செவ்வாய், 4 அக்டோபர், 2016

தருமபுரி வரலாற்றில் ஏரிப்பாசனம் 2

  தருமபுரி வரலாற்றில் ஏரிப்பாசனம் (தொடர்ச்சி)
        கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் ஏரிப்பாசனம் செய்து கொள்ள அனுமதி வழங்கி ஆவணன்ப்படுத்தி இருப்பதையும் எண்ணற்ற கல்வெட்டுகள் குறிப்பிடுகின்ற. அதேபோல நிலங்கள் விற்பனை செய்யும்போது நிலத்தோடு ஏரிகளையும் சேர்த்தே விற்கப்பட்டதற்கான கல்வெட்டு குறிப்புகளும் காணக்கிடைக்கின்றன. 
   ஏரிகள் தூர்வார ஏரிப்பாசனத்தில் நிலம் மானியமாக வழங்கப்பட்டதை சந்தூர் பகுதியில் கிடைத்த கி.பி. 15-16 ஆம் நூற்றாண்டைச்  விஜயநகர ஆட்சியின் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
    கிணற்றுப்பாசனமும் இம்மாவட்டத்தில் இருந்துள்ளது என்பதற்கான சான்றுகளும் உள்ளன. கி.பி. 1296 ஆம் ஆண்டின் கம்பைநல்லூர் கல்வெட்டு, கிருஷ்ணகிரியை அடுத்த குருவிநாயன ஹள்ளியில் கிடைத்த கி.பி.14-15 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் இதை உறுதி செய்கின்றன. 
   மூன்றாம் ராசராசரின் காலத்தில் தருமபுரியை ஆட்சி செய்த குறுநில மன்னன் அதியமான் 'வேள் நங்கக்காரன் ஆணை' கட்டியுள்ளான் என்பதை நல்லம்பள்ளியை அடுத்த சிவாடி கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் கிடைத்த கி.பி. 1221 ஆம் ஆண்டு கல்வெட்டு குறிப்பிடுகிறது. அனால் அந்த கல்வெட்டை ஆய்வு செய்த வரலாற்று ஆய்வாளர்கள் அந்த ஆணை எங்கே, எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க இயலவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். (ஆதாரம்: தருமபுரி கல்வெட்டுகள் தொகுதி -2, தொல்பொருள் ஆராய்ச்சித்துறை வெளியீடு).
   தருமபுரியில் அதியமான் பரம்பரையைச் சேர்ந்த ஒருவன் கரும்பை தூர தேசத்திலிருந்து கொண்டுவந்து பயிரிடப்பட்டதாக ஔவையார் அதியமானை பாராட்டுகிறார்.
      'அரும் பெறல் அமிழ்தம் அன்ன 
       கரும்பு இவன் தந்தோன் பெரும் பிறங்கடையே'   -   புறநானூறு 329: 20-22

      'அமரர்ப் பேணியும் ஆவுதி அருந்தியும் 
      அரும்பெறல் மரபின் கரும்பு இவன் தந்தும் 
      நீரை இருக்கை ஆழி சூட்டிய 
      தொன்னிலை மரபின் முன்னார்'    -                           -   புறநானூறு 99:1-4

     வரிபூங் கரும்பின் கழனி                                                    (2ஆம் பத்து 3:13)

     கரும்பு பயிர்செய்யப்பட்ட இடம் 'கரும்பின் கழனி' என்று கூறப்பட்டது.

    பப்புவா நியூ கினியா தீவை தாயகமாகக் கொண்ட கரும்பு விவசாயம் தென்கிழக்கு ஆசிய நாடுகள், தெற்கு சீனம் என்று பரவி குப்தர்கள் காலத்தில் இந்தியா வருகிறது. சங்க இலக்கியங்களில் சொல்லப்படும் ஆடுமாடுகள் வளர்ப்பிலும் மேட்டு விவசாயம் செய்யும் முல்லை நில மக்களுக்காக தகடூரை (இன்றைய தருமபுரி) ஆண்ட அதியன் ஏரிகளை உருவாக்கி, நிரந்தரமாக முழுமையான பாசன வசதிகொண்ட நிலமாக்கி, கரும்பை விளைவித்தான் என்று பார்க்கும்பொழுது, முல்லை நில விவசாயத்தை மருதநில விவசாயமாக மாற்றி மக்களை முன்னேற்றவேண்டும் என்கிற அவனது ஆவலை புரிந்துகொள்ளமுடிகிறது. 
  
புனல்காடு சாகுபடி : 
       'புனல்காடு சாகுபடி' என்பது பழங்காலத்தில் 20-30 ஆண்டுகள் என்ற கணக்கில் இருந்து வந்த சூழல் மாறி தற்போது 5-6 ஆண்டுகள் என குறைந்துவிட்டது. 20-30 ஆண்டுகள் இடைவெளியில் காடுகள் மீண்டும் உருவாகிவிடும். ஆனால் 5-6 ஆண்டுகால இடைவெளியில் காடுகள் மறுஉருவாக்கம் என்பது இயலாத காரியம். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் சுமார் 150 பழங்குடி இனத்தவர்கள் புனல்காடு முறை விவசாயத்தோடு தொடர்புடையவர்கள். இவர்களது சமூக வாழ்க்கையும் இந்த புனல்காடு முறையோடு இணைந்து வந்துகொண்டிருக்கிறது. மிசோ இணைப் பழங்குடியினரிடையே புதிய காட்டுப்பகுதிகளைத் தேடும் போதும் காட்டுப்பகுதிகளை தீயிட்டுக் கொளுத்தும் நாளில் இறந்துபோகும் காட்டுவிலங்கினங்களுக்காக இரங்கல் தெரிவிக்கும் விழா எடுத்து கொண்டாடும் பழக்கம் இன்றளவும் நடைமுறையில் உள்ளது. இந்த விவசாயமுறையில் விவசாயிகள் முதலில் காடுகளைத் திருத்தி அமைக்கின்றனர். காடுகளைத் திருத்தி அமைத்தல் என்பது முதலில் மரங்களின் இலைதழைகள் வெட்டப்பட்டபிறகு மரங்களைக் காயவிட்டு பின் தீயிட்டு எரிப்பது. இது முதலாம் ஆண்டில் நடைபெறும். பிறகு பலவகையான பயிர்களையும் விளைவிக்கின்றனர். இரண்டாம் ஆண்டுமுதல் நெற்பயிர் பயிரிடப்படும். ஒரே நிலத்தை அதிகபட்சமாக 3 ஆண்டுகள்  மட்டுமே பயன்படுத்துவர். பிறகு அந்த நிலத்தை விட்டு வேறு நிலம் தேடி போவார்கள். அவ்வாறு போகும்போது அவர்கள் விட்டுச்செல்லும் நிலத்தில் மரங்களை விட்டுட்டே செல்வார்கள். இதனால் அந்த நிலங்களில் காடுகள் மீண்டும் உருவாகும்.(ஆதாரம்: இந்தியாவின் சுற்றுச்சூழல் - க்ரியா வெளியீடு)
 கரும்பு சர்க்கரை:
     கரும்பின் தாயகம் பப்புவா நியூ கினியா தீவு. கி.மு.8000 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு முதன்முதலாக கரும்புப் பயிரிடத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் தெற்கு சீனப்பகுதிக்கும் கரும்பு பயிரிடும் முறை பரவியது. ஆரம்பகாலத்தில் கரும்பு கடித்து சுவைத்து உன்ன மட்டுமே இருந்த நிலையில் இந்தியாவின் குப்த பேரரசில் கரும்பிலிருந்து சாறு எடுத்து அதனைக்கொண்டு சர்க்கரை தயாரிக்கும் தொழில்நுட்பம் வளர்ந்தது. இந்தியாவிற்கு வந்த புத்த துறவிகள் இந்த தொழில்நுட்பத்தை சீன தேசத்திற்கு எடுத்துச் சென்றனர். இதன் தொடர்ச்சியாக சீனாவில் எட்டாம் நூற்றாண்டில் கரும்பு  பயிரிடப்பட்டது. கரும்பை அரைத்து சாறெடுத்து அதனை சூரிய ஒளியில் காயவைத்து எடுக்கப்படும் சர்க்கரை மணல் போல இருக்கும். சமஸ்க்ருத மொழியில் சர்க்கரை என்பதற்கு 'மணல்' என்பது பொருள். பழங்கால சீன மொழியிலும் 'மணல் சர்க்கரை' என்றே கரும்புச் சர்க்கரைக்கு பொருள்  (.ஆதாரம்: History of Sugar -Wikipedia).
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக