திங்கள், 3 அக்டோபர், 2016

தருமபுரி வரலாற்றில் ஏரிப்பாசனம்

  தருமபுரி வரலாற்றில் ஏரிப்பாசனம்:
    தருமபுரி வரலாற்றில் ஏரிப்பாசனம் என்று பார்க்கும்போது நாம் இன்றைய தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்த்தே பார்க்க கேட்டுக்கொள்கிறேன்.
    தருமபுரி  மாவட்டம் வெப்பப் பகுதியைச் சார்ந்து அடிக்கடி வறட்சிக்கு இலக்காகும் சூழ்நிலையில் அமைந்துள்ளது. வேளாண் உயிர்ச்சூழல் அடிப்படையில் இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 350 முதல் 660 மீட்டர் வரை உயரத்திலுள்ளது. ஆண்டு சராசரி மழை அளவு 700 முதல் 900 மி.மீ. வரை இருக்கிறது. மண் வகையில் சுண்ணாம்பு கார்பனேட் அமையப்பெறாத செம்மண் வகை (Red non-calcareous)   காணப்படுகிறது. தலைவிரிச்சான் சோளம், சிறு தானியங்கள், கொள்ளு, நிலக்கடலை, மா, புளி, திராட்சை போன்ற பயிர்கள் முக்கியமாக விளைவிக்க
படுகின்றன.
  மாயோன் மேய காடுறை  உலகமும் 
    சேயோன் மேய மைவரை உலகமும் 
     வேந்தன் மேய தீம்புனல் உலகமும் 
     வருணன் மேய பெருமணல் உலகமும் 
    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் 
     சொல்லிய முறையால் சொல்லவும் படுமே" - (தொல்காப்பியம், பொருள்: 5) 
       மாயோன் மேய காடுறை உலகம் என்பது காடும் காடு சார்ந்த பகுதியுமான முல்லை; சேயோன் மேய மைவரை உலகம் என்பது மலையும் மலை சார்ந்த பகுதியுமாகிய குறிஞ்சி, வேந்தன் மேய தீம்புனல் உலகம் என்பது ஆறும் ஆறுசார்ந்த பகுதியுமாகிய மருதம், வருணன் மேய பெருமணல் உலகம் என்பது கடலும் கடல் சார்ந்த பகுதியுமாகிய நெய்தல். மேற்சொன்ன நால்வகை நிலங்களுடன் பாலை நிலத்தை 'நடுவுநிலைத் திணை' என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார் ( தொல், பொருள் நூ:11).

     பழந்தமிழர்கள், தமிழ்நாட்டை அதன் இயற்கையமைப்புக்கேற்ப 5 விதமாக. குறிஞ்சி, முல்லை,நெய்தல், மருதம், பாலை எனப் பிரித்து வகைப்படுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம் முல்லை மற்றும் குறிஞ்சி நிலப்பண்புகளையும் குறிஞ்சியும் முல்லையும் திரிந்த பாலைநிலப் பண்புகளையும் கொண்டது ஆகும். 

      பழந்தமிழர்கள் இயற்க்கைச் சூழலில், நிலத்தை நான்கு வகைகளாக - வன்புலம்,  மென்புலம், புன்புலம், களர்நிலம் என பாகுபடுத்தியுள்ளனர். 

  "வன்புலக் கேளிற்கு வருவிருந் தயரும் 
   மேன்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந'   - புறநானூறு, 42

       குறிஞ்சி நிலத்திலும் முல்லை நிலத்திலும் இயல்பாகவே மிகுதியான நீர்வளமில்லாதவை. கரடுமுரடான மண் இயல்பைப் பெற்றவை.

      "வித்தி வானோக்கும் புன்புலங் கண்ணகன் 
      வைப்பிற் றாயினு நண்ணி  யாளும் 
       இறைவன்   தாட்கு உதவாதே"  - குடவிபுலவியனார்
                                                                         (பாண்டியன் நெடுஞ்செழியனை குறித்துப்  பாடியது) 

   மழையை  நம்பிய மானாவாரி நிலப்பகுதிக்கு புன்புலம் என்பர் பழந்தமிழர்.
  எனவே குறிஞ்சியும் முல்லையும் வன்புலம்  பெயரால் குறிக்கப்பட்டன. தருமபுரி மாவட்டமும் வன்புல நிலமாகவும் புன்புல இயல்புகளையும் கொண்டது ஆகும். 
   குறிஞ்சி நில மக்களை  "காண்   உழு குறவர்" என நற்றினை  (209:2) கூறுகிறது. இவர்களது வேளாண்மை குறித்து சங்க இலக்கியங்களில் விரிவாக சொல்லப்பட்டுள்ளன. "புனல்காடு சாகுபடி" விவசாயத்தை இவர்கள் மேற்கொண்டுவந்துள்ளனர். காட்டில் உள்ள மரம், செடி,கொடிகளை அப்புறப்படுத்தித் தீயிட்டுக்கொளுத்தியபின்னர் நிலத்தை திருத்தியமைத்து மழைக்காலங்களில் விதைக்க ஆரம்பிப்பார்கள். இவர்கள் முல்லை நில விவசாயிகளைப் போல ஏர் பூட்டி உழுது பயிரிடுவதில்லை. காட்டுப்பன்றிகள் கிழங்குகளுக்காகத் தோண்டிய நிலத்தில் ஏற்படும் புழுதியில் தினை விதைப்பார்கள் (புறநானூறு: 159:26, அகநானூறு 302:9-10, நற்றினை 122:1-2), மலைத்தேன், காட்டில் கிடைக்கும் கிழங்குகள், காய்கனிகள் சேகரித்து உண்பது, காட்டு விலங்குகளை வேட்டையாடுதல் இவர்களது தொழிலாக இருந்து வந்துள்ளது.
    முல்லை நிலமக்கள் ஆடு மாடுகள் மேய்ப்பவர்கள். மானாவாரி நிலங்களில் (புன்செய் நிலங்கள்) வரகு, கேழ்வரகு, சாமை முதலான சிறுதானியங்கள் விதைத்து விவசாயம் செய்துவந்துள்ளனர்.(அகநானூறு 194:1-4), மாடுகளைக் கொண்டு ஏர்பூட்டி உழவு செய்து வந்த முல்லை நில மக்களும் காடு திருத்தி விவசாயம் செய்து வந்த குறிஞ்சி நிலமக்களும் தருமபுரியில் வாழ்ந்து வந்துள்ளனர். 

      குறிஞ்சி நிலமக்கள் காடெரித்து விவசாயத்தில் ஈடுபடுவதை முன்னரே பார்த்தோம். இவ்வாறு காடேறித்து பயிர் செய்த நிலம் 'கொல்லை' என அழைக்கப்பட்டது. இன்று புனல்காடு சாகுபடிமுறை இம்மாவட்டத்தில் இல்லையென்றாலும் கூட, சாகுபடியை தொடங்கும்முன் தமது நிலங்களை (கொல்லைகளை) தீயிட்டுக் கொளுத்தும் பழக்கத்தை தருமபுரி மாவட்டத்தில் மலைகிராம மக்களிடம் இன்றளவும் பார்க்க இயலும். 
 மேட்டு  நிலப்பகுதியை (புன்செய் நிலங்கள்) "கொல்லை' என்றே தருமபுரி மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. குறிஞ்சி, முல்லை நிலா மக்களும் புன்செய் நிலங்களை "கொல்லைக்காடுகள்" என்றே இன்றளவும் அழைக்கின்றனர்.
   தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் பொதுவாக மேட்டுநிலப்பரப்பில் செய்யப்படும் கொல்லை விவசாயம், ஏரிப்பாசனம் கொண்டு முழுமையாக பாசனத்திற்கு உட்படுத்தப்படும் நிலத்தை கழனி விவசாயம், கிணற்றுப்பாசனம் கொண்டு செய்யப்படும் நன்செய்-புன்செய் விவசாயம் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
   ஏரிப்பாசனம் கொண்டு செய்யப்படும் விவசாய நிலத்தை 'கழனி' என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இன்றளவும் 'கழனி' என்ற சொல் முழுமையான பாசன நிலத்தை குறித்த சொல்லாக தருமபுரி மக்களிடையே பயன்பாட்டில் உள்ளது இங்கு குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். 
    தருமபுரி மாவட்டத்தில் (அன்றைய தகடூர்) ஏரிப்பாசனம் இருந்ததற்கான சான்றாதாரங்கள் கல்வெட்டுகளாக எண்ணற்று கிடைக்கப்பெற்றுள்ளன. கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்டுகள் வரை தகடூர் பல்லவர் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.  ஆறுகள் இல்லாத பகுதிகளில் பல்லவர்கள் காலத்தில் ஏரிகள் வெட்டப்பட்டு வேளாண்மை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. 
  கி.பி. 11ஆம் நூற்றாண்டில் தகடூரை ஆட்சி செய்த பிற்கால சோழர்கள் காலத்தில் இருந்து தொடர்ந்து நுளம்பர்கள், விஜயநகர அரசர்களின் ஆட்சிக்கு காலங்களில் வேளாண்மையைப் பேருக்கும் வகையில் ஏரிகள் வெட்டுவது அதிகமாகியுள்ளது. எட்டாம் நூற்றாண்டிலேயே பாணர் வம்சத்து அரசன் மாவலி வானவராயனது ஆட்சியில் போரில் இறந்துபட்டவன் நினைவாக உருவாக்கிய ஏறி குறித்து அரூர் அருகேயுள்ள குறும்பட்டி கல்வெட்டு குறிப்பிடுகிறது. சோழர்கள் கால ஆட்சியின் கீழ் தருமபுரி இருந்தபோது நிறைய ஏரிகள் உருவாக்கப்பட்டதை கல்வெட்டுகள் கூறுகின்றன. உதாரணமாக பாப்பரப்பட்டி ஏரி, பனைகுளம் ஏரி போன்றவைகளை சொல்லலாம். 

 கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தகடூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த நுளம்பு அரசன் மகேந்திர நுளம்பன் சைவமத ஆச்சரியருக்கு 'மருதனேரி ' என்ற ஏரியை தனமாக வழங்கிய கல்வெட்டு உள்ளது. (இவன் அத்தியமான்கோட்டையை 'மகேந்திர மங்களம்' என்று பெயர் மாற்றினான். இவனது வம்சத்தினர் தகடூரை ஒரு நூற்றாண்டு காலம் வரை ஆட்சி செய்துள்ளனர். இவனது காலத்தில் தகடூர் 'நுளம்பபாடி 32000' என்றழைக்கப்பட்டது. இவனது வம்சத்தைச் சேர்ந்த திலீபரசன் என்பவன் பாப்பாரப்பட்டியில் திலீபரசன் குட்டை என்ற ஒரு குட்டை அமைத்துள்ளான்.  
    தருமபுரி மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற கி.பி. 12 ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் தென்னிட்டேரி, புறக்கரையேரி, மேலேரி, குளத்தூர் ஏரி, பெரியேரி, மழவராயப் புத்தேரி,  தேவசமுத்திரமேரி, கடைக்கோட்டூர்  மேலேரி போன்ற ஏரிகள் பற்றிய குறிப்புகள் காணக்
கிடைகின்றன. அதேபோல்  16-ஆம் நூற்றாண்டு வரையிலான பல கல்வெட்டுகளில் தனிப்பட்டவர்களுக்குச் சொந்தமான சிறிய ஏரிகள் 'குட்டை' என்று குறிக்கப்பட்டுள்ளன. தட்டாங்குட்டை, கூத்தாண்டார்க்குட்டை, மூங்கில்குட்டை பற்றிய குறிப்புகள் பெரிய அளவிலான ஏரிகள் மட்டுமல்ல, அளவில் சிறிய ஏரிகளும் வெட்டப்பட்டு மக்களுக்கும், வேளாண்மைக்கு பயனாகி வந்துள்ளன என்பது புலப்படுகிறது. 

                                                                                                                                                          தொடரும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக