செவ்வாய், 27 நவம்பர், 2018

ஊட்டமலை



தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஊட்டமலை.  இந்த கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இக்கிராமத்தின் அமைவிடம் 12°07'46.5"N 77°46'06.3"E  ஆகும். 
ஓஹேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு சுமார் 2கி.மீ. தொலைவில் உள்ளது இந்த கிராமம்.  இங்கு 300 -க்கும்  அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. சிவியர் எனும் மீனவ சாதி பிரிவினைச் சேர்ந்த  இவர்களுக்கு பரிசல் ஓட்டுவது, மீன்பிடித்தல், ஆடு,மாடு வளர்ப்பு போன்றவைகள்தான் பிரதான தொழில்.  இவர்களுக்கு விவசாய நிலம் கிடையாது. இங்கு வாழும் மக்கள் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் அணை கட்டும்போது அந்த பகுதியில் இருந்து பிழைப்பு தேடி இந்த கிராமத்தில் வந்து தஞ்சம் அடைந்தனர். 
காவிரி ஆறு கர்நாடக மாநிலத்தைக் கடந்து தமிழக எல்லையான அஜ்ஜிப்பாறை வழியாக, தெப்பகுழி, உகினி, ராசிமணல், பிலிகுண்டு வழியாக சுமார் 45 கி.மீ. தூரம் காப்புக்காடுகளுக்கு இடையே ஓடி ஓஹேனக்கல்லை அடைகிறது. இங்குள்ள மீனவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக ஊட்டமலை ஆலம்பாடியிலிருந்து கர்னாடக எல்லையான அஜ்ஜிபாறை வரை மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு மத்திய அரசின் 1897 ஆம் ஆண்டு 4 வது பகுதியில் கண்டவாறு இந்திய மீன்வளப் பிரிவு 6 சட்டத்தின்படி மேட்டூர் அணைக்கு வடக்கே காவிரி ஆற்றில் ஆலம்பாடியில் இருந்து வடக்கே பிலிகுண்டு முதல் அஜ்ஜிப்பாறை சங்கமம் வரை மீன்பிடிக்க மேட்டூர் மீன்வள உதவி இயக்குனர் மூலம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதன்படி இவர்கள் மீன்பிடி உரிமம் வாங்கி இத் தொழிலை செய்து வருகின்றனர்.  இருப்பினும் உரிகம், அஞ்செட்டி வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து ஆற்றில் மீன்பிடிக்கச் செல்வதாகக் கூறி வனத்துறை இவர்களிடம் கெடுபிடி செய்வதால் மீன்பிடி தொழிலை செய்யமுடியாமல் தங்கள் வாழ்வாதாரம் நசுக்கப்படுவதாக இவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். மீனவர்கள் ஆற்றில் பிடித்து வரும் மீன்களை மீனவப் பெண்கள் சமைத்து ஓஹேனக்கல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு விற்றும் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.  இங்குள்ளவர்களில் சுமார் 400 பேர் பரிசல் ஒட்டி பிழைப்பு நடத்துகின்றனர். இவர்களது முக்கியக் கோரிக்கையாக இருப்பது நீர்வரத்து அதிகமுள்ள காலங்களில் ஊட்டமலை பரிசல்துறை, மாமரத்துக்கடவு பரிசல் துறை மற்றும் கோத்திகல் பரிசல்துறை ஆகிய 3 துறைகளிலும் பரிசல் விட அரசு அனுமதி தரவேண்டும் என்பதே. 
 இந்த கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் திருவிழாவையொட்டி  ஆண்டுதோறும் பரிசல் போட்டிகள் நடத்துவதை இவர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.  போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இந்தப் போட்டியைக் காண சுற்றுவட்டார  மக்கள் திரளாக வந்து கண்டு களிக்கின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக