புதன், 26 அக்டோபர், 2016

தீப்பாஞ்சி அம்மன்





தீப்பாஞ்சி அம்மன்:
 
நடுகல் வழிபாட்டில் ஓர் அம்சமாக விளங்குவது சதிகல் வழிபாடு ஆகும். நடுகல்லையும் சதிகல்லையும் நாட்டுப்புற மக்கள் வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் இவைகள் சிறுதெய்வ வழிபாடுகளாக மாறி இன்றும் நிலைத்து நிற்கின்றன.  கணவனது இறப்பினை அறிந்தவுடன், தீயில் இறங்கி தன் உயிர் மாய்த்துக்கொள்ளும் கற்புடைய பெண்களின் நினைவாக நடப்படும் கற்களே சதிகற்கள் எனப்பட்டன. இந்த சதி கற்கள், மாசதி கற்கள் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த வகையான சதி கற்கள் தமிழகமெங்கும் பரவலாக கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சதி கற்களே தீப்பாய்ந்தாள் என்றும் தீப்பாஞ்சி அம்மன் என்றும் அழைக்கபடுகிறாள்.
       தமிழ் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில், பத்தினிப்பெண்களை, கணவனுடன் தீயில் விழுந்து இறப்பவர்களை (உடன்கட்டை ஏறுதல்) முதலாவதாகவும், கணவன் இறந்தவுடன் தனியே நெருப்பு மூட்டி அதில் விழுந்து இறப்பவர்கள் இரண்டாமவர்களாகவும் கணவன் இறந்தவுடன் தனது இறுதிக்காலம் வரை விதவை கோலத்தில், தான் நேசித்த கணவனுடன் அடுத்தப்பிறவியில் சேர்ந்து வாழ வேண்டும் என்று நோன்பு இருந்து உயிர் துறப்பவர்கள் மூன்றாவதாகவும் பிரிக்கப் படுத்தப்பட்டுள்ளனர்.
       சேர மன்னர்களில் புகழ்பெற்ற இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இறந்துபட்டவுடன் அவனது மனைவி நற்சோணை என்ற சோழர் குலப்பெண் அவனுடன் உடன்கட்டை ஏறுகிறாள். இமயவரம்பனின் மகனான சேரன் செங்குட்டுவன் தனது தாய்க்கு கோயில் எடுத்துச் சிறப்பிக்க இமயமலையிலிருந்து கல் கொண்டு வந்து கோவில் அமைக்கிறான். இந்த நற்சோணை அம்மன் சேரர்களின் குலதெய்வம் ஆகிறாள்.  சேரன் செங்குட்டுவனே, பத்தினி தெய்வமான கண்ணகி தெய்வமான, வருஷ நாட்டின் அருகே சுருளிமலையில் உள்ள மங்கலதேவி மலையில் கோயில் எழுப்பியவன் ஆவான். முதலாம் ராஜராஜ சோழன் மங்கலதேவி கோட்டத்திற்கு வந்து கண்ணகியின் சிறப்பை உணர்ந்து அக்கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளான். அத்துடன் அக்கோயிலில் இருந்து பிடிமண் எடுத்து வந்து தஞ்சாவூரில் கோயில் அமைத்தான். அதுவே சிங்கள நாச்சியார் கோயில் ஆகும். இந்த பெயர் காலப்போக்கில் மருவி செங்களாட்சி அம்மன் என்று இன்றும் விளங்கிவருகிறது.
       வேத காலத்திலும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்துள்ளது என்பதை ரிக் வேதம் உணர்த்துகிறது. இவ்வேதத்தில் உடன்கட்டை ஏறும்போது சொல்லவேண்டிய மந்திரங்கள் (ரிக். 10.18.8: அத.28,3.1)  விளக்கப்பட்டுள்ளன.
       தருமபுரி மாவட்டத்தில், சமீபத்தில், தருமபுரிக்கு அடுத்த நல்லம்பள்ளியின் அருகே  கந்துகால்பட்டி என்ற கிராமத்தில் திறந்த வெளியில் இருந்த தீப்பாஞ்சி அம்மனுக்கு கோவில் கட்டி குடமுழுக்கு நடத்தப்பட்டது. இந்த கோவிலானது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி கணவன் இறந்துபட்டவுடன் தீயில் தன் உயிரை மாய்த்துகொண்டதும் அவளையே தங்கள் குலதெய்வமாக கொண்டாடுவதாகவும் கூறுகின்றனர். இந்த பகுதியில் வாழும் சுமார் 23 கிராமத்தை சேர்ந்த மக்கள்  தீப்பாஞ்சி அம்மனை தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.  
மொரப்பூரை அடுத்த நவலையிலும், அரூரை அடுத்த நாதியானூர் கிராமத்திலும், சதி கற்கள் தீப்பாஞ்சி அம்மன் (குண்டாயதம்மன்) களாக உள்ளன. 

நவலை  தீப்பாஞ்சி அம்மன் கோவில் 

5 கருத்துகள்:

  1. நல்லம்பள்ளி அடுத்த கந்துகால்பட்டியில் உள்ள தீப்பஞ்சியம்மன் என்பது அந்த அம்மா கருவுற்றபோது அந்த கற்ப்பின் போது தாய் விட்டார் சந்தேகப்பட்ட போது அப்போது எட்டு ஊர் தலைவர் முன்னிலையில் தீயில் இறங்கிவரும்போது அவளுடைய கணவன் தீயில் இறங்கிவந்தர் அதன் பின் அவருக்கு குழந்தை பிறந்தது பின் அவளுடைய தாய் தன் கருவின் மீது சந்தேக பட்டதால் அவருடைய தாய் வீட்டுக்கு சாபம் இட்டு இறந்து விடுகிறார் இதில் தீப்பஞ்சியமமாள் பிறந்த ஊர் தோக்கம்பட்டி இதன் நீனைவாக அம்மாவுக்கு அந்த ஊரில் கோவில் உள்ளது

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா6 மே, 2023 அன்று AM 11:39

    பாப்பிரெட்டிபட்டி வட்டம் தென்கரைக்கோட்டை உள்வட்டம் கோபிச்செட்டிப்பாளையம் தரப்பு கோ. அண்ணாலம்பட்டி என்ற குக்கிராமத்தில் சுமார் 125 ஆண்டுகள் மிகப்பழமையான பிரசித்திப் பெற்ற அருள்மிகுதீப்பாஞ்சியம்மன் திருக்கோயில் உள்ளது.

    பதிலளிநீக்கு
  3. சென்னை ஆலந்தூர் வ.உ.சி.நகரில் தேவி தீப்பாஞ்சியம்மன் திருக்கோயில் உள்ளது

    பதிலளிநீக்கு
  4. சென்னை ஆலந்தூரில் வா.உ.சி நகர் என்னும் இடத்தில் அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாய் வீற்றிருக்கும் எங்கள் அன்னை அருள்மிகு தேவி தீபாஞ்சியம்மன் ஆலயம் உள்ளது இங்கு வருபவர்களின் குறைகளை தீர்த்து வைக்கும் தெய்வமாக அருள்பாளிக்கின்றாள் அன்னை ஓம் சக்தி பராசக்தி இவண் செ.செந்தில்குமார்

    பதிலளிநீக்கு