திங்கள், 28 ஜனவரி, 2019

அதியமான்கள்


அதியமான் மரபினர் சங்க காலத்தில் தகடூரைத் (இன்றைய பழைய தருமபுரி) தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள் ஆவர். .
இவர்கள் அன்றைய தமிழ்நாட்டின் பழைய மரபை சேர்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது.  அதியன், அத்திகன், அதிகமான், சத்தியபுத்திரன், சத்தியபுத்திரன் அதியன் என்று பல்வேறு பெயர்களில் குறிக்கப்படுகின்றனர்.
இந்த அதியர்கள் மரபினர் சேர மன்னர்களது கிளைக்குடிகளாக இலக்கியச் சான்றுகள் மற்றும் தொல்லியல் சான்றுகள் மூலமும் அறியப்படுகிறார்கள்.
ஆதாரமாக: இலக்கியச் சான்றுகள்:
·    பணம்பூ மாலை சேரருக்கே உரியது. புற நானூற்றுப் பாடலில் (எண்: 99) அது அதியர்களுக்கும் உரியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
·  கி.பி. பதினாறாம் நூற்றாண்டைச் சார்ந்த கரபுர நாதர் புராணத்தில், அதியனை “சேரலன்” என்றே குறிக்கப்படுகின்றது. 
ஆதாரமாக: தொல்லியல் சான்றுகள்:
கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த அதியர் மரபைச் சேர்ந்த மன்னன் விடுகாதழகிய பெருமாளின் கல்வெட்டுகளில்  (வேலூர் மாவட்டம், திருமலை கல்வெட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், முழுவதனப்பள்ளி கல்வெட்டு,) “வஞ்சியர் குலபதி எழினி” என்றும் “சேர வம்சத்து அதிகைமான் எழினி” என்றும், “சேரமான் பெருமாள்” என்றும் குறிக்கப்பட்டுள்ளான். மேலும், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம்,   லட்டிகம் கல்வெட்டில், சங்ககால சேர அரசர்களது சின்னமான வில்லும் அம்பும் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அதியர் மரபினர், சேரரின் கிளை என்பதும், சிந்துவெளி நாகரிக எழுத்தாய்வு அறிஞரான இரா. மதிவாணன் (பார்க்க: பேரா. இரா. மதிவாணன்), நியூ கினியா தீவுக்கு அருகிலுள்ள சாலமன் தீவில் இயற்கையாக விளைந்த கரும்பினை கி.மு. 2000 ஆண்டு கால அளவில், தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்து பயிரிட்டது அதியஞ்சேரல் என்று கூறுகிறார். சங்க இலக்கியங்களில் கரும்பை முதன் முதலில் சங்க கால தமிழ்நாட்டில் கொண்டுவந்து பயிரிட்டது அதியர் மரபினர் என்றுள்ளது. இதிலிருந்து அதியர்கள் சேரர் கிளைக்குடியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவருகிறது. சங்ககாலத்தில் இவர்களது ஆட்சி எல்லையாக மலையமான் ஆட்சி செய்த திருக்கோவிலூர் நாட்டின் எல்லை வரை இருந்துள்ளது.
பின்னர் பிற்கால சோழருக்குக் கீழ் கி.பி. பணிரெண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, தற்கால ஆந்திரத்தின் சித்தூர், தமிழ்நாட்டின் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம் மற்றும் திருச்செங்கோடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கி ஆட்சி செய்து ள்ளனர்.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வடக்கே மகத நாட்டை ஆண்ட அசோக மன்னார் காலத்தில், அவரால் வெட்டப்பட்ட இரண்டாம் பெரும்பாறை கல்வெட்டில், சேர, சோழ, பாண்டிய மன்னர் களுடன் தமிழ் நாட்டில் ஒருபகுதியை (தகடூர் நாடு) ஆட்சி செய்த அதியர் பெயரும் குறிப்பிடப் பட்டுள்ளதால், கி.மு. மூன்றாம் நூற்றாண் டிலேயே அதியர்கள் ஆட்சி செய்துள்ளனர் என்பது தெரியவருகிறது.
அதியமான் மரபினர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்:
அதியமான் நெடுமான் அஞ்சி - கி.மு.1ஆம் நூற்றாண்டு.
அதியமான் நெடுமிடல்
அதியமான் போகுட்டெழினி
இராசராச அதியமான் கி.பி. 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி, பிற்கால சோழருக்குக் கீழ்,
விடுகாதழகிய பெருமாள், கி.பி. 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 13ஆம் நூற்றாண்டு முற்பகுதி வரை, பிற்கால சோழருக்குக் கீழ்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக