திங்கள், 28 ஜனவரி, 2019

இராசி மணல் திட்டு


ராசி மணல் திட்டு 

தருமபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைக்குட்பட்டப் பகுதியில் உள்ளது இராசி மனல்திட்டு. இது ஏறத்தாழ ஒரு கி.மீ. தொலைவுக்கு காவிரி ஆற்றின் நடுவே அமைந்த இயற்கையான மணல் திட்டு ஆகும். இந்த குட்டித் தீவுப்பகுதி தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. இந்த மணல் திட்டில் காவிரி ஆற்றின் நீரோட்டம் குறைவாக இருக்கும் காலங்களில் இயற்கையாக வளர்ந்து நிற்கும் புல்வெளிகள், பச்சை பசேலென்று காண்பதற்கு குளிர்ச்சியாக இருக்கும். ஒஹேனக்கல், பென்னாகரம், பிலிகுண்டு, அஞ்செட்டி உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பட்டிமாடுகள் என்னும் நாட்டு மாடுகளை வளர்ப்பவர்கள், மேய்ச்சலுக்குத் தேவையான புல்வெளிகள் பரந்து கிடக்கும் இராசிமணல் திட்டிலும் இதனை ஒட்டிய காவிரி ஆற்றின் இரு மருங்கிலும் உள்ள அடர்த்தியான வனப்பகுதி களிலும், தலைமுறைத்தலைமுறையாக கூட்டம் கூட்டமாய் பட்டிமாடுகளை மாதக்கணக்கில் மேய்ப்பது வழக்கம். வனவிலங்குகளும் அதிக அளவில் வரக்கூடிய இடமும் இதுவேயாகும்.

இந்த இராசிமணல் பகுதியில், காவிரி ஆற்றின் குறுக்கே ஓர் அனையைக் கட்டினால், காவிரியில் அதிக அளவில் நீர் வரத்து இருக்கும்  போது, இந்த இடத்தின் மேல்புறம் 42 கி.மீ. மேகதாது வரையிலும், வடக்கே 20 கி.மீ. தூரம் அஞ்செட்டி வரையிலும் இரு பிரிவுகளாக தண்ணீர் சேமிப்பு பகுதிகளாக தேக்கி வைக்க முடியும், சுமார் 80.5 டி.எம்.சி தண்ணீரை இங்கு சேமிக்க முடியும் என்றும், தேவையான நீரைத் தேக்கி வைத்து அதனைக் கொண்டு புனல் மின்சாரம் எடுக்கும் பொருட்டும், அரசால் முடிவெடுக்கப்பட்டு, 1965 ஆம் ஆண்டு அன்றைய நாளில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த திரு. கு. காமராசர் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. அத்துடன் தேவையான கட்டுமானப்பொருட்கள் கூட வந்து இறங்கின. ஆனால், பல்வேறு  காரணங்களினால் அணைக்கட்டுவது நிறுத்தப்பட்டது. இத்திட்டத்தை நிறைவேற்ற பின்னாளில் வந்த அரசுகள், ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக