புதன், 21 நவம்பர், 2018

லம்பாடிகள்:


தமிழ்நாட்டில் லம்பாடி இனத்தவர்கள் சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் சுமார் 1.5 லட்சம் பேர் பரவலாக வாழ்ந்து வருகின்றனர் என்றாலும் தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகம் பேர் வசிக்கிறார்கள்.
       தருமபுரி மாவட்டத்தில் லம்பாடிஇனத்தவர்கள் சுமார் 50000 பேர் அரூர், பென்னாகரம், தருமபுரி ஆகிய 3 வட்டங்களில், ராமதாஸ் தண்டா, மஞ்சநாயக்கன் தண்டா, கிட்டம்பட்டி தண்டா, ஏரியூர் தண்டா, சிட்டிலிங்கி தண்டா, அக்கரைகட்டுத்தண்டா, மேல்வளைவு பெரிய தண்டா, இளையபெருமாள் தண்டா முதலான கிராமங்களில் வசித்து வருகின்றனர்.
       லம்பாடிகள், பஞ்சாரா, சுகாலி, காங்கி, கோர், குவேர் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் லம்பாடி எனும் நாடோடி இனத்தவர்களின் பூர்வீகம் ராஜஸ்தானின் வடமேற்குப் பகுதி, மத்தியபிரதேசத்தின் மேற்குப் பகுதி மற்றும் சுதந்திரதிற்கு முந்தைய பாகிஸ்தானிலுள்ள கிழக்கு சிந்து மாகாணம் ஆக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. அங்கிருந்து தெற்கு நோக்கி வந்து குடியேறியவர்களாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இவர்கள் அக்னி வன்சி ராஜபுத்திர வம்சத்தினர் என்று கூறிக்கொள்கின்றனர்.
       இவர்கள் மராத்தியும் குஜராத்தியும் கலந்த கோரா மற்றும் கார்போலி மொழி பேசுகின்றனர். இந்தோ-ஆரிய மொழி வகையைச் சார்ந்த கோரா, சிங்களி, சுகாளி, லவானி, லம்பானி என பல பெயர்களால் இம்மொழி அழைக்கப்படுகிறது.
       இவர்கள் மேற்குக் கடற்கரையோரப் பகுதிகளில் உப்பு விளைவிக்கும் இடத்திலிருந்து விளைந்த உப்பை விற்பனைக்கு நாட்டின் பல பகுதிகளுக்கும் கொண்டுசென்ற உப்பு வணிகர்கள் ஆவர். வட சொல்லான லவணம் என்பதற்கு தமிழில் உப்பு என்பது பொருள். எனவே, லம்பாடிகள் உப்பு வணிகத்தில் ஈடுபட்டவர்கள் என்பது ஆய்வாளர்களின் கருத்து. உப்பை விற்றுப் பண்டமாற்று முறையில் தானியங்களை வாங்கி விற்போர் தானிய வணிகர் என்றும் அழைக்கப்பட்டனர். எனவே உப்பு வணிகர் என்று பொருள்படும் லவணர்கள் லம்பாடிகள் எனவும் தானிய வியாபாரத்தில் ஈடுபட்டோரை பஞ்சாரா என்ற குறியீட்டாலும் அழைக்கப்பட்டனர்.
       தமிழ் இலக்கியங்களில் உப்பு வணிகம் செய்வோரை பற்றிய பல குறிப்புகள் உள்ளன. உப்பு வணிகம் செய்வோரை உமணர்கள் சென்றும் உமணர்கள் உப்பு ஏற்றப்பட்ட வண்டிகளில் பெருங்கூட்டமாக ஊர் ஊராகச் சென்று விற்பவர்கள் என்றும் ஆங்காங்கே ஊரின் எல்லையில் தங்கி இளைப்பாறுவது இவர்கள் வழக்கம் என்கிறது சங்க இலக்கியங்கள்.
                                            

     மாநிலம் வரை இவர்கள் உப்பு வணிகத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, இவர்கள் கர்நாடக மாநில தெற்கு எல்லையோர கணவாய் பகுதிகளிலும் வனப்பகுதியை ஒட்டிய ஊர்களிலும், அதாவது தமிழ் நாட்டின் வட எல்லையானா தற்போதைய சேலம்-தருமபுரி-கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் உப்பு வணிகம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். தமிழ் நாட்டின் கிழக்குக் கடற்கரையோரத்தில் உப்பு விளைச்சல் இருந்தமையால் அவர்கள் தமிழ் நாட்டின் தென்பகுதிகளுக்குச்சென்று வியாபாரம் செய்யவில்லை என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
     ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் லம்பாடி மக்கள் மைசூர் மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்து தமிழ் நாட்டின் வட எல்லையோரப் பகுதிகளுக்கு வந்து குடியேறிவிட்டனர். ஆங்கிலேய ஆதிக்கம் ஏற்படுவதற்கு முன்பே லம்பாடி இனத்தவர்கள் தமிழ் நாட்டில் இருந்தனர் என்பதற்கு கர்னல் ரீடு மற்றும் லீ பானோ ஆகியோரின் அறிக்கைகள் மூலம் அறியமுடிகிறது.
      லம்பாடி இனத்தவர்கள் பெரும்பாலும் இந்து மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர். இவர்கள் ஆந்திர பிரதேசத்தில் சுமார் 2.2 மில்லியன் பேரும், கர்நாடகா மாநிலத்தில் 1.1 மில்லியன் பேரும் மகாராஷ்ட்ரத்தில் 0.9 மில்லியன் பேரும், மத்திய பிரதேசத்தில் 0.4 மில்லியன் பேரும், ராஜஸ்தானில் 0.3 மில்லியன் பேரும் வசித்து வருகின்றனர். ஹரியானா, உத்திரபிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஓரளவும் பிற மாநிலங்களில் ஆங்காங்கே சிறிதளவுமாக உள்ளனர்.
      பெரும்பாலும் இம்மக்கள் தங்கள் வீட்டினுள் தாய்மொழியையும் பிற வெளியிடங்களில் அந்தந்தப் பகுதிகளில் பேசப்படும் மொழியினையும் பேசுகின்றனர்.
      லம்பாடிகளின் குடியிருப்புகள் பெரும்பாலும் காடுகளை ஒட்டிய மேட்டுப்பாங்கான பகுதிகளில் நீரோடைகளுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இவர்களது குடியிருப்புகளில் வேறு இனத்தவர்கள் யாரும் குடியிருப்பதில்லை. ஏனைய சமுதாயத்தினரைப் போல நீண்ட தெருக்களைக் கொண்ட குடியிருப்புகளாக இவர்களது குடியிருப்புகள் இல்லை. பெரும்பாலும் வீடுகள் மிகவும் சிறியனவாகவும் சிறு கூரை வீடுகள் அல்லது ஓட்டு வீடுகளாகவே உள்ளன. இவர்களது குடியிருப்புகளையொட்டி இவர்களது கோயில் அமைந்துள்ளது.
      இந்தியா முழுமையும் இவர்களது குடியிருப்புகள் தண்டா என்றே அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில் ஊருக்குப் புதிதாக வருபவர்கள், வணிகர்கள் ஊருக்கு எல்லையில் உள்ள சோலைகளில் தங்களது வண்டிகளை நிறுத்தி வைத்தும், வண்டி மாடுகளை இளைப்பாற்றியும், தாங்களும் உணவு சமைத்து உண்டு களைப்பாறி செல்வது வழக்கம். அந்த வழக்கத்தை ஒட்டியே லம்பாடிகளது குடியிருப்புகள் காடுகளையொட்டிய சோலைப் பகுதிகளில் அமைத்துக்கொண்டனர். அதனாலேயே லம்பாடிகளின் குடியிருப்புப் பகுதிகள் தண்டா என்ற பெயரால் அமைந்துள்ளது.

1 கருத்து: