திங்கள், 10 அக்டோபர், 2016

புல்லாரப்பன் சுவாமி


புல்லாரப்பன் சுவாமி



    தருமபுரி மாவட்டத்தில், மொரப்பூர் – கம்பைநல்லூர் சாலையில், சாலையோர புளியமரத்தின் கீழ் அமைந்துள்ளது கால்நடைகளுக்குத் தெய்வமான ஒழுக்கம் புல்லாரப்பன் சுவாமி.
 தருமபுரி மாவட்டம் முல்லை மற்றும் குறிஞ்சிநில இயல்புகளைக் கொண்டதாகும் என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். முல்லை நிலமக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பது கால்நடைகளே. இந்த கால்நடைகளைப் போற்றும் வகையில் மாட்டுப்பொங்கல் விழா இங்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின்போது கால்நடைகளின் நலவாழ்வுக்காக சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தும் பழக்கம் இம்மாவட்டத்தில் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
ஒழுக்கம் புல்லாரப்பன் சுவாமி கால்நடைகளின் தெய்வமாக வணங்கப்படுகிறார். இங்கு திருவிழாவின் போது கூடும் விவசாயிகள் மற்றும் கால்நடைகள் வளர்ப்போர் தங்களது கால்நடைகள் குறிப்பாக பசுக்கள் நன்கு பால் கரக்கவும்,  ஆரோக்கியமாக இருக்கவும் வேண்டி வழிபாடுகள் நடத்துகிறார்கள். இந்த வேண்டுதல்கள் நிறைவேறினால் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் அன்று சுவாமிக்கு களிமண்ணால் செய்யப்பட்ட கன்று உடன் கூடி பசுமாட்டு பொம்மைகளை செய்துவைத்தும் மாவிளக்கு வைத்தும் பொங்கல் படையலிட்டும் வழிபாடு செய்கிறார்கள்.  ஆண்டு தோறும் இந்த புல்லாரப்பன் சுவாமிக்கு வேண்டுதல்கள் நிறைவேற்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கனோர் கலந்துகொள்கிறனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக