வெள்ளி, 7 அக்டோபர், 2016

வாணியாறு அணை

வாணியாறு அணை

Vaniyaru Reservoir Project


          வாணியாறு நீர்தேக்கத் திட்டம், தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் முள்ளிக்காடு கிராமத்தில் ஓடும் வாணியாற்றின் குறுக்கே அமைந்துள்ளது. 
நீரியல்: வாணியாறு தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் ஒரு உபநதியாகும்.
இந்த ஆறு கடல்மட்டத்திலிருந்து 1480 மீ. உயரத்தில் சேலம் மாவட்டத்தின் சேர்வராயன் மலைத்தொடரில் ஏற்காட்டுக்கு  அருகே  உற்பத்தியாகி 22 கி.மீ. மலைத் தொடரின் வடக்கு சரிவிலேயும் காடுகளுக்கிடையேயும் ஓடிவந்து தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் முள்ளிக்காடு என்ற கிராமத்திற்கு மேற்கில் சமவெளியை அடைகிறது. தென்மேற்க்கு மற்றும் வடகிழக்கு பருவ காலங்களில் பெய்யும் மழைநீர்  வாணியாற்றில்  கலக்கிறது. இந்த ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதி அணை வரை சுமார் 260.51 சதுர கி.மீ. ஆகும்.  இது உற்பத்தியாகும் இடத்திலிருந்து சுமார் 55 கி.மீ. தூரம் பயணித்து தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில்  உள்ள பூங்கரம்பட்டி காப்புக் காட்டுப் பகுதியில் தென்பெண்ணையாற்றில் கலக்கிறது. 
இந்த ஆறு வடக்கு அட்சரேகையில்  11°4600’’  மற்றும்  12°0939’’ யிலும் கிழக்கு தீர்க்கரேகையில்  78°1227’’  யிலும்  78°3665’ யிலும் அமைந்துள்ளது.
 
  அணைப்பகுதி:  வாணியாறு நீர்த் தேக்கத் திட்டம் தமிழ்நாடு  அரசின் திட்டாக குழுவால் 1979ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டு 5.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1979 ஆம் ஆண்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1983-84 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக திருத்திய மதிப்பீட்டுத்தொகையாக ரூபாய் 12.3 கோடியாக உயர்த்தப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. இதன்  பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டு 12-11-1986 அன்று அணை  திறக்கப்பட்டது.  
  வாணியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வாணியாறு நீர்த்தேக்கம் ஒரு மண் அணையாகும் (Earthern Dam).  இந்த  அணையின் கொள்ளளவு 418 மி.கன  அடி (11.8 மி. கன மீ.). அணையின் உச்ச நீர்மட்ட ஆழம் 31.17 மீ ஆகும். இந்த நீர்தேக்கத்திற்கு ஆண்டுக்கு 31.10 மி.கன மீட்டர் நீர் வரத்து இந்த ஆற்றின்  வெள்ளம் வினாடிக்கு 654.9கனமீட்டர் வரக்கூடும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
        வாணியாறு  அணையில் வினாடிக்கு 654.9 கனமீட்டர் நீரை வெளியேற்றும் திறன்கொண்ட உபரி நீர்போக்கி கட்டப்பட்டுள்ளது. இது வலது, இடது என 2 தலைமதகுகளைக் கொண்டுள்ளது.
 பாசனம்:
இதன் வலது இடது வாய்க்கால்கள் மூலம் சுமார் 3460.15 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இதன் வலது கால்வாயின் நீளம் 12.45 கி.மீ. இது 45 நேரடி மதகுகள் வழியாக 3 கிளை வாய்க்கால்களாகப் பிரிக்கப்பட்டு முறையே  2.77 கி.மீ. 2.13 கி.மீ. 4.35 கி.மீ. நீளம் பாசனத்திற்கு நீர் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 1821.17 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
வலது கால்வாய் மூலம் பயன்பெறும் கிராமங்கள்:
மோளையானுர், கோழிமூக்கனூர், பாப்பிரெட்டிபட்டி, அலமேலுபுரம், தாதம்பட்டி, ஆலாபுரம், கவுண்டம்பட்டி, புதுபட்டி.
இதன் இடது வாழ்கை 34 நேரடி மதகுகளைக் கொண்டு, முறையே 1.15 கி.மீ. 1.8 கி.மீ. 1.7 கி.மீ.  1.02 கி.மீ. நீளம் 5 கிளை வாய்கால்களாக மொத்தம் 19.75 கி.மீ.   நீளத்திற்கு அமைக்கப்பட்டு பாசனத்திற்கு நீர் வழங்கப்படுகிறது. இதன் மொத்த ஆயக்கட்டுப்பகுதி 1638.98 ஹெக்டேர்.
இடது கால்வாய் மூலம் பயன்பெறும் கிராமங்கள்:
மோளையானுர், ஆலாபுரம், வெங்கடசமுத்திரம், மெனசி, பூதனத்தம், தென்கரைக் கோட்டை, ஜம்மனஹள்ளி.
பழைய ஆயக்கட்டு நிலமான சுமார் 796.03 ஹெக்டேர் நிலங்கள் வெங்கடசமுத்திரம் ஏரி மற்றும் அதன் ஊட்டுக்கால்வாய், ஆலாபுரம் ஏரி மற்றும் அதன் ஊட்டுக்கால்வாய், பறையப்பட்டி ஏரி மற்றும் அத்தன் எலுமிச்சைப் பெருமாள் ஏரி ஊட்டுக்கால்வாய், கணக்கன் அணைக்கட்டு, தென்கரைக்கோட்டை ஏரி, ஒந்தியாம்பட்டிஏரி உள்ளிட்ட ஏரிகள் மூலம் நீர் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக