திங்கள், 28 ஜனவரி, 2019

தியாகி. எஸ்.எஸ்.வி.கோவிந்தசாமி செட்டியார்


                                  
            தியாகி கோவிந்தசாமி செட்டியார் 
              தாமிரப் பட்டயத்துடன்


அரூர் வட்டத்தில் பிறந்த கோவிந்தசாமி செட்டியார், 1927 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த காந்தியாரை நேரில் சந்தித்து அவரது பரிந்துரையில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானர். இதே ஆண்டில் இவர் பண்டிட் மோதிலால் நேருவுடன் அவரது மனைவி சொரூபராணி அம்மையார், ஜவஹர்லால் நேரு, கமலா நேரு, விஜயலட்சுமி பண்டிட், இந்திராகாந்தி ஆகியோரை அவர்களது இல்லத்தில் சந்தித்து பேசி மகிழும் பெறு பெற்றார். அப்போது மோதிலால் நேரு இல்லத்திற்கு வந்த நேதாஜி அவர்களையும் சந்தித்து மகிழ்ந்தார். பின்னர்  நேதாஜியுடன் கல்கத்தா வரை பயணித்து சுகதேவ் அவர்களையும், சுகதேவுடன் அமிர்தசரஸ் சென்று ராஜகுரு, பகத்சிங் ஆகியோரையும் கண்டுபேசி பழகியவர்.
1927-இல், காந்திஜி தருமபுரி வந்தபோது அவருடன் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.  தருமபுரியில் காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் பொருட்டு  1929 ஆம் ஆண்டு அரூர் தாலுக்கா காங்கிரஸ் கமிட்டியைத் தொடங்கி கட்சிப்பணி களில் ஈடுபட்டார். 1929 ஆம் ஆண்டு பூனாவில் நடைபெற்ற சத்தியாகிரக போராட்டம், 1930-இல் கேரள மாநிலம் கண்ணனூரில் நடைபெற்ற உப்பு சத்யாக்கிரகம், அந்நியத் துணிகள் மறுப்புப் போராட்டம், 1931 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சட்ட மறுப்பு இயக்கம், கோலார் சமஸ்தானக் கிளர்ச்சி, 1940 இல் நடைபெற்ற தனிநபர் சத்தியாகிரகம், ஆங்கிலேய அரசின் தடையை மீறி காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடத்துதல் ஆகிய பல போராட்டங்களில் பங்கேற்றுச் சிறை சென்றவர்.
1942 ஆம் ஆண்டு, ஆங்கிலேயே காவல்துறை, போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்க வைத்திருந்த ஏராளமான கைத்தடிகளுக்கு (லத்திகள்) மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்துக் கொளுத்தியுள்ளார். இதன் காரணமாக பல மாதங்கள் காமாட்சிப்பட்டியில் தலைமறைவு வாழ்க்கை நடத்தியுள்ளார். கிராமந்தோறும் தமது சொந்த செலவிலேயே விடுதலைப் போராட்டக் கூட்டங்கள் நடத்தி, தேசிய விடுதலைப் போரில் பங்கேற்றார்.
1946 ஆம் ஆண்டு அரூரில் வெள்ளம் வந்தபோது நிவாரணப்பணிகளைத் தலைமையேற்று நடத்தினார்.  
1966 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத் தியாகிகள் சங்கத்தை உருவாக்கி, அதன் தலைவராக 18 ஆண்டுகள் இருந்து விடுதலைப் போராட்ட தியாகிகளின் நலனுக்காக உழைத்தவர்.
கலைஞர் கருணாநிதி அமைச்சரவையில் கள்ளுக்கடைகளை மீண்டும் திறந்தபோது அதனை எதிர்த்துச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக