செவ்வாய், 4 அக்டோபர், 2016

தருமபுரி தகவல் களஞ்சியம்

  

தருமபுரி தகவல் களஞ்சியம்   (Dharmapuri Encyclopedia) என்ற இந்த நூலில், தருமபுரி மாவட்டத்தின் வரலாறு, புவியியல், சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள், இம்மாவட்ட மக்களின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம், வேளாண்மை, தொழில்கள், வாழ்க்கைமுறைகள், இம்மாவட்டத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற மனிதர்கள், முக்கிய நிகழ்வுகள் முதலான எண்ணற்ற தகவல்களை இளய சமுதாயத்தினருக்குக்  கொண்டு செல்வதே எனது நோக்கம். இதற்காக நான் பலநூறு புத்தகங்களிலிருந்தும், ஆய்வுக்கட்டுரைகளிலிருந்தும், மாவட்டம் குறித்த தகவல்களை இணைய தளங்களில் இருந்தும் சேகரித்துத் தொகுத்துக்கொடுத்துள்ளேன்.
இந்த எனது முயற்சி பரவலாகி தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்கள் குறித்தும் தனித்தனியே தகவல் களஞ்சியங்கள் உருவாகி அவைகள் அனைத்தும் இளைய தலைமுறையினருக்கு போய் சேரவேண்டும் என்பது எனது விருப்பம். 
தற்கால தமிழ் இலக்கியத்தில் வட்டார நாவல்கள் என்ற எனது திறனாய்வுக் கட்டுரைகளை வாசித்து, உற்சாகத்துடன் என்னை நெறிப்படுத்தி, சிறப்பாக எழுத தூண்டியதுடன் எனக்கு ஆய்வரங்கங்களில் களம் அமைத்து எனது கட்டுரைகளை வாசிக்க வைத்ததுடன் அவைகளை தான் பதிப்பித்த புத்தகங்களில் இடம்பெறச் செய்து சிறப்பித்ததுடன் என்னை ஆய்வாளர்கள், அறிஞர் பெருமக்கள், கவிஞர்கள் என பலரோடு பழகவைத்து, செழுமைப்படுத்திய கல்வியாளர், எழுத்தாளர், திறனாய்வாளர், ஓவியர், வரலாற்றாய்வாளர், பதிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட மறைந்த கவிஞர் சேலம் தமிழ்நாடன் அவர்கள். 1975 ஆம் ஆண்டு முதல் 1982  ஆம் ஆண்டு வரை நாள்தோறும் எங்களின் பணி நேரம் போக, எனது நண்பர்களுடன் இவருடனேயே கழித்திருக்கிறேன். இவருடனான இலக்கியப் பயணத்தில், விழாக்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் சந்திப்பு என சில நேரங்களில் நள்ளிரவு வரைக்கூட உரையாடல் நீளும். இவர் தனது புத்தகக் குவியல்களுக்கிடையேதான் எப்போதும் இருந்துள்ளார். தனது பணிக்குச் செல்லும்போதுகூட இவரது கைகளில் ஒன்றிரண்டு புத்தகங்கள் இருக்கும். பேருந்தில்கூட வாசித்தபடியேதான் பயணிப்பார். அவரே  “நட்சத்திரப்பூக்கள்” எழுத்துகளை தமிழில் வடிவமைக்கையில் உடனிருந்து பார்த்தவன். அதனை   அச்சில் கொண்டுவந்தது, அவரது ஓவியத்திறமைக்கு ஒரு சான்று. (டிஜிட்டல் முறை இல்லாத காலம் அது. பின்னாளில் நட்சத்திரப்பூக்கள் கவிதை நூல் வெளியானபோது, இவரது “நட்சத்திரப்பூக்கள்” எழுத்துகள் வடிவமைப்பை குமுதம் வார இதழ் வெகுவாகப் பாராட்டியது). “நட்சத்திரப்பூக்கள்” கவிதை நூல் அச்சிடுகையில், அவருடனிருந்து தனித்தாள்களைப் புத்தகமாக அவர் வீட்டிலேயே பைண்ட் செய்தது, “சாரா” நாவல் எழுதுகையில், அதற்கான குறிப்புகளை பல ஆங்கில பருவ இதழ்களில் இருந்து தேடி அதனை எங்களிடம் படித்துக்காட்டியது, எல்லாமே எனது வாழ்வில் மறக்கமுடியாத தருணங்கள். நான் தருமபுரிக்கு வந்துவிட்ட பிறகு, கர்னல் ரீடின் அறிக்கை நூலை தருமபுரிக்கு எடுத்துவந்து பேரா. கோவிந்தன் அவர்களிடமும், என்னிடமும் மகிழ்ச்சி பொங்க காட்டியது அதனை புத்தகமாக்க வசதியில்லாமல், தருமபுரி மாவட்ட வளர்சிக்கழகத்தின் உதவியுடன் தட்டச்சு செய்து மெமியோகிராப் நூலாக்கி தருமபுரியில் கருத்தரங்கம் நடத்தி வெளியிட்டது யாவுமே எனது வாழ்நாளில் மறக்கமுடியாதத் தருணங்கள்.
அன்னாருக்கும்....
இராசிபுரத்தில் பிறந்த, முனைவர் திரு. புஸ்நாகி. ராஜண்ணன் அவர்கள்.  நூலக அறிவியலில் பட்டம் பெற்று, சேலம் மாவட்ட நூலகராக இருந்து, பின்னர், அமெரிக்காவில் கான்சாஸ் பல்கலைக்கழகத்தில் நூலகவியலாளராக பணியாற்றியபடியே மார்ட்டின் லூதர் கிங் மற்றும் தந்தை பெரியாரின் கொள்கைகளை ஒப்பீட்டாய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். ஆராய்ச்சி மானவர்களுக்கு ஆய்வுத் தகவல்களை சேகரித்தல், ஆவனப்படுத்துதல், கட்டுரை வடிவமைப்பு முறைகள் போன்றவைகள் குறித்து வகுப்புகள் எடுத்துவந்துள்ளார். அந்த பல்கலைக் கழகத்திலிருந்து இவர் ஓய்வுபெற்று, சேலம் திரும்பி, “கொங்கு ஆய்வகம்” என்ற வரலாற்று ஆய்வு அமைப்பை உருவாக்கினார். இவர் சேலம் மாவட்டம் குறித்த ஓர் ஆய்வரங்கத்தை, தமிழ்நாடனுடன் இணைந்து நடத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கருத்தரங்கக் கட்டுரைகளின் சுருக்கங்களைத் தட்டச்சு செய்து, படியெடுத்து, நூலாக்கம் செய்யும் சிறு பணியை நான் மேற்கொண்டேன்.  இவர் தனது வீட்டில் அமைத்துள்ள நூலகத்தில் உள்ள புத்தகங்கள் மற்றும் மைக்ரோஃபிலிம் தொகுப்புகள், கொங்கு மண்டலம் குறித்து உலக அளவில் திரட்டப்பட்டவைகள். அதை பார்த்தாலே ஆதிகாலம் முதல் அன்றைய காலம் வரையான கொங்கு மண்டலப் பகுதிகள் நாம் மனதில் விரிவடையும். இவருடைய தென் இந்திய ஆய்வுகள்” (அமெரிக்க நாட்டு பல்கலைக்கழகங்களில் தென்னிந்தியா குறித்த முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக் கட்டுரைகளின் சுருக்கம்) மற்றும் இவரது “சேலம் என்சைக்ளோபீடியா” ஆகிய புத்தகங்களே ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்குப் பின் நான் இந்த நூல் எழுவதற்கு தூண்டுகோலாய் அமைந்தது.
அன்னாருக்கும்.......
மேற்படி கருத்தரங்கம் நடைபெற்ற நாட்களில் கருத்தாளர்களை, குறிப்பாக மறைந்த பயணக்கட்டுரை எழுத்தாளர் திரு. சோமலே அவர்களை உடனிருந்து கவனித்துக்கொண்டதும் எனது வாழ்வில் மறக்கமுடியாதது.. (இவர் தனது பயணக்கட்டுரைகளில் மாவட்ட வரிசைகள் என்று முதன்முதலாக சேலம் மாவட்டம் பற்றி எழுதியமையால், இவர் கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்). இத்தருணத்தில்தான், திரு.சோமலெ அவர்கள்,  நாட்டுப்புறவியலில் ஆர்வம் கொண்டிருந்த என்னை “கிராமங்களுக்குப் போ, வயதானவர்களுடன் கலந்துரையாடு, அவர்கள் கூறும் வாய்மொழி வரலாறுகள் (Oral history), பாடும் பாடல்கள், சொல்லும் கதைகள், பழமொழிகள், பேச்சுவழக்குகளைக் கூர்ந்து கவனி, அதில் அவர்களது பாரம்பரிய அறிவும், தொழில்நுட்பங்களும் உனக்குக் கிடைக்கும்” என்று எனது பார்வையை புத்தகங்களிலிருந்து கிராமங்களை நோக்கித் திருப்பிவிட்டார்.
அன்னாருக்கும் ......
சேலம் மாவட்டம் குறித்து திரு தமிழ்நாடன் நடத்திய ஆய்வரங்கில், சேலம் மாவட்ட வட்டார நாவல்கள் என்ற எனது கட்டுரையை  (எழுத்தாளர் திரு விட்டல்ராவ் அவர்களின் “போக்கிடம்” நாவல் குறித்த ஓர் ஆய்வுக்கட்டுரை) நான் வாசித்து முடித்த பிறகு எனக்கு அறிமுகமான சேலம் அரசு கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர் மறைந்த மா.மு.மணி அவர்கள், தனது முனைவர் பட்ட ஆய்வுக்காக (சேலம் மாவட்ட மக்கள் பிழைப்புக்காக வாழ்விடம் தேடி அண்டை நாடுகளுக்கு அடிமைகளாக, இடம்பெயர்ந்தது, அங்கு அவர்கள் பட்ட துன்பங்கள், துயரங்கள் குறித்த) கட்டுரைகளை படியெடுக்கும் பணியில் எனது ஓய்வு நேரத்தில் ஈடுபட்டேன். அப்போது இந்திய, தமிழக மறைக்கப்பட்ட, மறந்துபோன வரலாறுகள் குறித்து அவர் கற்றுக்கொடுத்த விஷயங்கள் யாவுமே நான் இந்த நூலை எழுத காரணமாக அமைந்தது எனக் கூறலாம்.
அன்னாருக்கும்......
தருமபுரி மாவட்டம் ஒரு வரலாற்றுப் பேழை. இயற்கை வளங்களுக்குக்  குறைவில்லாதது. அதனை பாதுகாக்கும் பணிக்கு இளையசமுதாயத்தை ஊக்குவிக்கும் பொறுப்பும் கடமையும் நமக்கு உண்டு என்று என்னை 1985 ஆம் ஆண்டு, மூகப்பணிக்கு இட்டுச்சென்ற எனது ஆசான் மறைந்த தமிழ் பேராசிரியர் திரு. தி. கோவிந்தன் அவர்கள். (அன்றிலிருந்து நாளது தேதி வரை எனது சமூகப் பணிகள் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது). தருமபுரி மாவட்டத்தில் இவருடன் கைகோர்த்துப் பயணித்த எண்ணற்றோரை நான் அறிவேன். அவர்களில் குறிப்பாக, மறைந்த திரு. வே. வெ. ராமலிங்கம் (நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர்), திரு. ராமச்சந்திரன் (மாவட்ட ஆட்சித் தலைவரின் ஊரக வளர்ச்சித்துறை நேர்முக உதவியாளர்), பேரா. கோவிந்தராசன் (தமிழ்த்துறை தலைவர்,அரசு கலைக்கல்லூரி, தருமபுரி), பேரா. மு.ராஜேந்திரன், விலங்கியல் துறைத்தலைவர், அரசு கலைக்கல்லூரி, தருமபுரி), திரு. வடிவேல் (வட்டார வளர்ச்சி அலுவலர்), திரு. குலோத்துங்கன் (தருமபுரி மாவட்ட வளர்ச்சி முகமை), வழக்கறிஞர் திரு. பி. பொன்னுசாமி, முதுபெரும் சமூகப் பணியாளர் திருமதி எம்.ஆர். காளியம்மாள், திரு. குருராவ் (அஞ்சல்துறை), தீர்த்தமலை தமிழாசிரியர் ராஜமாணிக்கம் ஐயா ஆகியோர் என் கண்முன்னே வந்துசெல்கின்றனர். 80 களின் இறுதியில் சுற்றுச்சூழல் குறித்தும் மாற்று எரிசக்தி ஆதாரங்கள் குறித்தும் நான் எழுதிய சாண எரிவாயு சாதனைகளும் அதன் வடிவமைப்பு முறைகளும் என்ற நூலை ஸ்ரீ விவேகானந்தர் அறக்கட்டளை மூலம் வெளியிட்டு என்னை மேலும் எழுதத் தூண்டியவர். ஒருநாள் மாலை, 1920-ஆம் ஆண்டு வெளியான “தீர்த்தமலை தலபுராணம்” என்ற நூலை நான் கண்டெடுத்து அவரிடம் கொண்டுபோய் காட்டியபோது பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார். உடனே இருவரும் தருமபுரியின் முதுபெரும் வழக்கறிஞரும், சிறந்த படிப்பாளியுமான திரு. எஸ். சுப்பராயன் அவர்களிடம் கொண்டுபோய் காட்டினோம். அதனைப்படித்துப்பார்த்த அவர் “இந்த நூலை உடனே மறுபிரசுரம் செய்யுங்கள்” என்றார். அந்த நூலை மறுபிரசுரம் செய்வதில் ஆர்வம்காட்டி பயணித்ததில் எனது ஆசான் திரு. கோவிந்தன்  அவர்களுடன் நானும் இருந்தேன். (தீர்த்தமலை தலபுராணம் உரைநடை வடிவிலும், செய்யுள் வடிவிலும் இரண்டு புத்தகங்களாக வெளிக்கொண்டுவந்தோம்). அன்னாருக்கும் ......
           இந்த நூல் காணிக்கை.      

பேரா.கோவிந்தன்,அவரது மனைவி, கவிஞர் தமிழ்நாடன் ,அவர் மனைவி கலைவாணி
 மற்றும் நான் எனது மனைவி  மற்றும் குழந்தைகளுடன் 

1 கருத்து:

  1. புலவர் தி,கோவிந்தன் அவர்களை ராசிபுரதில் பார்த்து பழகி அவரிடம் அறிவுரைகள் கேட்டு வளர்ந்தவன் . அவரது பெயரை தங்கள் பதிவில் பார்த்து நெகிழ'ந்தேன்.

    பதிலளிநீக்கு