வியாழன், 6 அக்டோபர், 2016

தீர்த்தமலை

தீர்த்தமலை (The Hill with Holy Water)
தீர்த்தமலையின் தோற்றம் 
மலைக்கோவிலுக்குச் செல்லும் வழி 
மலைக்கோவிலுக்குச் செல்லும் படிகள் 
 தீர்த்தகிரீஸ்வரர் கோவில் 
 தருமபுரி மாவட்டத்தின் பண்பாட்டுச் சின்னமாக விளங்கும் தீர்த்தமலை, புனிதமும் இயற்கை அழகும் வாய்ந்தது. 
   இது அருணகிரி நாதரால் பாடல்பெற்ற தலம். 1500 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ளது. சைவ எல்லப்ப நாவலர் என்பார் தீர்த்தமலை தலபுராணம் என்ற நூலை எழுதியுள்ளார்.
     ஏறத்தாழ கடல்மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் உயர்ந்த சிகரங்களை உடையது. தென்பெண்ணை  ஆற்றுக்குத்  தெற்கே காடுகள் அடர்ந்த  பகுதியில் உள்ளது தீர்த்த மலை புண்ணிய தீர்த்தங்கள் நிறைந்தது. தருமபுரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தமான புண்ணிய ஸ்தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும்  விளங்கிவருகிறது . தருமபுரி மாவட்டத்தில் அரூர் வட்டத்தில் அரூரிலிருந்து வடகிழக்கே அரூர்-திருவண்ணாமலை செல்லும் பாதையில் 19 கி.மீ. தொலைவில் உள்ளது. இம்மலையின் அடிவாரத்தில் உள்ள சிற்றூரின் பெயரும் தீர்த்தமலையே.இங்கிருந்துதான் மலைப்
பாதையில் ஏறிச்சென்று மலைக்கோவிலை அடையவேண்டும்.
    அடிவாரக்கோவிலில் உள்ள நவகண்ட  சிலைகள், அரசர் சிலைகள், கல்வெட்டுகள் ஆகியன வரலாற்று மூலங்கள்.  இங்குள்ள வல்லப கணபதி, அதிகார நந்தி,  மலைக்
கோவிலில் உள்ள சூலினி துர்க்கை, பரமேஸ்வரி கண்ணுக்கு விருந்தளிப்பவை.  அடிவாரக் கோவில் மிகப்பெரிய  சுற்றுச்சுவரை கொண்டுள்ளது.   
     தீர்த்தகிரீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. இதனைச் சோழர் காலத்தில் முதலாம் இராஜேந்திர சோழனுடைய அதிகாரிகள் கட்டியுள்ளனர். இவர் காலத்தை சேர்ந்த கல்வெட்டுக் குறிப்புகள் இங்கு காணப்படுகின்றன.  இங்கு மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் இராஜேந்திரன் மற்றும் விஜயநகர அரசர்களான வீர புங்கன உடையார்,  வீர விஜயராச தேவர், மல்லிகாதேவர் ஆகியோருடைய கல்வெட்டுகள் உள்ளன. பிற்காலத் சோழர், விஜயநகர அரசர்கள், நாயக்க  கட்டக்கலைக்கு சான்றாக இங்குள்ள கோவில்கள் உள்ளன.
  தீர்த்தங்கள்:   தீர்த்தமலையிலுள்ள சிகரங்களுக்கு கீழே பிறை வடிவப் பாறைகளிலிருந்து ஊற்றுகள், இம்மலை யின் சிறப்பிற்கே காரணமான பஞ்ச தீர்த்தங்களாக அமைந்துள்ளன. இவற்றுள் முதன்மையானது  இராமதீர்த்தம். ஏறத்தாழ 30 அடி உயரத்திலிருந்து எக்காலத்திலும்   ஒரே சீராக ஒரு சிறு நீர்வீழ்ச்சி போல இந்த தீர்த்தம்  விழுந்துக்கொண்டே இருக்கிறது. இதன் அருகிலேயே இதே பாறையிலிருந்து கசியும் நீர், சுனைகளாக அகத்தியர் தீர்த்தம், அக்னி தீர்த்தம், குமார தீர்த்தம், கௌரி  தீர்த்தமாக அமைந்துள்ளன. கனிம வளமும் மூலிகைகள் சத்தும் நிறைந்த இந்த தீர்த்தங்களில் நீராடி, தீர்த்தகிரீஸ்வரரை தரிசித்தால் தீராத வினைகளிலெல்லாம் தீரும், ஆரோக்கியமும் அமைதியும் பெருகும் என்பது நம்பிக்கை.  இம்மலையின் பிற சிகரங்களில் ஓரிரு இடங்கள் தவிர வேறு எங்குமே ஒரு துளி நீர்கூட இல்லை. வடகிழக்குச் சிகரத்தின் கீழ் மகரிஷி வசிஷ்டர் தவம்  கூறப்படும் குகை உள்ளது. இப்பாறையின் வெடிப்பிலிருந்து சொட்டுசொட்டாக வசிஷ்டர் தீர்த்தம் வருகிறது.
ஹனுமன் தீர்த்தம்,
தீர்த்தமலையிலிருந்து 6கி.மீ தொலைவில் அரூர்-ஊத்தங்கரை சாலையில் தென்பெண்ணை
யாற்றில் உள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடிய பின்னரே தீர்த்தமலைக்கு செல்லவேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் நம்பிக்கை.
எம தீர்த்தம்:
மலையின் பின்புறம் வேப்பம்பட்டி எனும்  கிராமத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. இம்மலையின் பின்புறம் உள்ள மலைத்தொடர்களுக்கு இடையே உயர்ந்த சிகரத்தினின்று ஓர் அருவி ஓடி ஓடையாக  அடிவாரத்தில் ஓடுகிறது. இந்த அருவி விழும் பாறையில் படர்ந்துள்ள மரவேர்களுக்கு கீழே சிறு குழியில் நிரம்பியுள்ள நீரே ‘யம தீர்த்தம்’ எனப்படும் ‘தருமர் தீர்த்தம்’. இவை வற்றுவதில்லை.  இதனை ஒட்டி அழகான ஒரு சிறிய சிவன் கோவில் உள்ளது. அழகிய வேலைப்பாட்டுடன் இரட்டை நந்திகள் கருவறையின் முன்னே அமைந்துள்ளன. இக்கோயிலுக்கு வரும்பாதை முழுவதும் சீராகக் கற்கள் புதைக்கப்பட்ட பாதை உள்ளது. ஒரு காலத்தில் இந்த கோவில் சீரும் சிறப்புமாக இருந்திருக்கவேண்டும். இன்று பொலிவிழந்து காணப்படுகிறது.

வருணதீர்த்தம்:
அரூர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வருணீஸ்வரர் கோவிலை ஒட்டி முன்புறம் அமைந்துள்ள குளமே வருணதீர்த்தம். இன்று இந்த குளம், குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் மிகவும் மாசடைந்து காணப்படுகிறது. வாயு தீர்த்தமும் இங்குதான் உள்ளது.
இந்திர தீர்த்தம்:  தீர்த்தமலைக்கு கீழே மலைக்குத் தென்கிழக்கே தென்பெண்ணை ஆற்றின் கரைப்பகுதியில் மொண்டுகுழி எனும் இடத்தில் உள்ளது. இங்குள்ள சிறு சிவன் கோவிலிலுள்ள மூலவர் தீர்த்தகிரீஸ்வரர் என்றும் பின்னாளில் இங்கிருந்து மூலவர் சிலையை தீர்த்தமலை கோவிலுக்குக் கொண்டுசென்று பிரதிஷ்டை செய்யதாக ஒரு செவிவழி கதை உண்டு.
தீர்த்தமலைச் சிகரங்களின் தோற்றத்தையும் அமைப்பையும் அழகையும் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் துணை ஆட்சியராக இருந்த லேபானு இம்மலைச்சிகரங்களின் மீது ஏறிக் கண்டுகளித்து வருணித்துள்ளார். “வடக்கே இருந்து பார்க்கும்போது தீர்த்தமலையின் கீழ்ப்பகுதியிலிருந்து உச்சி நோக்கி ஒரு நீண்ட, சுவர் போன்ற செங்குத்தான குறுகிய பெரும்பாறை செல்கிறது. இந்தப் பாறை ஒரு காட்டுப்பன்றியின் பிடரியைப் போல முதுகிலிருந்து ஆரம்பித்து  தலை வரை நீண்ட முகடு போலச் செல்கிறது. விலங்கின் முதுகெலும்பை போல அமைந்துள்ள இப்பாறை நெடிதுயர்ந்து செங்குத்தாக நிற்கிறது. இதன் முகடு மிகக் குறுகலாக 2-3 அடி அகலமே உள்ளது. மலை ஏறுவதிலே வல்லவர்கள் கூட இச்செங்குத்துப் பாறையில் ஏறி உச்சிக்குச் செல்லத் துணியமாட்டார்கள்’ என்று வருணிக்கிறார்.
இந்த மலையின் மூன்றாவது சிகரத்தின் அருகே அமைந்துள்ளது சீலநாய்க்கன்கோட்டை.   சிகரத்தின் அடி விளிம்பை ஒட்டி நீண்டு வளைந்து செல்லும் கோட்டை மதில் உள்ளது. இது பெரிய கருங்கற்களை அடுக்கி அமைக்கப்பட்டுள்ளது. மேலே செங்கற்களால் கட்டப்பட்டுள்ள அழகிய மண்டபமும் படைவீடுகளும் இரண்டு பெரிய குளங்களும் மற்றும் குதிரை லாயங்களும் உள்ளன. இன்று இந்த கோட்டை மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளது.
லேபானு இந்தக் கோட்டையைப் பற்றி விவரிக்கும்போது, “இக்கோட்டையில் பெரிய உருண்டைக் கற்களால் செய்யப்பட பீரங்கிக்குண்டுகள் பலப்பலவாகக் காணப்படுகின்றன. இதைப் பார்த்தால் இந்த மலைக்கு வரும் எதிரிகளுக்கு எவ்வளவு பயங்கரமான வரவேற்பை சீலநாய்க்கன் தந்திருப்பான் என்பது தெரிகிறது” என்று ஆச்சிரியப்படுகிறார்.
சீல நாயக்கன்கொட்டாய் 
இந்த கோட்டையைக் கடந்து மேலும் செங்குத்தான பாறைகளில் ஏறிச் சென்றால் கன்னிமார் பாறையை கடந்து இம்மலையின் மிக உயர்ந்த சிகரத்தை அடையமுடியும். இச்சிகரத்தின் மேல் சுமார் இரண்டு அடி உயரமுள்ள, இரும்பு கனிமக்கல்லைக் கொண்டு செதுக்கப்
பட்ட ஒரு விநாயகர் சிலை வைக்கப்
பட்டுள்ளது. அருகே ஒரு இரும்பு கொப்பரையும் உள்ளது. இதனை உச்சி
பிள்ளையார் சிகரம் என்கிறார்கள் இப்பகுதியினர்.

கார்த்திகை மாதம் தீபத்திருநாள் அன்று இங்குள்ள இரும்பு கொப்பரையில் தீபமேற்றி வழிபடுவதும் வழக்கம்.
                       
தொடரும் 

உச்சிப் பிள்ளையார் 

2 கருத்துகள்:

  1. அரிய தகவல்களை பகிர்ந்த்தற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. தீர்த்தமலையின் அரிய தகவல்களை எளிய நடையில் தமிழ் உள்ளங்களுக்கு பகிர்ந்த
    தமிழ் நல் உள்ளங்களுக்கு

    ஆழ்மனதின் வாழ்த்துகள்.

    அன்புடன்

    எல்.தருமன்
    18. பட்டி.

    பதிலளிநீக்கு