வெள்ளி, 28 அக்டோபர், 2016

வாழப்பாடி கே. இராமமூர்த்தி



வாழப்பாடி கே. இராமமூர்த்தி
(1940 – 2002)

திரு. வாழப்பாடி கே. ராமமூர்த்தி அவர்கள், 1977 ஆம் ஆண்டு தருமபுரி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவை உறுப்பினராகப் பணியாற்றியவர். எனவே இவருக்கும் தருமபுரி மாவட்டத்துக்கும் உள்ள தொடர்பு கருதி அன்னாரது நினைவு நாளில் அவரைப்பற்றி சில குறிப்புகள் இங்கே, (ஒரு நாள் தாமதமாக-..மன்னிக்கவும்).

     தமிழகத்தின் தலைசிறந்த அரசியல்வாதிகளுள் ஒருவரும் சிறந்த தொழிற்சங்கவாதியுமாக திகழ்ந்த திரு. வாழப்பாடி கே. இராமமூர்த்தியின் நினைவுதினம் இன்று.  
        சேலம் மாவட்டம்,  வாழப்பாடியில் 1940 ஆம் ஆண்டு கூத்தப்ப கவுண்டரின் மகனாகப் பிறந்த திரு ராமமூர்த்திக்குப் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே அரசியலில் ஆர்வம் இருந்தது. சென்னையில் சட்டக்கல்லூரியில் படித்து வெளிவந்தபின் தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தில் தம்மை இணைத்துக்கொண்டார். பின் 1960 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்திலிருந்து விலகி இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து பணியாற்றிடத் தொடங்கினார். ஏறத்தாழ எட்டு ஆண்டுகளுக்குப்பிறகு, 1969-71 வரை சேலம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளராகப் பணியாற்றினார்.  1972-ல் அக்கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான இந்திய தேசிய டிரேட் யூனியன் காங்கிரசின் (INTUC) தலைவராகப்   பொறுப்பேற்றுப் பணியாற்றினார். தொழிலாளர்களின் நலனுக்காக தொழிலாளர்களின் இயக்கத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு தொடர்ந்து பாடுபட்டு வந்தவர்.
  திரு ராமமூர்த்தி, 1977 ஆம் ஆண்டு தருமபுரி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவை உறுப்பினரானார்.
   தொடர்ந்து 4முறை 1980, 1984, 1989, 1991 ஆகிய பொதுத் தேர்தல்களில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் நின்று வெற்றிபெற்று மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். 
  1989- ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி அவர்களால் இந்திய தேசிய காங்கிரசின் தமிழ் மாநிலத்தின் தலைமை பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார். திரு. ராமமூர்த்தி அப்பதவியில் சுமார் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து இருந்த காலத்தில், தனது அதிரடியான நடவடிக்கைகளால் கட்சியிலுள்ள அதிருப்தியாளர்களை கையாள்வதிலும், தி.மு.க  மற்றும் அ.தி.மு.க கட்சிகளுக்கு எதிராகவும் ஆதரவாகவும் கொடுத்த அறிக்கைகள் மூலம் தமிழ்நாட்டில் துவண்டிருந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை தூக்கி நிறுத்தியவர் என்பர். இவர்  தமிழ் நாட்டில் காங்கிரஸ் கமிட்டியின் தலைமைப் பொறுப்பிலிருந்தபோது, நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் தோல்வி அடைந்ததை அடுத்து கட்சியின் மாநிலத் தலைமைப்பொறுப்பு இவரிடம் இருந்து பறிபோனது.
         1991-92 ல் திரு பி.வி. நரசிம்மராவ் அவர்களது தலைமையில் மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சராக ராமமூர்த்தி இருந்தார். ஆனால் காவிரி நதி நீர் பங்கீட்டுப் பிரச்சனையில், தமிழ் நாட்டுக்கு எதிரான மத்திய அரசின் போக்கைக் கண்டித்து இவர் தமது அமைச்சர் பதவியை உதறித்தள்ளினார்.
      பொதுத் தேர்தலில், காங்கிரஸ் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துகொன்டதை ராமமூர்த்தி எதிர்த்ததினால் திரு. பி.வி. நரசிம்மராவ் அவர்களால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
   1992-ஆம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி திவாரி – அர்ஜுன் சிங் ஆரம்பித்த “திவாரி காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டு அக்கட்சியின் தமிழ் நாட்டின் தலைவரானார்.
    1996-ல் நடைபெற்ற தமிழ் நாட்டின் சட்டசபைத் தேர்தலில் திரு. கோவை.செழியன், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோருடன் இணைந்து “சமூக நீதி ஊழல் ஒழிப்புக் கூட்டணி என்ற பெயரில் திவாரி காங்கிரஸ் போட்டியிட்டது. ஆனால் திவாரி காங்கிரஸ் எந்த தொகுதியிலும் வெற்றிபெறவில்லை.
  அதன் பின்னர் 1997-இல் “தமிழ்நாடு மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்தவர் அக்கட்சியினை மீண்டும் காங்கிரசில் இணைத்தார். 
   ஆனால் 1998 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது இந்திய தேசிய காங்கிரசில் இருந்து மீண்டும் விலகி “தமிழக ராஜீவ் காங்கிரஸ் என்ற பெயரில் தனி கட்சி ஆரம்பித்து பாரதிய ஜனதா கட்சி, அ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சேலம் மக்களவை உறுப்பினராக வெற்றிபெற்று மக்களவைக்குச் சென்றார். அப்போது அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் தலைமையிலான அமைச்சரவையில் பெட்ரோலிய துறை அமைச்சராக பணியாற்றினார்.  
  தொடர்ந்து நடந்த 1999 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க, பா.ஜ.க., ம.தி.மு.க., மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தார். ஆனால் வெற்றிபெற முடியவில்லை. தொடர்ந்து நடந்த 2001 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டுத் தோல்வி கண்டது தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சி.
  தமிழக ராஜீவ் காங்கிரஸ் என்று இவரால் தொடங்கப்பட்ட கட்சி 2001 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து, பின் கலைக்கப்பட்டு மீண்டும் காங்கிரசில் ஐக்கியமானது.
  திரு. வாழப்பாடி கே. ராமமூர்த்தி, தான் பாராளுமன்ற பதவி வகித்த காலத்தில் இந்திய தேசிய ஊரக தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவராக மூன்று முறை இருந்துள்ளார். கவுரவத் தலைவராகவும் துணைத் தலைவராகவும் ஐ.என்.டி.யூ.சி.யில் பதவி வகித்துள்ளார். அத்துடன் ஜெனிவாவில் உள்ள பன்னாட்டு தோட்டம், விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பில் துணைத்தலைவராக 1987 ஆம் ஆண்டிலும் மற்றும் 1988-94 வரை இருந்துள்ளார். ஐ.யூ.எப் இன் வேளாண் தொழிலாளர்கள் பெடரேசன் துணை தலைவராகவும் இருந்துள்ளார். மேலும் மாநில இன்சூரன்ஸ் கழகம் மற்றும் செய்தித்தாள்கள் ஆலோசனை கழகத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். 
  இவர் 27-10-2002 ஆம் ஆண்டு, தனது அறுபத்திரண்டாம் வயதில் சென்னையில்,  மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். இவரது உடல் சென்னையிலிருந்து சேலம் நகரில் அழகாபுரம் என்ற இடத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுப் பின் அங்கிருந்து அவர் பிறந்த ஊரான வாழப்பாடிக்குக் கொண்டுசெல்லப்பட்டு வாழப்பாடி பேருந்து நிலையத்திற்கு எதிரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் எரியூட்டப்பட்டது. இவருக்கு மனைவி மற்றும்  இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உண்டு.
  சென்னையில் அபிராமபுரத்தில் அன்னாருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக