சனி, 8 அக்டோபர், 2016

முத்தரையன் கோவில்


முத்தரையன் கோவில்:


முத்தித்தராய சுவாமி (ஸ்ரீ நரசிம்ம சுவாமி) மற்றும்

திம்மராய சுவாமி திருக்கோவில்



தருமபுரி மாவட்டத்தில், பென்னாகரத்திற்குத் தென்மேற்கில், பென்னாகரத்தில் இருந்து இருபது கி.மீ. தொலைவிலுள்ள நெருப்பூர் எனும் கிராமத்திலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள வனப்பகுதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. ஒரு பெரிய அரசமரத்தின் அடியில் உள்ள ஒரு குகையினுள் நீரோடையுடன் கூடிய இடத்தில் வௌவால்கள் தொங்க, சுயம்பு வடிவில் ஸ்ரீ முத்தித்தராய சுவாமி (ஸ்ரீ நரசிம்ம சுவாமி) எழுந்தருளியுள்ளார். இவரையே பேச்சுவழக்கில் முத்தரையன் சுவாமி என்று இப்பகுதி மக்கள் அழைத்து வழிபட்டு வருகின்றனர். உலகையே எரிக்கும் ஆற்றலோடு வெளிப்பட்ட ஸ்ரீ நரசிம்மர் இங்கு வந்து தவமிருந்த தலமாதலால் இப்பகுதிக்கு நெருப்பூர் என்ற பெயர் காரணம் கொண்டு விளங்கிவருகிறது.
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் இங்கு வந்து தீர்த்தம் வாங்கி செல்வதினால் விரைவில் குழந்தைப்பேறு அடைகிறார்கள். பின்னர் வேண்டுதல்கள் நிறைவேறியவர்கள் ஒரு அமாவாசை தினத்தில் இங்கு வந்து இங்குள்ள மகாலட்சுமிக்காக துலாபாரமிட்டு குழந்தையின் எடைக்குஎடை நாணயங்களாலும், வாழைப்பழங்கள் செலுத்தியும்,  சுவாமியை அலங்கரித்து ஊர்வலமாக எடுத்துச் சென்றும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, முடி காணிக்கை செலுத்துவதும் உண்டு.
ஸ்ரீ நரசிம்ம சுவாமிக்கு வேண்டி பக்தர்கள் கார்த்திகை மாதம் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதமிருந்து மார்கழியில் இந்த கோயிலுக்கு வந்து விரதம் முடித்து  செல்வது இக்கோயிலின் முக்கிய சிறப்பு.
ஸ்ரீ நரசிம்ம சுவாமி திருஉருவச்சிலை அலங்கரிக்கப்பட்டு  மேளதாளங்கள் முழங்க எடுத்து வரப்படும் நேரத்தில் பக்தர்கள் தரையில் படுத்துக்கொள்ள அவர்கள் மீது  கோவில் பூசாரி  நடந்து சென்று அருளாசி வழங்குகிறார்.    
சந்தன கடத்தல் வீரப்பன் வழிபட்டதாகக் கூறப்படும் இந்த கோவிலில் அமாவாசை, பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்று வருகிறது. மேலும் சொர்க்கவாசல் திறப்புவிழா, மார்கழிமாத பஜனை நோன்பு, புரட்டாசி சனிக்கிழமை உற்சவம், சித்திரை மாத பிறப்பு, தை மாத பிறப்பு, ஆடி பதினெட்டு, மாதந்திர அமாவசை உற்சவம், வாரந்திர சனிக்கிழமை உற்சவம் முதலான திருவிழாக்கள் இங்கு வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. 
சேலம் மாவட்டம் மேட்டூர், கொளத்தூர், கோவிந்தபாடி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் காவிரிக்கரையோரத்திலுள்ள பண்ணவாடி பரிசல் துறை மற்றும் கோட்டையூர் பரிசல் துறையில் இருந்து மோட்டார் படகு மற்றும் பரிசல் மூலம் தர்மபுரி மாவட்டம் நாகமரை பரிசல் துறைக்கு திரளாக வருகை தருகின்றனர். மேலும் சென்னை, பெங்களூரு, ஈரோடு, கோவை போன்ற இடங்களிலுருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகைபுரிகின்றனர்.
 

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக