ஞாயிறு, 9 அக்டோபர், 2016

இந்தியாவில் கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

கிழக்குத் தொடர்ச்சி மலைகள்:

இந்தியாவில் கிழக்குத் தொடர்ச்சிமலை 77°22’ – 85°20’ கிழக்கு தீர்க்க ரேகையிலும் 11.3’ வடக்கு அட்ச ரேகையிலும் இருக்கிறது. இம்மலைத் தொடர் ஓடிஸ்ஸா, சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், ஆந்திரபிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு என விரவியிருக்கிறது.
இந்தியாவில், கிழக்குத் தொடர்ச்சி மலைகளானது மேற்கு மலைத் தொடரைப் போல தொடர்ச்சியான மலைப் பகுதியல்ல. விட்டுவிட்டு தொடராகவும் குன்றுகளாகவுமே அமைந்துள்ளது.
இந்தியா தீபகற்பத்தில் சுமார் 75000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாகவும் சராசரியாக வடப்பகுதியில் 200 கி.மீ. அகலம் கொண்டதாகவும் தென்பகுதியில் 100 கி.மீ. அளவு அகலம் கொண்டதாகவும் உள்ளது. வடக்கு எல்லையாக மகாநதியும், தெற்கு எல்லையாக நீலகிரி மலையும் மேற்கே பஸ்தார்-தெலுங்கானா மாவட்டங்களையும் (ஆந்திரப்பிரதேசம்) மற்றும் கர்நாடக பீடபூமிப் பகுதிகளையும், தமிழ் நாட்டில் மேட்டு நிலப் பகுதிகளையும் கிழக்குப் பகுதியாக கடலோரப் பகுதிகளையும் உள்ளடங்கியது இம்மலைத்தொடர்.
மேற்கு மலைத்தொடரில் உற்பத்தியாகும் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணார், மற்றும் காவேரி போன்ற பெரிய ஆறுகள் கிழக்கு நோக்கிப் பயணித்து இம்மலைத்
தொடரின் ஊடே பாய்ந்து வங்கக்கடலில் கலக்கின்றன. எண்ணற்ற சிற்றாறுகள் இம்மலைத்தொடரில் உற்பத்தி ஆனாலும்கூட இவைகள் வற்றாத ஜீவநதிகள் கிடையாது. இம்மலைத்தொடர்கள் பெரும்பாலும் செங்குத்தாக இருப்பதாலும், தொடர்ந்து வனங்கள் அழிக்கப்பட்டுவருவதாலும் இந்த சிற்றாறுகள் மழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடி வீணாகிவிடுகின்றன.
வடக்கு பகுதி:
ஒடிஸ்ஸா மாநிலத்தின் சம்பல்பூர் மற்றும் போலாங்கீர் மாவட்டங்கள் (கந்தமார்தான் மலைகள்), மயூர்பஞ்ச் மற்றும் காலகந்தி மாவட்டங்கள் (கந்தமால் மலை), புல்பானி மற்றும் கோராபுட் மாவட்டங்கள்.
ஆந்திரபிரதேசத்தில் ஸ்ரீகாகுளம் (பலகொண்டா,ஆண்டிக்கொண்டா மற்றும் புர்ரகொண்டா மலைத்தொடர்கள்), விஜயநகரம், விசாகப்பட்டிணம் (மதகோல் மலை, ஆனந்தகிரி, சிந்தபள்ளி, சப்பாரலா, கூடம், மர்ரிபலாலு மலைத்தொடர்கள்), மேற்கு கோதாவரி (குர்தெது, அடதிகலா, ராம்பசோதவரம், மரெதுமிலி மலைத்தொடர்கள்), மேற்கு கோதாவரி
மாவட்டத்தில் (போலாவரம், பாபிகொண்டா மலைகள்);
மத்திய பகுதி:
ஆந்திரபிரதேசத்தில் கிருஷ்ணா மாவட்டத்தில் (கொண்டபள்ளி மலை), கர்னூல், மகபூப்
நகர் மற்றும் பிரகாசம் மாவட்டங்கள் (நல்லமலை), அனந்தபூர், கடப்பா சித்தூர் மற்றும் பிரகாசம் மாவட்டங்கள் (பளகொண்டா, சேஷாசலம், லங்காமலை, நகரிமலை, நெல்லூர் மாவட்டம் (வெளிகொண்டா மலைத்தொடர்)
தென் பகுதி: 
வேலூர் மாவட்டம் (ஏலகிரி மலை), திருவண்ணாமலை மாவட்டத்தில் (ஜவ்வாதுமலை), விழுப்புரம் மாவட்டம் (செஞ்சி மலை, பெரிய கல்வராயன் மலை), சேலம் மாவட்டத்தில் (சேர்வராயன், சின்ன கல்வராயன், போதமலை, பாலமலை, அறுநூத்துமலை, நாமக்கல் மாவட்டத்தில் (கொல்லிமலை), தருமபுரி மாவட்டத்தில் (சித்தேரி, மேலகிரி மலை), திருச்சி பெரம்பலூர் மாவட்டங்களில் (பச்சமலை), திண்டுக்கல் மாவட்டத்தில் (சிறுமலை, கரந்தமலை)
இந்தியாவில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளானது அதன் பல்லுயிர் வேற்றுமையால் (Bio-diversity) குறிப்பாக வேளாண் பயிர்கள் மற்றும் மூலிகைகள் நறுமணத் தாவரங்களின் பல்லுயிர் வேற்றுமையால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சுமார் 2600 வகை தாவரங்கள் இம்மலைத்தொடர்களில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இதில் 160 வகை தாவரங்கள் பயிரிடக் கூடியவை. 78 தாவரக் குடும்பங்களில் 243 உட்பிரிவுகளைக் கொண்ட சுமார் 454 அழியும் நிலையில் உள்ள தாவரங்கள் இம்மலைத்தொடர்களில் இருப்பதாக ஓர் அறிக்கைக் கூறுகிறது.
மேற்கு மலைத்தொடரைப் போல் மேற்குக் கடற்கரையை யொட்டி சமமாக பரவியிராமல் கிழக்குத் தொடர்ச்சி மலைகளானது மேற்கு மலைத் தொடரைப் போல மிகவும் உயரமான மலைகளாக இல்லாமலும் கடற்கரைப் பகுதியை விட்டு மிகவும் உள்ளடங்கியும் காணப்படுகிறது.
தமிழ் நாட்டில் கிழக்கு தொடர்ச்சி மலைகள்
தமிழ் நாட்டில் கிழக்கு தொடர்ச்சி மலைகள் மூன்று பிரிவுகளாக உள்ளது.
அவை: 1. கடலோர கிழக்குத் தொடர்ச்சி மலை 2. மத்திய கிழக்குத் தொடர்ச்சி மலை மற்றும் 3. தென் பகுதி கிழக்குத் தொடர்ச்சி மலை.
கடலோர கிழக்குத் தொடர்ச்சி மலைகள் பெரும்பாலும் உயிர்ச்சூழலில் விளிம்பு நிலையில் உள்ளவைகள். தளர்ந்த பாறைகளைக் கொண்ட தாழ்வான சிறுசிறு மலைகளுக்கு அருகாமை பகுதிகள் ஆகும்.
மத்திய கிழக்குத் தொடர்ச்சி மலைகளானது மிக உயரமான மலைகளாக இல்லாமல் மத்தியமாக உள்ளவைகள். இந்த மலைகள் சுமார் 1500 மீட்டர் முதல் 1750 மீட்டர் வரை உயர்ந்து காணப்படுகின்றன. தமிழ் நாட்டின் வடகிழக்குச் சமவெளியை ஒட்டி சிதறுண்டு காணப்படுகிற ஏலகிரி மலை, ஜவ்வாதுமலை, சேர்வராயன்மலை, கல்வராயன்மலை, கொல்லிமலை, பச்சைமலை, சித்தேரிமலை, மேலகிரி மலை, பாலமலை, பர்கூர்மலை, பிலிகிரிராயன் மலை போன்ற மலைகள் இத்தொடர்ச்சியில் அடங்கும்.
தமிழ் நாட்டின் தென்மாவட்டங்களில் உள்ள சிறுமலை, கரந்தமலை முதலான மலைகள் தென்பகுதி கிழக்குத் தொடர்ச்சிமலைகளாகும்.
நீலகிரி மலையின் மிக உயரமான சிகரமான தொட்டபெட்டா (2637 மீட்டர்) சிகரத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையும்  மேற்கு தொடர்ச்சி மலையும் ஒன்றாக இணைகின்றன.
தமிழ் நாட்டின் மொத்த வனப் பரப்பளவில் இம்மலைத்தொடர் 22 சதவீதத்தைக் கொண்டுள்ளது. கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தனிநபர் வனப்பகுதி சுமார் 0.05 ஹெக்டேர். இது கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதி அமைந்துள்ள ஏனைய மாநிலங்களில் உள்ள அளவை விட மிகக் குறைந்தது ஆகும் (ஆந்திரபிரதேசம் 0.09, ஓடிஸ்ஸா 0.18 கர்நாடகம் 0.09).
இம்மலைத்தொடரின் வனப்பகுதிகள் இரண்டு பிரிவுகளில் அடங்கும்.   அவை: 1. தரைக்காடுகள் 2. மலைக்காடுகள்.  தரைக்காடுகள் கடல்மட்டத்திலிருந்து சுமார் 50 மீட்டர் முதல் 250 மீட்டர் உயரமுள்ள சிறுசிறு குன்றுகளில் உருவான காடுகள் ஆகும்.
இந்த கிழக்குத் தொடர்ச்சி மலைகள் சுமார் 19.6 மி.மக்கள் தொகை கொண்ட 60க்கும் மேற்பட்ட பழங்குடி இனமக்களின் வாழ்விடமாகத் திகழ்ந்து வருகிறது.
மேற்குமலைத்தொடர்களில் வசித்துவரும் பழங்குடி இனமக்களிடையே பயன்பாட்டில் உள்ள தாவரங்கள் குறித்த ஆய்வுகள் நிறையவே செய்யப்பட்டிருக்கின்றன. அதேபோல கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் பழங்குடி இன மக்களிடையே நடத்தப்பட்டுள்ள ஆய்வுகள் அதிகம் இல்லை.
கிழக்குத்தொடர்ச்சி மலைகள் 













தமிழ்நாட்டில் மேற்குத்தொடர்ச்சி மற்றும் கிழக்குத்தொடர்ச்சி மலைகள்    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக