செவ்வாய், 29 ஜனவரி, 2019

தொப்பூர் கணவாய்

தொப்பூர் கணவாய்
தருமபுரி மாவட்டத்தின் தெற்கு எல்லைப் பகுதியாக, தமிழகத்தின் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுள் அமைந்துள்ளது தொப்பூர் கணவாய். இது (என்.ஹெச். எண்:7) பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. தருமபுரி நகரிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் தெற்கிலும் சேலம் மாநகரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் வடக்கு திசையிலும்  அமைந்துள்ளது.  இந்தியாவின் வடக்கே காஷ்மீர் முதல் தெற்கு திசை நோக்கி கன்யாகுமரி வரை  செல்லும் முதன்மையான வணிக வழித்தடமாக இந்த நெடுஞ்சாலை விளங்குகிறது. நாள்தோறும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட கனரக சரக்கு வாகனங்கள் இந்த நெடுஞ்சாலை வழியாகப் பயணிக்கிறது.

இந்த தொப்பூர் கணவாய் பகுதியில், சுமார் மூன்று கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறமும் மலைகளும் காடுகளுமாக காட்சியளிக்கின்றன. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதியில் பயணிக்கும்போது மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். இதற்கு இங்குள்ள அடர்த்தியான காடுகளே காரணம். ஆனால் சாலைப்போக்குவரத்துக்காகவும், பல்வேறு காரணங்களால் இங்குள்ள வனப்பகுதி அழிக்கப்பட்டதாலும் தற்போது அந்த குளிர்ச்சியான சூழ்நிலையை நாம் உணரமுடியவில்லை. இந்த பகுதியில் வன விலங்குகளான, குரங்குகள், மான்கள், காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள், மயில், காட்டு முயல்கள் அதிகம் உள்ளன.
இந்த கணவாயில் அமைக்கப்பட்டுள்ள சாலையானது ஆங்கில “S” வடிவத்தில் அபாயகரமான வளைவாக அமைந்துள்ளதால்  சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன. 1916 ஆம் ஆண்டில் 114 விபத்துகளும், 1917 ஆம் ஆண்டில் 104 விபத்துகளும் 1918 ஆம் ஆண்டில் சுமார் 100 விபத்துகளும் நடைபெற்றுள்ளன. நூற்றுக் கணக்கானோர் விபத்துக்குள்ளாகியுள்ளனர். பலர் இறந்துள்ளனர். இங்குள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ள இடத்தில் சாலையின் ஒருபகுதி மிகவும் இறக்கமாகவும், எதிர் திசையில் மிகவும் மேடாக உள்ளதாலும் கனரக வாகனங்கள் ஓட்டுநர்களது கட்டுப்பாட்டை இழந்து இத்தகைய விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் போக்குவரத்து  கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன் சாலையில் விபத்துக்குள்ளானவர்களுக்கு மருத்துவ உதவிகள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. பெரும்பாலும் வடமாநிலங்களில் இருந்து முதன்முறையாக தொப்பூர் கணவாய் சாலை வழியாக வரும் கனரக வாகன ஓட்டிகளால் இந்த சாலையின் வளைவுகளை அனுமானிக்க முடியாததால் விபத்துகள் ஏற்படுவதாக போக்குவரத்து துறையினர் கூறுகின்றனர். இருப்பினும் இந்த சாலையை சீர்திருத்தம் செய்து விபத்துகள் நடக்காமல் பார்த்துக்கொள்வது போக்குவரத்து துறையினர் பொறுப்பு. 


தொப்பூர் கணவாயிலுள்ள  ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில்.
(இந்த கோயிலின் அருகில்தான் தாமஸ் மன்றோ குளம் அமைந்துள்ளது. பார்க்க: தாமஸ் மன்றோ குளம்)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக