திங்கள், 28 ஜனவரி, 2019

அதியமான் நெடுமிடல்


இன்றைய தமிழகத்தின் தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள வத்தலகுண்டு, பெரியகுளம் ஆகிய பகுதிகள் பாண்டியர்கள் ஆட்சி காலத்தில் “நெடுங்கள நாடு” என்ற பெயரில் பாண்டியநாட்டின் 100 பிரிவுகளில் ஒன்றாக இருந்தது. இந்த நாட்டை சங்க காலத்தில் அதியமான் நெடுமிடல் அஞ்சி என்பான் ஆண்டு வந்தான். இவன் பாண்டிய மன்னன் தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியனின் படைத் தளபதியாகவும் இருந்தான். இவன்  பாண்டியரின் பிரதிநிதியாக படையெடுத்துச் சென்று தகடூர் நாட்டை போரிட்டுக் கைப்பற்றி தகடூரில் நிலையாக ஆட்சி செய்யத் தொடங்கினான். நெடுங்கள நாடே அதியமான் மரபினரின் பூர்வீக இடமாக அறியப்படுகிறது.
இன்றைய தேனி மாவட்டத்தின் தேனி, கம்பம், சின்னமனூர் ஆகிய பகுதிகள் பாண்டியர் காலத்தில் “அள நாடு” என்ற செழிப்பு மிக்க ஒரு நாட்டுப் பிரிவாகத் திகழ்ந்தது. இது பாண்டிய நாட்டின் மேற்கு எல்லையாகவும், சேர நாட்டின் எல்லைபகுதியாகவும் இருந்துள்ளது.
சேரர்களுடன் நடந்த போரில், பாண்டிய நாட்டின் படைத்தலைவனாக இருந்த நெடுமிடல் அஞ்சி இந்த அளநாட்டின் வழியாகச் சென்று சேரரது எல்லைப்படையைத் தாக்கினான். சேரர் படை தோற்று பின் வாங்க, செய்தி அறிந்த சேர மன்னன் கலங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் என்பான் தனது யானைப்படையுடன் வந்து அஞ்சியின் பிழையாவிளையுள் நாட்டை சூறையாடினான். பெருவழி என்றழைக்கப்படும் வைகை ஆற்றுக் கரையோரம் தனது படையை வழிநடத்தி, நெடுங்கள நாட்டை அழித்தான். இந்தப் போரில் நெடுமிடல் அஞ்சி தோல்வி அடைந்தான். இச்செய்தியை பதிற்றுப்பத்து நாலாம் பதிகத்தின் வாயிலாக அறியலாம்.
வட கொங்குநாட்டைக் கைப்பற்றுவதில், பாண்டிய மன்னன் பசும்பூண் பாண்டியனுக்கும், துளு நாட்டின் நன்னர்களுக்கும் பகை இருந்தது. எனவே, துளு நாட்டை அழித்து, வடகொங்கு நாட்டை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில், பசும்பூண் பாண்டியன் துளு நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். இந்த படைக்கு அதியமான் நெடுமிடல் அஞ்சி தலைமையேற்று வழி நடத்திச் சென்றான். பாண்டியன் படையை துளு நாட்டு மன்னன் இரண்டாம் நன்னனின் படைத்தலைவன், மிஞிலி என்பான் பெரும் படையுடன் வந்து பாழி நகரில் எதிர்கொண்டு  போரிட்டான். இந்தப் போரில் நெடுமிடல் தோற்றுவிட, நெடுமிடலை காளிக்கு  உயிர்ப்பலி கொடுத்தான் மிஞிலி. அதிகமான் நெடுமிடல் அஞ்சி துளு நாட்டில் பாழிப் போரில் மரணமடைந்த செய்தியைக் கேட்டு அவன்மேல் வெறுப்புக் கொண்டிருந்த கொங்கர் மகிழ்ச்சி கொண்டாடினார்கள் என்று குறுந்தொகைச் செய்யுள் கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக