தே போகும் சூழ்நிலையில் உள்ளது. 
     நீர் நிலைகளைப் பாதுகாக்கும் வகையில் இக்குளத்தைச் சுற்றியுள்ள ஆக்ரமிப்புகளை அகற்றி மாசடைந்த இந்த குளத்தை தூர்வாருவதுடன் வேலி அமைத்துப் பாதுகாத்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர உடனடியாக நகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் இந்து அறநிலையத்துறையும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக