வெள்ளி, 16 நவம்பர், 2018

கர்னல் ரீடு (Col. Alexander Read)

மூன்றாம் மைசூர்ப் போரின் முடிவில் (1790 - 92) திப்பு சுல்தானிடம் இருந்து, போர் நஷ்ட ஈட்டுத் தொகையுடன் அவரது அரசிற்குட்டபட்ட பகுதியில்  பாதியை (தமிழ்நாட்டின் பாரமஹால் உள்ளிடங்கிய சேலம் மாவட்டமும், திண்டுக்கல் பகுதிகளும், மலபார் பகுதிகளும் ஆங்கில கிழக்கிந்திய வணிகள் குழு நிர்வாகத்தின் கீழ் வந்தன.  அவ்வாறு பெற்ற பகுதியில், நிர்வாகம் செய்ய உருவாக்கப்பட்ட சேலம் மாவட்டத்தின் முதல் ஆட்சியாளர் கர்னல் அலெக்சாண்டர் ரீடு.  இவர் சேலத்தில் 04-07-1792 முதல் 07-07-1799 வரை ஆட்சியாளராக இருந்தார்.
இவருக்கு உதவியாக மூன்று ஆங்கிலேய இராணுவ அதிகாரிகளாக  கிரஹாம், தாமஸ் மன்றோ, மக்லாய்டு ஆகியோர் நியமிக்கப்பட்டனர். நிர்வாக வசதிக்காக தனது நிர்வாகப் பகுதியை வடபகுதி, நடுப்பகுதி, தென்பகுதி எனப் பிரித்து வடபகுதிக்கு (கிருஷ்ணகிரி) கிரஹாமையும், நடுப்பகுதியான தருமபுரிக்கு தாமஸ் மன்றோவையும்,  தென்பகுதிக்கு மக்லாய்டுவையும் அதிகாரிகளாக நியமித்தார்.  தமது ஆட்சிக்குட்பட்ட  பகுதிகளில் நிலவரியை சரிசெய்யவதே இவரது நோக்கம்.
தற்போதைய சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய அன்றைய சேலத்தின் பெரும்பகுதி 1793 முதல் 1797 வரை நில அளவீடு செய்யப்பட்டது. 1797 ஆம்  ஆண்டு டிசம்பர் மாதம் 10-ம் நாள் ரயத்வாரி  என்ற நிவர்த்தி முறையை அமல்படுத்தினார். ஒரு கிராமத்தினின்று   கிடைக்கும் வரித்தொகைக்கு அனைத்து விவசயிகளுமே பொறுப்பேற்றனர். கிராமத் தலைவர்கள் விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை அவர்களிடம் வசூலித்து கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளிடம் சேர்த்தனர்.
இவரது ஆட்சிகாலத்தில் செய்யப்பட்ட நிலா அளவீடு குறித்த அறிக்கையை "ரிப்போர்ட் ஆப் தி கர்னல் ரீடு" என்று தலைப்பிட்டு சென்னை வருவாய் வாரியத்திற்கு (மெட்ராஸ் ரெவின்யூ போர்டு) 04-04-1800 அன்று சமர்ப்பித்தார்.  இது ஒரு நூல் போல் அன்றி அறிக்கையாக - நில அளவீடு,  நிலவரி அமைப்பு இருந்தாலுங்கூட இதில் நிர்வாகம், புவியியல் அமைப்பு, மக்கள், வானிலை, விவசாயமுறைகள், விளைபொருட்கள், வரிமுறை, போக்குவரத்து வசதி, பொருள் உற்பத்தி, வர்த்தகம் என்று பலவகையான தலைப்புகளில் 18ஆம் நூற்றாண்டின் சேலம் மக்களின் வாழ்வியலை துல்லியமாக படம்பிடித்துள்ளதை காட்டுகிறது. அத்துடன் இவரது அறிக்கையில் பேச்சுவழக்கில் குறிப்பிடும் எண்ணற்ற செய்திகள், தகவல் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. எனவே, இவரது அறிக்கையே தற்கால சேலத்து வரலாற்றை குறிப்பிடும் முதல் நூலாகக் கருதலாம்.
இவரது அறிக்கையை பின்பற்றியே சேலம் மாவட்டம் குறித்து பிறகு வந்த ஜெ.டபிள்யூ.பி. டைக்ஸ் (ஏன்  இந்தியன் கலக்டெரேட் -1853), இ. லீ பாநு  (மானுவல் ஆப் தி சேலம் டிஸ்ட்ரிக்ட் - 1883), எப்.ஜி.ரிச்சர்ட்ஸ் (சேலம் டிஸ்ட்ரிக்ட் கெஜட்டியர் - 1918), ஏ. ராமஸ்வாமி (மெட்ராஸ் டிஸ்ட்ரிக்ட்   கெஜட்டியர் - 1967)  வெளியிடப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக