சனி, 29 அக்டோபர், 2016

அதியமான் நெடுமான் அஞ்சி


அதியமான் நெடுமான் அஞ்சி:
ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான்,  அதியமான் கோட்டம், தருமபுரி 
        திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள திருக்கோயிலூர் அருகே பதினாறு கிலோ மீட்டர் தொலைவில் தென்பெண்ணையாற்றின் கரையில் அமைந்துள்ளது,. பண்டைய கல்வெட்டுகளில் “வாணகோப்பாடி நாடு” குறிக்கப்பெற்றுள்ள ஜம்பை என்ற கிராமம். பல குன்றுகள் கொண்ட இந்த ஊரில், ஆள்ஏறாப்பாறை, தாசிமடம், சன்யாசிமடம் என்றெல்லாம் அழைக்கப்படும் பல குகைகள் இந்த குன்றுகளில் உள்ளன. அதில் தாசிமடம் என்றழைக்கப்படும் குகையில்தான் அதியமான் நெடுமான் அஞ்சியின் வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டு ஒன்று தமிழ் நாட்டின் தொல்பொருள் ஆய்வுத்துறை கண்டுபிடித்தது. கி.பி. முதலாம் நூற்றாண்டின் எழுத்துக்களைக்கொண்ட அந்த கல்வெட்டில் எழுதப்பட்டுள்ள வாசகம் ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாளி. 
       தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி, மலையமான் திருமுடிக்காரியை வென்று திருக்கோயிலூரைக் கைப்பற்றியதை அவனது மாபெரும் வெற்றியாக ஔவையாரும், பரணரும் பாடிச்சென்றுள்ளனர். மேலும் இவனது புகழை மாமூலனார், அரிசில்கிழார், நல்லூர் நத்தத்தனார், பெருஞ்சித்திரனார், அஞ்சியின் அத்தைமகள் நாகையார் ஆகிய புலவர்கள் பாடிய பலப் பாடல்கள் நமது சங்க இலக்கியங்களில் பரவிக்கிடக்கிறது. 
      கி.பி.  மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மௌரியப் பேரரசனான அசோகனது கல்வெட்டுக் குறிப்புகளில், சோழர்கள், பாண்டியர்கள், கேரளபுத்ரர் (சேரர்கள்), சத்யபுத்ரர் என்ற வாசகம் வருகிறது. இவனது காலத்தில் அசோகனது நாட்டின் எல்லைக்கப்பால் தனி ஆட்சி நடத்தி வரும் மன்னர்களின் ஒத்துழைப்புடன் பௌத்த மதம் தழைக்க அவன் வகை செய்துள்ளான்.எனவே அவர்களைப் பற்றிய குறிப்புகளை அசோகமன்னன் கல்வெட்டில் பொரித்துவைத்துள்ளான். இந்த “சத்யபுத்ரர்” யார் என்பது குறித்து வரலாற்று ஆராய்ச்சியாளர்களிடையே ஒத்த கருத்து இல்லாமல் இருந்தது. சத்யபுத்ரர் என்பார் அதியமான் நெடுமான் அஞ்சியே என்பது அவன் வெற்றிகொண்ட திருக்கோயிலூருக்கு அருகாமையில் கிடைத்த இந்த கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள “ஸதியபுதோ” என்ற சொல்லின் மூலமும் ஔவையாரும் பரணரும் பாடிய இலக்கியச் சான்றுகளைக் கொண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.  இவன் சைவ மதத்தைச் சார்ந்தவன் என்றாலும் அனைத்து சமயங்களையும் போற்றியவன் என்பதை, திருக்கோயிலூரை வென்றபோது பெளத்தர்களுக்கு பாளி அமைத்துக் கொடுத்ததை "அஞ்சி ஈத்த பாளி" என்று கல்வெட்டில் எழுதிவைத்துள்ளான். 
     சிறந்த வீரனான அதியமான் நெடுமான் அஞ்சி, சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்ற மன்னனால் தகடூர்ப் போரில் வீழ்த்தப்பட்டான்.
ஜம்பை கல்வெட்டு 
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக