செவ்வாய், 29 ஜனவரி, 2019

முகம்மது அலி கிளப் சாலை

மௌலானா முகமது அலி ஜவஹர்
 (மிகவும் அறிய புகைப்படம்) 
மௌலானா முகமது அலி, சகோதரர் சௌகத் அலி
மற்றும் அவரது தாயாருடன்  
அன்னாரது நினைவாக இந்திய அரசு
1978 ஆம் ஆண்டு வெளியிட அஞ்சல்தலை 
தருமபுரி மாவட்டத் தலைநகரில் தற்போதுள்ள நகரம் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்து நிலையங்களி
லிருந்து, பேருந்துகள் வெளியே வரும் சாலைக்கு “முகமது அலி கிளப் ரோடு” என்ற பெயரை அப்பகுதியிலுள்ள வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளிலும் தருமபுரி நகராட்சி வைத்துள்ள சாலை பெயர் பலகையிலும் பலர் கவனித்து  இருக்கலாம்.
இந்த சாலையில், ஹாஜி. கே. அகமத் பாஷா சாஹேப் என்பவரால் தொடங்கப்பட்ட மௌலானா முகம்மது அலி கிளப் என்ற இஸ்லாமியர்கள் முன்னேற்ற சங்கமானது இயங்கிவருகிறது. இன்று இந்த சாலையில் இஸ்லாமியர்களின் மசூதியும் உருது பள்ளியும், வணிக வளாகமும், தினசரி  காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட், தருமபுரி  மாவட்டத்தின் தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் முதலானவைகள் உள்ளன.
இந்த இடம் 1952 இல் தருமபுரி சட்டமன்றத் தொகுதியில், சுயேட்சையாக நின்று வெற்றிபெற்ற மறைந்த முன்னால் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். இராஜகோபால் கவுண்டர் தமது இஸ்லாமிய நண்பர்கள் சங்கம் ஆரம்பிக்க இலவசமாக வழங்கியது ஆகும்.
சரி. யார் இந்த முகமது அலி? இந்த சாலைக்கு ஏன் இந்த பெயர் வைக்கப்பட்டது?
மௌலானா முகமது அலி ஜவஹர், உத்தரபிரதேச மாநிலத்தில் நஜிபாபாத் என்ற இடத்தில் அப்துல் அலிகான் என்பாருக்கும் அபாதி பேகம் (1852 – 1924) என்பாருக்கும் 1878 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் நாள் பிறந்தவர். இவரே மூத்தவர். உடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரியுடன் சௌகத் அலி, நவாசிஸ் அலி மற்றும் ஜூல்பிகார் அலி என்ற மூன்று சகோதரர்கள். நவாசிஸ் அலி குழந்தை பருவத்திலேயே இறந்து விட்டார். முகமது அலி  ஐந்து வயது சிறுவனாக இருந்தபோது இவரது தந்தை காலமானார். அப்போது இவரது தாயாருக்கு 30 வயதே ஆகியிருந்தது. முகமது அலியின் தாயார் காந்திஜியின் சுதந்திரப் போராட்ட காலத்தில் ஈடுபட்ட முதல் இஸ்லாமியப் பெண் என்ற பெருமை பெற்றவர். சிறந்த போராளி.
முகமது அலி மற்றும் சௌகத் அலி இருவருக்கும் ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துபோராடி தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தரவேண்டும் என்ற தணியாத தாகம் இருந்தது. இருப்பினும் இவர்களது தாயார் தம் பிள்ளைகள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்ற அக்கறையுடன் இருந்தார். ஆரம்பக் கல்வியை வீட்டிலேயே படித்த இவர்கள் பரெய்லி உயர்நிலைப்பள்ளியில் கல்வியை தொடர்ந்தனர். படிப்பில் கவனம் செலுத்திய முகமது அலி ஜவஹர் தாருல் உலூம் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் பி.ஏ பாடப்பிரிவில் சேர்ந்து முதண்மை மதிப்பெண்கள் எடுத்தோரில் ஒருவராக வெளிவந்தார். தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு, லிங்கன் கல்லூரியில் தற்கால வரலாற்றை பாடமாக எடுத்துப் படித்து எம்.ஏ பட்டம்பெற்றார். பின்னர் தாய்நாடு திரும்பியவுடன் அன்றைய ராம்பூர் மாகாணத்தின் கல்வி இயக்குனராகவும் தொடர்ந்து பரோடா சிவில் சர்வீஸில் இணைந்தும் பணியாற்றினார். 
இவர் ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு அஞ்சாத சிறந்த சமூக செயல்பாட்டாளராகவும், சிறந்த எழுத்தாளராகவும், கவிஞராகவும், பேச்சாளராகவும் விளங்கினார். 1906 ஆம் ஆண்டு டாக்காவில் நடைபெற்ற அனைத்திந்திய முஸ்லிம் லீக் துவக்க நிகழ்வில் கலந்து கொண்டார். பின்னர் 1917 ஆம் ஆண்டு, இஸ்லாமிய தலைவர்கள் அனைவராலும் ஏகமானதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அனைத்திந்திய முஸ்லிம் லீக்கின் தலைவரானார். அன்று முதல் 1928 ஆம் ஆண்டு வரை அதன் தலைவராகத் தொடர்ந்து பணியாற்றினார்.
அன்றைய லண்டனிலிருந்து வெளிவந்த தி டைம்ஸ், தி மான்செஸ்டர் கார்டியன், அப்சர்வர் முதலான ஆங்கிலேயர்களின் செய்தித்தாள்கள் மற்றும் இந்தியப் பத்திரிகைகளிலும் கட்டுரைகள் எழுதிவந்தார். 1911 ஆம் ஆண்டு “தி காம்ரேட்” என்ற ஆங்கில வார இதழை கல்கத்தாவில் ஆரம்பித்தார். இந்த வார இதழ் வெகு விரைவில் பிரபலமானது. இருந்தபோதும், 1913 ஆம் ஆண்டில் ஒரு கட்டுரை வெளியிட்டதற்காக 1914 ஆம் ஆண்டு, அந்த வார இதழை ஆங்கிலேய அரசு தடைசெய்தது. இந்த காலகட்டத்தில் முகமது அலி கல்கத்தாவிலிருந்து டெல்லி வந்தார். 
டெல்லியில் 1913 ஆம் ஆண்டு உருது மொழியில் “ஹம் தர்த்” என்ற நாளிதழைத் தொடங்கி நடத்திவந்தார்.  இதில் ஆங்கிலேய அரசுக்கு எதிராகக் கட்டுரைகள் எழுதியதற்காக நாளிதழ் ஆசிரியராக இருந்த அலி அடிக்கடி சிறைக்குச் செல்லவேண்டியிருந்தது. இந்த காலகட்டத்தில் முகமது அலி, அம்ஜத் பானோ பேகம் என்பாரை திருமணம் செய்து கொண்டார். இவரும் தன் கணவருடன் இணைந்து இந்திய விடுதலைப் போரில்,  களத்தில் இறங்கிப் போராடி வந்தார்.
முகமது அலி அவர்கள், அலிகார் இயக்கத்தில் அடையாளங்காணப்பட்டவர். 1919 ஆம் ஆண்டு இந்தியா தேசிய காங்கிரசில் சேர்ந்தார். 1920 ஆம் ஆண்டு கிலாபத் இயக்கத்திற்காக இங்கிலாந்து அரசிடம் பேச தலைவர்களை தமது தலைமையில் அழைத்துச் சென்றார். பின்னர் இங்கிலாந்திலிருந்து திரும்பியவுடன் அலிகாரில் "ஜாமியா மிலியா இஸ்லாமியா" என்ற கல்வி நிறுவனத்தை ஆரம்பித்தார், பின்னர் இந்த கல்வி நிறுவனம் டெல்லிக்கு இடம்பெயர்ந்தது. தற்போது முதன்மை கல்வி நிறுவனமாகவும் மத்திய பல்கலைக்கழகமாகவும் விளங்கி வருகிறது. 
முகமது அலி 1923 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவாரானார். சில மாதங்களே இவர் அப்பதவியை வகித்தார்.
மிகுந்த போராட்டங்களிடையே மீண்டும் "தி காம்ரேட்" இதழை 1924 ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கினார். இருப்பினும் 1926 அவ்விதழ் தொடர்ந்து நடத்தமுடியாமல் நிறுத்தப்பட்டது.
1928 ஆம் ஆண்டு இந்திய தேசிய முஸ்லிம் இயக்கத்தின் முக்கியத்தலைவர்களான சௌகத் அலி, ஆஜாத் கான், ஹக்கீம் அஜ்மல் கான், முக்தார் அஹமத் அன்சாரி, சையத் ஆடா உல்லா ஷாபுக்காரி முதலானவர்களுடன் பேசி இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் காந்திஜியுடன் இணைந்து ஆங்கிலேய அரசை எதிர்த்து போராட விளைந்தார். இதனால் பல்லாயிரக்கணக்கான இந்துக்களும், இஸ்லாமியர்களும் சுதந்திர வேள்வியில் கலந்துகொண்டனர். 
கிளாபத் கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக, ஆங்கிலே அரசை எதிர்த்த காரணத்தால்கராச்சி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சுமார் இரண்டரை ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்தார், இருப்பினும் தொடர்ந்து ஆங்கிலேய அரசை எதிர்த்துப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். பலமுறை சிறை சென்ற காரணத்தால் சரியான உணவு இன்மை மற்றும் சர்க்கரை நோயினால் இவரது உடல்நிலை நலிவடைந்து வந்தது.
1930-ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் ஆஹாகான் தலைமையில் கலந்து கொண்டு “இந்தியாவிற்கு சுதந்திரம் தாருங்கள் அல்லது என்னை புதைப்பதற்கு இங்கேயே எனக்கு இரண்டு அடி நிலம் தாருங்கள். சுதந்திரம் பெறாமல் நான் அடிமை இந்தியாவிற்குத் திரும்பமாட்டேன்" என்று பேசினார். அன்னாரது கூற்று உண்மையாயிற்று. 1931 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் நாள் லண்டன் மாநகரிலேயே பக்கவாத நோயினால் உயிர் நீத்தார். இவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் இவரது ஆதராவளர்களின் விருப்பப்படி அன்னாரது உடல் ஜெருசலேம் நகரில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்தியாவின் பல இடங்களில், அன்னாரது பெயரில் கல்லூரிகள், பள்ளிகள், பல்கலைக் கழகங்கள், முக்கிய சாலைகள், இஸ்லாமிய ஆய்வு மையங்கள், செய்தித்தாள்கள் உள்ளன. இவரது பெயரில் சிங்கப்பூரில் ஒரு மசூதி உள்ளது. இவரது பெயரில் “மௌலானா முகமது அலி கல்வி விருது” வழங்கப்படுகிறது.
அன்னாரது நினைவாக இந்திய அரசின் அஞ்சல்துறை 1978 ஆம் ஆண்டு ஒரு அஞ்சல்தலை வெளியிட்டு இவரை கௌரவப்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், தெற்கு மும்பையில் ஒரு சாலைக்கு  முகமது அலி சாலை என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் மிகவும் பிரபலமான சாலை “மௌலானா முகமது அலி சாலை (சுருக்கமாக எம்.எம். அலி ரோடு) என்ற பெயரில் உள்ளது.
இதேபோல், இவரது நினைவாக தருமபுரியிலும் ஒரு சாலை இருப்பது,  நமது மாவட்டத்துக்கு பெருமையே ஆகும். இது இந்திய விடுதலைப் போரில் பெரும்பங்காற்றிய ஒருவருக்கு நாம் செலுத்தும் நன்றியும் அஞ்சலியுமே ஆகும்.
இனி இந்த சாலையை நாம் கடக்கும்போது இவர் தேசவிடுதலைக்கு ஆற்றிய பணிகள் நமக்கு நினைவுக்கு வருமல்லவா?
நன்றி: முகமது அலி ஜவஹர் அலி,ராம்பூர் இணையதளம்
            விக்கிபீடியா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக