திங்கள், 28 ஜனவரி, 2019

பன்றிகுத்திப்பட்டான் கல்





தருமபுரி சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பரவலாக அடர்ந்த வனப் பகுதிகள் உள்ளன. இதனால் வன விலங்குகளான காட்டுப்பன்றிகள், யானைகள், புலிகள் நட மாட்டம் இருப்பதால், பயிர்கள் சேதமடை வதும், உயிர்கள் பலியாவதும் இன்றளவும் அதிக அளவில் நடைபெற்ற வண்ணம் உள்ளன.
பழங்காலத் தமிழகத்தில், குறிப்பாக, தருமபுரி மாவட்டத்தில் ஆட்சி செய்த மன்னர்கள், மக்களை அச்சுறுத்தும் வனவிலங்கினங்களை வேட்டையாடி அழிக்க வீரர்களை அனுப்புவது உண்டு. அவ்வாறு செல்லும் வீரர்கள், புலி, காட்டுப்பன்றி முதலான விலங்கினங்களோடு போராடி கொன்றழிப்பர்.  விலங்குகளோடு செய்யும் சண்டையில் சில சமயங்களில் வீரர்கள் வீரமரணம் அடைவர்.. அவ்வாறு இறந்துவிடும் வீரர்களுக்கு, அவர்தம் வீரத்தை பறைசாற்றும் விதமாக புலியை குத்திக்கொல்வது போலவும், பன்றியைக் குத்திக்கொல்வது போலவும் புடைசிற்பமாக நடுகல் எடுப்பது வழக்கம். இது போன்ற நடுகற்கள் தருமபுரி மாவட்டத்தில் ஏராளமாகக் கிடைத்துள்ளன.
நல்லம்பள்ளி வட்டத்தில், ஜருகு செல்லும் வழியில்  ஏலகிரி கிராமத்தில், கி.பி. 15 ஆம் நூற்றாண்டில், விஜயநகர பேரரசு காலத்தில், பன்றியைக் குத்திக் கொல்ல நடந்த சண்டையில் வீரமரணம் அடைந்ததை குறிக்கும் விதமாக ஒரு வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல்தான் பன்றிக் குத்திப்பட்டான் கல்”.(மேலே உள்ள புகைப்படம்) இதேபோல் பல நடுகற்கள் இப்பகுதியில் சாலையோரங்களில் காணமுடியும். மேலும் ஒரு பன்றிக்குத்திப் பட்டான் நடுகல் பாளையம்புதூர் அருகிலும் உள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக