செவ்வாய், 4 அக்டோபர், 2016

நடுகற்கள்

  நடுகற்கள்:

    
 உலகின் அனைத்து நாடுகளிலும்  வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு  சிறப்பு உண்டு.
 அந்த காலத்தில் பல்வேறு இனக்குழுக்கள்  காரணங்களால் போர் நடந்துள்ளது. சங்க இலக்கியங்கள் போருக்கென்று இலக்கணங்கள் வகுத்துள்ளது. இவை போர்முறையை 7 வகைகளாகப் .பிரித்துள்ளது.  இந்த போர் முறைகள் அனைத்தும்  நிலவியல்  தொடர்புடையவை. 
அவைகளாவன: வெட்சிப்போர், கரந்தைப்போர், வஞ்சிப்போர், உழிஞைப்போர், நொச்சிப்போர்,   தும்பைப்போர், வாகைப்போர் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
 போர்களில் உயிர்நீத்த வீரர்களுக்கு நினைவுச் சின்னமாகக் கல் நட்டு வழிபடுவது  வழக்கமாகும். சங்க இலக்கியங்கள் இத்தகைய நினைவுச் சின்னங்களை பதுக்கை,வல்லான் பதுக்கை, நடுகல், நெடுங்கல்  என்று  அழைக்கின்றன.
 பெருங்கற்காலத்திலேயே நடுகற்கள் தோன்றிவிட்டன. உருவம் ஏதுமற்ற தனிக்கல்லே நடு கல்லாக  இருந்து பின் உருவமும் எழுத்தும் படிப்படியாக வளர்ச்சி அடைந்துள்ளது.
"காட்சி கால்கோன் நீர்ப்படை நடுதல் 
  சீர்த்தகு மரபின் பெரும்படை வாழ்த்தலென்று 
 இருமூன்று வகையினை கல்லொடு புறர "  - தொல்காப்பியர் 
  நாளடைவில், தனிக்கல்லுக்குப்  பதிலாக நெடுநிலை நடுகல் அல்லது கல்வீடு பெருகியது. நெடுநிலை நடுகற்களில் இறந்துபட்ட வீரனின் உருவத்தையும் அவனுடன்  தொடர்புடையவற்றையும்  ஓவியமாக வரைந்தனர். சங்க காலத்தில் நடுகல் என்பது ஓவியமாகவே இருந்திருக்கவேண்டும்.  பெருங்கற்கால கல் திட்டைகளில் காணப்படும் ஓவியங்கள் நடுகல் வழிபாட்டை  குறிப்பிட்டிருக்கவேண்டும். பல்லவர்கள் காலத்தில் தொடங்கி ஓவியங்களுக்குப் பதிலாக சிற்பமாக நடுகல் உருவாக்கப்பட்டன. எழுத்துக்களும் பொறிக்கப்பட்டன. வீரனின் உருவத்துடன் மங்களச் சின்னங்களும் புடைச்சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டதுடன் வீரனின் பெயர், ஊர், உயிர்நீத்த காரணம், அந்த வீரன் காலத்தில் அப்பகுதியில் ஆட்சியிலிருந்த மன்னனின் பெயர், ஆண்டு, நடுகல் உருவாக்கியவன் பெயர் முதலான    விவரங்களும்    இத்தகைய நடுகற்களில் காணக்கிடைக்கின்றன.
   நடுகல் அமைப்பில் ஏற்பட்ட வளர்ச்சிநிலையில் போரில் இறந்த வீரன் மேலோகம் அல்லது சுவர்கத்துக்கு செல்வான்  என்ற கருத்தியலுடன்  அமைந்துள்ளதையும் காண இயலும்.
    தருமபுரி மாவட்டத்தில் இத்தகைய நடுகற்களை தங்கள் முன்னோர்களாகக் கருதி "மூத்தோர் கோயில்" என்று நடுகற்களையே அய்யனாரப்பன், முனியப்பன், வேடியப்பன், சானாரப்பன் போன்ற பெயர்களால் வழிபட்டு வருகின்றனர். கல்லாவி என்ற ஊரிலுள்ள வேடியப்பன் கோயிலில் மூலவராக உள்ள சிலை ஒரு நடுகல்லே. இங்குள்ள பரிவார ஆலயங்களில் உள்ளவைகள் அனைத்தும் நடுகற்களே ஆகும்.
 பொதுவாக தமிழ்நாட்டிலேயே நடுகற்கள் தருமபுரி மாவட்டத்தில்தான் அதிகம் காணப்படுகின்றன. நூற்றுக்கணணக்கான நடுகற்கள் இம்மாவட்டத்தில் காணக்கிடைக்கின்றன. தமிழ் மட்டுமின்றி வட்டெழுத்தில் இந்த நடுகற்கள் உள்ளன. மேலும் கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் கூட நடுகற்கள் இம்மாவட்டத்தில் உள்ளன.
  குறிஞ்சி மற்றும் முல்லை நிலப்பகுதியான தருமபுரி மாவட்டத்தில் உள்ள இனக்குழுக்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் சமுதாயமாகவே நிலைபெற்றிருந்தது. இந்தச் சூழ்நிலையில் ஆநிரை கவர்தல் மற்றும் மீட்டலுக்காக குழுக்களிடையே பூசல்கள், சண்டைகள் நடைபெற்றதை இலக்கியங்களும் கூறுகின்றன. நடுகற்களும்  உணர்த்துகிறது.   
 அதேபோல வனங்களை ஒட்டிய பகுதிகளில் கானுயிரிகளுடன் சண்டையிட்டு உயிர் நீத்த வீரர்களுக்கும் நடுகற்கள் உள்ளன. பன்றிக்குத்திப்பட்டான், புலிகுத்திப்பட்டான் போன்ற வீரநடுகற்களும் கல்வெட்டுடனும் கல்வெட்டு இன்றியும் காணக்கிடைக்கின்றன.
 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக