திங்கள், 28 ஜனவரி, 2019

அதகப்பாடி

தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி வட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சியின் தலைமையிடத்தின் பெயர் அதகப்பாடி. தருமபுரி நகரிலிருந்து மேற்கே பென்னாகரம் செல்லும் சாலையில் சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த கிராமம். இதன் குக்கிராமங்களாக ஏ. செக்காரப்பட்டி, ஏரிக்கோடி, சின்னகாம்பட்டி, குள்ளம்பட்டி, காட்டூர் மாரியம்மன் கோயில், மரியம்பட்டி ஆகியவைகள் உள்ளன.
அதியமான் ஆட்சி காலத்தில் அதியர்களது படை வீரர்கள் தங்கும் இடமாக இந்த கிராமம் இருந்திருக்கக் கூடும் என்பது ஆய்வாளர்களது கருத்து. “பாடி” என்பதற்கு “படை வீரர்கள் தங்கும் இடம்” என்பது பொருள். இந்த ஊருக்கு அருகே பதிகால் பள்ளம் என்ற பகுதி இருக்கிறது. இங்கு குதிரைகள் இளைப்பாறவும், மேய்வதற்கும் ஏதுவான இடமாக இருப்பதால்,  அதியர்களது படை வீடாக இந்த ஊர் இருந்ததற்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இந்த ஊருக்கு அதகப்பாடி என்று பெயர் வந்திருக்கலாம்.
தகடூரில் (இன்றைய தருமபுரி) பல்வேறு அரசர்களின் ஆட்சிக்காலத்தில் பல்வேறு இடங்களில் போர்கள் நடைபெற்றவண்ணம் இருந்துள்ளன.  எனவே ஆங்காங்கே போர்கள் நடைபெறும் இடங்களில் படைவீரர்கள் தங்கியிருந்த  இடங்கள் யாவும் ஊரின் பெயருடன் சேர்த்து பாடி என்றே வழங்கப்பட்டு வந்துள்ளது. (உதாரணம்: ஆலம்பாடி, ஈச்சம்பாடி, கருங்கல்பாடி, கலப்பம்பாடி, கும்பளப்பாடி, கூத்தப்பாடி, சிந்தல்பாடி,  செங்கப்பாடி, சோழப்பாடி, தரகம்பாடி, மாம்பாடி, மணியம்பாடி, பாப்பம்பாடி, பாடி)
அதியன் நெடுமான் அஞ்சியின் படைத் தலைவனாக இருந்தவன் பெரும்மாக்கன். இவன் இரண்டாம் தகடூர்ப் போரில் சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையின் படையை அதியமான் கோட்டையில் நேருக்குநேர் சந்தித்தவன். இந்த பெரும் மாக்கன் அதகப்பாடியில் பிறந்தவராக இருக்கலாம். இன்றும் இவனது வம்சத்தினரை அதகப்பாடியில்  “பெரிய மாக்கன் வீட்டார்” என்று அழைக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் வம்சத்தில் பிறக்கும் ஆண் குழந்தைக்கு மாக்கன் அன்றும் பெண் குழந்தைக்கு மாக்கி என்றும் பெயர் வைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக