வியாழன், 20 அக்டோபர், 2016

தருமபுரி மாவட்டத்தில் ஏரிகள்



தருமபுரி மாவட்டத்தில் ஏரிகள்

2015 சென்னையை புரட்டிப்போட்ட பெருவெள்ளம், இயற்கையைச் சீண்டினால் என்ன நடக்கும் என்ற பாடத்தை சென்னை, கடலூர், காஞ்சிபுரம் மக்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும் உலகுக்கும் சொல்லிவிட்டுச்சென்றுள்ளது. நீர் நிலைகள், கால்வாய்கள் என எங்கும் நீக்கமற நிறைந்துவிட்ட அரசு, தனியார் தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள், கல்விநிலையங்கள், குடியிருப்புகள் என ஆக்ரமிப்புகளால் வளர்ந்தோங்கி நிற்கும் கட்டடங்களால் மறைந்துபோன நீர்நிலைகள் குறித்த கவலையும் நமது பாரம்பரியமான நீர் ஆதாரங்களைப் பேணிப் பாதுக்கக்கவேண்டுறம் என்ற விழிப்புணர்வையும் மக்களிடையே இந்த பெருவெள்ளம் உருவாக்கியுள்ளது என்ற அதன் மறுபக்கத்தையும் நாம் மறுப்பதற்கில்லை.

தமிழ்நாட்டில் ஆறுகளை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் நிலை, தற்போது அண்டை மாநிலங்களுக்கிடையே நடைபெறும் ‘தண்ணீர் அரசியலால் பொய்த்துப் போய்கொண்டிருக்கிறது. அறுபதுகளில் வந்த ‘பசுமை புரட்சி கடந்த 55 ஆண்டுகாலத்தில்  தரையின் மேற்பரப்பு நீரை மட்டுமல்ல, நிலத்தடி நீரையும் அதலபாதளத்திற்குக் கொண்டுசென்றுவிட்டன. அறுபதுகளிலிருந்து கிணற்றுப் பாசனத்தை ஊக்கப்படுத்திய அரசாங்கம், மழைகாலங்களில் பெய்யும் நீரைத் தேக்கி வைக்கும் ஏரிகள், குளங்கள், குட்டைகள் என நீர் ஆதாரங்களைச் சரிவர பராமரிக்காமல் விட்டதன் விளைவாக நிலத்தடி நீர் சேமிப்பு குறைந்துபோனதால் கிணற்றுப்பாசன விவசாயம் ஆழ்துளைக் கிணற்றுப்பாசன விவசாயமாக உருமாறியது. இதன் விளைவாக நிலத்தடி நீர்மட்டம் மிகவும் கீழ்நோக்கிப் போய்விட்டது. இதனால் மக்கள் குடிநீருக்காகப் படும் இன்னல்கள், சிறுகுறு விவசாயிகள் விவசாயத்தை விடுத்து வாழ்வாதாரம் தேடி வேறு வேலைகளுக்காக இடம்பெயரும் சூழல் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

பருவநிலை மாற்றம் குறித்தும் இயற்கை ஆதாரங்களைப் பராமரித்துப் பாதுகாக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் உலகளாவிய அளவில் அரசுகள் இணைந்து கொள்கைகளை உருவாக்கிப் பேசிகொண்டிருக்கும் வேளையில், தமிழ் நாட்டில் வறட்சிக்கு இலக்காகும் மாவட்டங்களுள் ஒன்றாக அனைத்துமக்களாலும் நன்கு அறியப்பட்ட தருமபுரி மாவட்டத்தின் நீர் ஆதாரங்களின் குறிப்பாக ஏரிகளின் தற்போதைய நிலை அதனை மறுஉருவாக்கம் செய்யவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துதலே ‘தருமபுரி மாவட்ட ஏரிகள் என்ற இந்த கட்டுரையின் நோக்கம்.

தமிழ்நாட்டில் சுமார் 39200 ஏரிகள் இருப்பதாக அரசாங்க புள்ளிவிவரம் கூறுகிறது. சுமார் இருபது ஆண்டுகாலமாக ஏரிகள் குளங்கள் தூர்வாரப்படாமல், அதன் நீர்ப்பிடிப்புத்தன்மை குறைந்து, பரப்பளவிலும், கொள்ளளவிலும் குறைந்துகொண்டேபோய், ஆக்கிரமிக்கப்பட்டும் வந்துள்ளது. எண்ணற்ற ஏரிகள் குளங்கள் மறைந்தே போய்விட்டன. இன்று எத்தனை ஏரி குளங்களின் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு வரத்துக்கால்வாய்கள் தூர்வாரப்பட்டு, மதகுகள் சரிசெய்யப்பட்டு, உடைந்த கரைகள் சீர்படுத்தப்பட்டு விவசாயத்திற்கும் குடிநீர்த் தேவைக்கும் உபயோககரமாக உள்ளன? என்ற கேள்வியுடன் உலகமயமாக்கலின் விளைவாக, தண்ணீர் வியாபாரப்பொருளாக மாறி, நீர் ஆதாரங்கள் பெருநிறுவனங்களின் கைகளுக்குச் சென்றுவிட்டதின் இன்றையப் பின்னணியில் இந்தக் கட்டுரையின் முதல்பகுதி “தமிழ்நாட்டில் ஏரிகள் என்பதோடு தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் ஏரிகள்
ஏரிகளின் பணிகளும் அதன் பயன்களும்:
 

ஏரிகள் பொதுவாக நான்கு விதமான பணிகளை ஆற்றுகிறது. அவை:
1.         விவசாயத்திற்குத் தேவையான நீரை வழங்குகிறது.
2.        மண் மற்றும் நீர்வளத்தைப் பாதுகாக்கிறது.
3.        வெள்ளத்தைக் கட்டுபடுத்துகிறது.
4.       வறட்சியை மட்டுபடுத்துதலுடன், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கிறது.
பாரம்பரியமாக, ஏரிகள் உள்ளூர் பாசனத் தேவைகள், உள்ளூர் உயிர்ச்சூழலைப் (Local Eco-system) பாதுகாத்தல் மட்டுமின்றி, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கும் கால்நடைகளுக்கும் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதாகவும் உள்ளது. (உதாரணம்: சென்னை மக்களுக்குக் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் பூண்டி நீர்த்தேக்கம், வீராணம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி முதலானவைகளைச் சொல்லலாம். பல நூற்றாண்டுகளுக்கு முன் வெட்டிய ஏரிகளான இவைகள் இன்றளவும் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரங்களாக இருந்துவருவது கண்கூடு).



வெள்ளத்தைக் கட்டுபடுத்துதல், கடலோரப்பகுதிகளில் உள்ள நன்நீர்நிலைகள் (Fresh water bodies) கடலின் உப்புநீரை உள்விடாமல் தடுத்துப் பாதுகாத்தல், ஏரி, குளங்களில் மீன் மற்றும் வாத்து வளர்ப்பு – ஏரிக்கரைகளில் உள்ள மரங்கள் ஏலம் விடுதல் மூலம் கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு பெருக்கம் மற்றும் வருமானம், நிலத்தடி நீர்மட்டம் உயரச்செய்தல், பல்லுயிர் பன்மத்தைப் பாதுகாத்தல் (Bio-diversity conservation), ஏரிகளில் நீர் இல்லாத காலங்களில் கால்நடைகள் மேய்ச்சலுக்குரிய இடமாகவும், விளைநிலமாகவும், விளையாட்டுத் திடலாகவும், மட்பாண்டங்கள் செய்வோருக்குத் தேவைப்படும் மண் எடுத்துகொள்ளவும், விளைநிலங்களுக்குத் தேவைப்படும்
வண்டல்மண் எடுத்துக்கொள்ளவும் என பலவகையாக ஏரிகள் மற்றும் குளங்கள் உதவிகரமாக இருந்துகொண்டுவருகின்றன. திருவிழாக்கள், உள்ளூர் பண்டிகைகளைக் கொண்டாடும் இடமாகவும் ஏரிகள் உள்ளன. மேலும் ஏரிகள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், நுண் தட்பவெப்பநிலையையும் (Micro climate) உருவாக்கித்தருகிறது.

இந்தியாவின் கிராமப்புற வாழ்க்கை முறையில் சமூக-பண்பாட்டுத் தளத்திலும் (Socio-Cultural) சமூக உயிர்ச்சூழலை சமன்படுத்துவதிலும் (Socio-Ecological Balance) ஏரிகள் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.


உலகின் நீர் வளம் பெற்ற எந்தவொரு பகுதியும் இயல்பாகவே நிலவளம் பெற்றுவிடும். “நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு. மண்ணும் நீரும் இயற்கை நமக்கு அளித்த பெருஞ்செல்வங்களாகும். பயிர் விளைச்சலுக்கு முதல் காரணமாக நாம் குறிப்பிடுவது பயிருக்கு அளிக்கப்படும் நீர், நீரின் அளவு, தன்மை முதலியவைகளைத்தான். வேளான்மையில் மட்டுமின்றி உயிரினங்கள் அனைத்திற்குமே நீர் இன்றியமையாத ஓர் உயிர்ப்பொருளாகும். நிலம், நீர் இரண்டுமே உலகின் மக்கள் மற்றும் இன்னபிற உயிரினங்கள் காலம்காலமாக உயிர்ப்புடன் இருந்து வர உதவுகின்றன.
 
                                                                                                                                           தொடரும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக