ஞாயிறு, 30 அக்டோபர், 2016

தென்கரைகோட்டை கல்யாணராமர் திருக்கோயில்

                 
      தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி தென்கரைக்கோட்டை ஆகும். இந்த ஊரில் விஜயநகரப் பேரரசு காலத்தில் ஜெகதேவிராயர் என்பார் காலத்தில் கட்டப்பட்டு, சீலப்பநாயக்க மன்னரால் மேலும் சீர்படுத்தப்பட்ட பழமை வாய்ந்த கோயிலாக கல்யாணராமர் கோயில் உள்ளது. (இந்த சீலப்ப நாயக்கனே தீர்த்தமலை மீதுள்ள கோட்டையை அமைத்தவன் ஆவான்). இக்கோயில், திருவுண்ணாழி, இடைநாழி, மகாமண்டபம், முன்மண்டபம் என அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் அமைந்துள்ளது. 
          கருவறை விமானம் இரண்டு தளங்களைக் கொண்டுள்ளது. இந்த கோயிலில் 29 தூண்களைக் கொண்ட முன் மன்டபம் உள்ளது. இந்த மண்டபம் முழுக்கக் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இதன் இரண்டு புறமும் அழகிய வேலைப்பாடுகளுடன் குதிரை வீரர், சிங்க வீரர், யாளி வீரர்கள் சிலைகள் உள்ளன.    
     இசை ஓசையை வெளிப்படுத்தும் கல்தூண்கள் பல உள்ளன. இக்கல் தூண்களைத் தட்டினால் ஒவ்வொரு கல் தூணிலிருந்தும் ஒவ்வொரு விதமான இசை ஓசை வெளிப்படும். (இந்த வகையான இசைத்தூண்கள் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலிலும், மதுரை மீனாட்சியம்மன் கோவில், ஆழ்வார் திருநகரியிலுள்ள பெருமாள் கோவில், சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் போன்ற பல தமிழக மற்றும் தென் இந்தியக் கோவில்களில் காண முடியும்).

  மேலும் இந்த மண்டபத்தில் உள்ள தூண்களில் சமயத் தொடர்பான பல காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பள்ளிகொண்ட பெருமாளுடன் திருமகள், காளிங்க நர்த்தனம், அனுமன், சீதா, லக்குமணன் ஆகியோரது திருவுருவங்களும், ஆழ்வார்கள், இசைவாணர்கள் திருவுருவங்களும் காட்சியளிக்கின்றன.
    மகாமண்டபத்தின் விதானத்தில் நவகிரகங்களின் புடைப்புச் சிற்பங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. மேலும் மண்டபக்கூரையில் சீலப்ப நாயக்கனின் அரச சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. தூண்கள் சிலவற்றில் தீபமேந்திய பெண்களின் உருவங்களும், உடலெங்கும் கொடி படர்ந்த பெண்களின் சிலைகளும் கூடிய அழகிய சிற்ப வேலைகளுடனும் உள்ளது. மேலும் இக்கோயிலைச் சுற்றி ஆறு அடி உயரமும் மூண்று அடி அகலமும் கொண்ட மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. சிறந்த கட்டடக்கலைக்கும் தொழில்நுட்பத்திற்கும் ஓர் எடுத்தக்காட்டாக விளங்குகிறது இக்கோயில்.
  இந்த கோயிலின் கருவறையில் இராமர், சீதாபிராட்டியுடன் பீடத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். இராமர் வலக்கை அபய முத்திரையோடும், இடக்கை தொடைமீதும் கொண்டு அருட்பார்வையோடும், அவர் அருகில் சீதா, வலக்கையில் மலர் ஏந்தியும் இடக்கை வரத முத்திரையோடும் விளங்குகிறார்.  இவர்களுக்கு முன்பாக, விசுவாமித்திரர், வசிஷ்டர் ஆகிய முனிவர்களையும், இராமனின் உடன் பிறந்தவர்களான பரதன், லக்குமணன், சத்ருக்கணன், இராமரால் உடன் பிறந்தவர்களாக ஏற்றுக்கொண்ட குகன், சுக்ரீவன், வீடணன், மற்றும் இலங்கைப்போரில் ராமருக்கு  உதவிய அனுமன், அரங்கதன் ஆகியோரையும் சிறப்பிக்கும் வகையில் அவர்கள் இங்கு பரிவாரத் தெய்வங்களாக உடன் உள்ளது இக்கோயிலுக்கு சிறப்பினைத் தருகிறது.
 புரட்டாசி சனிக்கிழமைகளில் இக்கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும்  பூஜைகளும் நடைபெறுகின்றன, வாரந்திர சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்பெறுகிறது. 

கடந்த 50 ஆண்டுகளாக இக்கோயிலில் பெரிய அளவில் திருவிழாக்கள் ஏதும் நடைபெறவில்லை என்பதும் இக்கோயில்  புதர்கள் மண்டிக் காணப்படுவதாகவும் இப்பகுதி மக்கள் குற்றச்சாட்டாக  உள்ளது.

    

     

       
      


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக