ஞாயிறு, 9 அக்டோபர், 2016

இருளப்பட்டி ஸ்ரீ காணியம்மன்திருக்கோயில்


ஸ்ரீ காணியம்மன்திருக்கோயில், இருளப்பட்டி
காணியம்மன் திருக்கோயில் பக்கவாட்டுத் தோற்றம்  
  





 
 


   
    
 



தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம், இருளப்பட்டி கிராமத்தில் ஊருக்கு மேற்கே சேலம்-திருப்பத்தூர் நெடுஞ்சாலைக்கு அருகாமையில் அமைந்து உள்ளது ஸ்ரீ காணியம்மன் திருக்கோயில். அரூரிலிருந்து சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 23 கி.மீ. தொலைவில் உள்ளது இருளப்பட்டி கிராமம்.
இக்கோயிலின் மொத்தப் பரப்பளவு சுமார் 12 ஏக்கர். இதன் மத்தியில் சுமார் பத்து சென்ட் பரப்பளவில், மூன்று நிலைகளையுடைய கோபுரத்தின் கீழ் கருவறை, அதனைச் சார்ந்த மகாமண்டபம், நால்புறமும் சுற்றுச்சுவர் என அமைந்துள்ளது.
இக்கோயிலின் கருவறையில் உள்ள மூலவர் ஒரு சிறிய பாறைக்கல்லின்மேற்புறம் சிதைவுடன் உருவமற்ற நிலையில் உள்ளது. இங்கு அம்மன் சுயம்புவாக எழுந்தருளி அருள் பாவித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. கருவறையில் மூலவருக்கு அருகில் ஒரு வள்ளிக்கொடி முளைத்து பாறையைத் துளைத்துக்கொண்டு கருவறைக்கு வெளியே கருவறைக் கோபுரத்தின் மேல் படர்ந்து செல்கிறது. இந்த வள்ளிக்கொடியே இந்த காணியம்மன் திருக்கோயிலின் தல விருட்சமாகக் கருதப்படுகிறது.
வள்ளி என்ற கிழங்கு மிகப் பழங்காலத்தில் பசிபிக் தீவுகளில் வாழ்ந்த குடிகளின் அடிப்படை உணவாகும். கிழங்கு கனிகளைச் சேகரித்து வாழ்ந்த நாகரிகமற்ற நிலையில் மனிதனுக்கு முக்கிய உணவாக வள்ளிக்கிழங்கு அமைந்திருந்தது. பசிபிக் தீவுகள், சுமத்ரா, மலேயா முதலிய நாடுகளிலெல்லாம் வள்ளிக் கிழங்கே அடிப்படை உணவாக இருந்ததை வரலாற்று அறிஞர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர். மனிதன் வேட்டையாடி உணவு தேடியதற்கு முன், புல்வகை தானியங்களையும், நெல்லையும் பயிரிட்டு பழகுவதற்கு முன் உழைப்பு மிகுதியின்றி கைகளையும், கனிகளையும், கிழங்கையும் தின்று வாழ்ந்தான். உணவைச் சேகரிக்கும் மனித சமுதாயத்தில் (food gathering civilization) தோன்றிய தாய்த்தெய்வமே வள்ளியாகும். வள்ளியின் செழிப்புக் கருத்து ஆஸ்ட்ரிக் குடிகளிடம் தோன்றியிருக்கலாம். பசிபிக் தீவுகளிலிருந்து மனித இனம் இந்தியாவிற்குப் பரவியபோது வந்திருக்கலாம். தொல்காப்பியத்தில் வன்மை பொருளில் வள்ளி என்ற சொல் வழங்கியதை உரையாசிரியர்கள் கூறியுள்ளனர். வளம் தருவது, செழிப்புத் தருவது என்ற பொருளில் வள்ளி என்ற சொல் வழங்கியது. வள்ளி, வள்ளை ஆகிய சொற்கள் கொடியைக் குறிக்கும். ஆதலின், வள்ளியும் ஒரு தாய்த்தெய்வம்என்பது தெளிவாகின்றது. இதனடிப்படையில் இந்த கோயிலில் காணியம்மனும், வள்ளிகொடியும் ஒன்றே என்பதும், வள்ளிக்கொடி தலவிருட்சமாக இருப்பது காணியம்மனை வணங்கினால் அனைத்துவகை செழிப்பினையும் தருவாள் என்ற நம்பிக்கையில் உருவானதாக இருக்கலாம்.  
 சுமார் இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில் இருளர்கள் எனப்படும் பழங்குடி மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. அடர்த்தியான மூங்கில் காடுகளுக்கிடையில் இருந்த இருளர்களின் குடியிருப்பான இருளப்பட்டியை  சேர்ந்த பேயன் என்ற இருளானால் அம்மனை பூமியிலிருந்து தோண்டி எடுத்து வழிபாடுகள் செய்து வந்ததாகவும் தொடர்ந்து அவனது வம்சாவளியினர் காணியம்மன் கோயில் பூசாரிகளாக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அம்மனின் வடிவம் மண்ணாலும் கல்லாலும் கட்டப்பட்ட மேடையின் மீது வைக்கப்பட்டு வணங்கப்பட்டு வந்ததுள்ளது. காலப்போக்கில் இந்த கோயில் பல்வேறு பிரிவினருக்கும் பொதுவாகி பலரது ஒத்துழைப்பால் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று இன்றைய கோயிலாக உருவெடுத்துள்ளது.  
இக்கோயிலின் மொத்தப் பரப்பளவு சுமார் 12 ஏக்கர். இதன் மத்தியில் சுமார் பத்து சென்ட் பரப்பளவில், மூன்று நிலைகளையுடைய கோபுரத்தின் கீழ் கருவறை, அதனைச் சார்ந்த மகாமண்டபம், நால்புறமும் சுற்றுச்சுவர் என அமைந்துள்ளது.
இந்த திருக்கோயிலில் திருத்தேர்த்திருவிழா ஆவணி மாதம் தொடங்கி, ஏழு நாட்களும் ஆவணிமாதம் முதல் புதன்கிழமையில் நடைபெறும் தேர்த்திருவிழாவும்  பல்வேறு இன மக்களால் வெகு விமர்சையாக நடத்தப்படுகிறது. தொடர்ந்து வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் முனிபிடித்தல் உற்சவம் தையால்கல் மலையை சுற்றிவருதல், தோளனூர் தலைவெட்டு பெருமாள் கோயில், அம்மாபாளையம் பச்சையம்மன் கோயிலில் இளைப்பாறுதல் பின் கவுண்டம்பட்டி வழியாக இருளப்பட்டி கோயிலை அடைதல் என இப்பகுதி மக்களிடையே இந்த திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகவும் தனி சிறப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக