புதன், 5 அக்டோபர், 2016

மாட்டுப்பரிசை

 மாட்டுப்பரிசை:
       தருமபுரி  மாவட்டத்தில் ஆண்டுதோறும் தை,மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய ஐந்து மாதங்களில் மாட்டுச்சந்தைகள் நடைபெறுகின்றன. இந்த சந்தை 'மாட்டுப்பரிசை' என்று பரவலாக அழைக்கப்படுகிறது. இந்த சொல் வழக்கு அண்டை மாநிலங்களிலிருந்து இங்கு வந்தது.
 தருமபுரி நகரத்தை ஒட்டிய அதியமான்கோட்டை மற்றும் இண்டூர் கிராமங்களிலும் பாலக்கோடு வட்டத்தில் வெள்ளிச்சந்தை, சோம்பள்ளி என்ற ஊர்களிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி நகருக்கருகே காட்டுநாயனபள்ளியிலும் நடைபெறும் மாட்டுச்சந்தைகள் மிகவும் பிரபலமானவைகளாகும்.
    இந்த மாட்டுப்பரிசைகள் பெரும்பாலும்  ஊர்களில் உள்ள கோயில் திருவிழாவோடு இணைந்தே நடைபெறுகிறது. இந்த சந்தைகள் பெரும்பாலும் பத்து நாட்கள் நடைபெறுகின்றன. கோயிலை ஒட்டிய பகுதிகளில் மாடுகள் கட்டிவைக்கப்படுகின்றன. தேவையான தீவனங்கள் மாடுகளை விற்க வருவோர்கள் கையோடு  எடுத்து வருகின்றனர். மாடுகளுக்குத் தேவையான தண்ணீர் வசதியை கோயில் நிர்வாகம் செய்து தருகிறது. இந்த சந்தைகள் யாவும் ஏனைய வார சந்தைகளை போலவே கோயில் நிர்வாகத்தின் மூலம் ஏலம் விடப்பட்டு ஏலம் எடுத்த குத்தகைதாரர் நுழைவுக்கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறார்.
       இந்த மாட்டுப்பரிசைக்கு கன்றுக்குட்டிகள், ஏர்மாடுகள், கறவைமாடுகள்,  பொலிக்காளைகள், எருதுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. இங்கு கூடும் மாடுகள் கருப்பு, வெள்ளை, மயிலை மற்றும் சிவப்பு நிறம் கொண்டவைகள். பெரும்பாலும் நாட்டுரக மாடுகளும் கலப்பின கறவை மாடுகளும் விற்பனைக்கு வருகின்றன.
   இந்த மாட்டுப்பரிசைக்கு மாடுகளை வாங்க கர்நாடக, ஆந்திர மாநிலங்களிலிருந்தும் வியாபாரிகள் வருகின்றனர். வயது முதிர்ந்த மாடுகளை இறைச்சிக்காக வாங்கவருவோரும் அதிகமுள்ளனர்.
       மாட்டுப்பரிசையில் மாடுகள் வாங்குவோர், விற்போருக்கும் இடையே நேரடியாக வியாபாரம் நடைபெறுவதில்லை. பெரும்பாலும் இடைத்தரகர்களைக் கொண்டே நடைபெறுகிறது. இந்த இடைத்தரகர்களை 'தருவான்', 'தல்லானி' என்று அழைக்கின்றனர். தரகர்கள் தங்கள் கைமேல் துண்டுபோட்டு மூடிக்கொண்டு ரகசியமாக கைவிரல்கள், விரல்களின் பாகங்கள் ஆகியவற்றைக் கொண்டு சங்கேத மொழியில், வாங்க விரும்பும் விலை, விற்க விரும்பும் விலை, தரகு தொகை முதலானவைகளை முன்கூட்டியே பேசிக்கொண்டே வியாபாரத்தை ஆரம்பிக்கின்றனர். 
        தரகர்களின் சங்கேத மொழியானது அநேகமாக அனைத்து மாட்டுப்பரிசைகளிலும் அனைத்து தரகர்களிடமும் ஒரே   மாதிரியாக   இருக்கின்றன. இந்த சங்கேத மொழி, தரகர்களைத் தவிர மற்றவர்கள் அறிந்துகொள்ள முடிவதில்லை. 
   வியாபாரம்  முடிந்தவுடன் மாட்டை விற்பவர் மாட்டை ஒப்படைக்கும்போது மூக்கணாங்கயிறு, கழுத்துக்கயிறு, கொம்புக்கயிறு ஆகியவற்றை கழற்றிக்கொண்டு வடக்கு திசை  நோக்கி நின்று மாட்டை வாங்குவோர் கையில் மாட்டுச் சாணத்தைத் தந்து ஒப்படைக்கிறார். மாட்டை வாங்கியவர் மேற்படி கயிறுகளை புதிதாக வாங்கிபோட்டுக் கொள்வார். இதற்கென கயிறு விற்பனை கடைகளும் மாட்டுப்பரிசையில் இடம்பெறும். மாட்டை வாங்கியவர் மாட்டுக்கயிற்றை வாங்கி ஓட்டும்போது மாடு சிறுநீர் கழித்தால் அதனை நல்ல சகுனமாகக் கருதுகின்றனர்.  
       மாடுகளை வாங்கும்போது மாட்டின் அங்கலட்சணங்களாக மாட்டின் சுழி, மச்சம் முதலானவைகளை பார்த்தே வாங்குகின்றனர். சுழிகளில் பாதாளசுழி, கொண்டைச்சுழி,  தாவணிசுழி, கத்தரிசுழி, கொடைசுழி என பலவகைகள் உள்ளன. மச்சத்தில் அக்னி மச்சம், நாகபாவன மச்சம் என மச்சங்கள் உள்ளன.   அக்னி மச்சம் என்பது கழுத்துக்கும் காதுக்கும் இடையே இருக்கும். நாகபாவன மச்சம் என்பது கடைவாயில் இருக்கும். மச்சங்கள் ஒரு ரூபாய் காசைக் காட்டிலும் பெரிதாக இருக்கும். நாகபாவன  மச்சம் நல்லது என்றும் அக்னி மச்சம் கெடுதல் என்பதும்  நம்பிக்கை.

 
   
  
  
  
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக