திங்கள், 28 ஜனவரி, 2019

அண்ணிகன் (வீர நுளம்பன்)


தருமபுரி மாவட்ட முத்தானூர் கல்வெட்டும்   கிருஷ்ணகிரி வட்டம் இளவம்பாடி கல்வெட்டும் அண்ணயன் என்ற மன்னனைக் குறிப்பிடுகின்றன.
முத்தானூர்க் கல்வெட்டில் அண்ணயன் வீரநுளம்பனுக்குக் காண்டிரண்டும் சகரயாண்டு 847 இல் கொடுக்கப்பட்டு உள்ளது. இதிலிருந்து  அவன் கி.பி. 933-இல் ஆட்சிக்கு வந்துள்ளான் எனத் தெரிகின்றது. இக் காலம் அண்ணிக நொளம்பன் காலத்துடன் ஒத்துப் போவதால் இந்த அண்ணயன் அண்ணிக நொளம்பன்தான் எனக் கொள்ளலாம். முத்தானூர்க் கல்வெட்டால் அய்யப்ப நுளம்பன் கி.பி. 932 வரை ஆண்டுள்ளான் என மறைமுகமாக ஊகிக்க முடிகின்றது.

முத்தானூர் கல்வெட்டு
 ஸ்வஸ்திஸ்ரீ சகரை யாண்டெண்
ணூற்று நாற்பத்தேழாவது அண்
ணயன் வீர நுளம்பனுக் காண்டி
ரண்டாவது வல்லவரையாந் நாட்டார்
தொறுக் கொள்ள பலான்னையூர்
காமுண்டர் மணியர் ம ணியமனார் 
தொறு மீட்டுப் பட்டார்.

  
இளவம்பாடி கல்வெட்டு
 ஸ்வஸ்திஸ்ரீ இரண்டாவது அண்ணயனார்
ஆளாதிங்க கோவூர் நாட்டு
சிறு புலூர் நாழிபுகனார் மகன் மோடன் ஊர் புழிவலை பட்டான்.

செல்லம்பட்டி கல்வெட்டில் நுளம்பன் மகன் சிவமாரையனுக்கும், கங்காணுமன் மகன் பிருதிபதிக்கும் மறக்குன்று என்னும் இடத்தில் போர் நிகழ்ந்ததாக குறிப்பிடப்படுகின்றது. இங்கு குறிக்கப்படும் நுளம்பன் அய்யப்பதேவன் ஆவான். இவன் மகன் சிவமாரையன் என குறிக்கப்பட்டு உள்ளது.  அய்யப்பனுக்கு அண்ணிகன், திலிப்பரசர் என இரு மகன்கள் இருந்ததாக ஹேமாவதி கல்வெட்டு தெரிவிக்கின்றது. ஆதலால் சிவமாரையன் என்ற பெயர் அண்ணிகன், திலிப்பரசர் ஆகிய இருவருள் எவருக்கேனும் மாற்றுப் பெயராக இருந்திருக்கலாம் அல்லது அப்பெயரில் இன்னொரு மகன் இருந்திருக்கலாம் என உய்த்துணர முடிகின்றது.

செல்லம்பட்டி கல்வெட்டு
 ஸ்வஸ்திஸ்ரீ சகரயா(ண்)டெண்ணூற்றிருபத் திரண்டாவது ஆதித்தன் மகரத்திலிற்க ஐயப்பதேவன் னிராச்சியம் மாளக் கங்காணூமன்
மகன் பிருதிபதியும் நுளம்பன்  மகன்  சிவமாரைய்யனும் மறவ குன்றில் வெறிந்த ஞான்று தகடூருடைய மாவலி வாணவராயரடியான் கூடல் மாணிக்கன் சிவமாரைய்யனுக்காய் எறிந்து
பட்டா ரவர் பெரியம் மகன் மாதேவன் னிக்கல்லு நடுவித்தான் ஸ்ரீ மதியுளி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக